ராம் and லீலா – விமர்சனம்!

ஜோ, ஆண்பாவம் பொல்லாதது படங்களில் வெற்றிக்குப் பிறகு ரியோ ராஜ் நடித்திருக்கும் திரைப்படம் “ராம் அண்ட் லீலா”. அறிமுக இயக்குநர் ராம்சந்திரன் கண்ணன் இயக்கியிருக்கும் இந்த படத்தில் அறிமுக நடிகை வர்திகா நாயகியாக நடித்துள்ளார். அங்கித் மேனன் இசையமைத்துள்ளார். ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் தயாரித்துள்ள இந்த படம் எப்படி இருக்கு? என்பதை இந்த விமர்சனத்தில் பார்க்கலாம்.

படத்தின் கதைப்படி, 30களில் இருக்கும் நாயகன் ரியோ ராஜூக்கு திருமணம் ஆகாமல் ஒரு பெண் கிடைக்காமல் இருக்க அவருக்கு எப்படியாவது திருமணம் செய்து வைக்க முயற்சிக்கிறார்கள் அவரது பெற்றோர். ஆனால் எல்லா பெண்களுமே அவரை ரிஜெக்ட் மட்டுமே செய்கிறார்கள். அந்த சூழ்நிலையில் நாயகி வர்திகாவை அவர் சந்திக்க, அவர் ரியோ ராஜூக்கு ஓகே சொல்கிறார். ஆனாலும் 6 மணிக்கு மேல் ரியோவை சந்திக்க மறுக்கிறார். ஆரம்பத்தில் இதை ஏற்றுக் கொள்ளும் ரியோவுக்கு ஒரு கட்டத்தில் ஏன் அவர் 6 மணிக்கு மேல் சந்திக்க மறுக்கிறார் என்ற சந்தேகம் மேலோங்குகிறது. நாயகியின் வீட்டுக்கே சென்று கோபத்துடன் அதை கேட்கிறார். நாயகியின் குடும்பமே ஒரு அதிர்ச்சிகரமான உண்மையை சொல்ல, அதைக் கேட்டு ரியோ அதிர்ச்சியும், வேதனையும் அடைகிறார். அந்த உண்மை என்ன? அவர் காதல் என்ன ஆனது? அவருக்கு திருமணம் நடந்ததா? என்பதே மீதிக்கதை.

நாயகன் ரியோ ராஜ். அவருக்கே உரித்தான ஸ்டைலில் ஸ்கோர் செய்யும் இன்னொரு வாய்ப்பு இந்த படத்திலும் அமைந்திருக்கிறது. திருமணத்துக்கு ஏங்கும் 30+ வயது இளைஞனாக, காதல் அமைந்தும் ஒரு சிக்கல் இருக்க அதை ஏற்றுக் கொள்ளவும் முடியாமல், விலகிப் போகவும் முடியாமல் தவிக்கும் காட்சிகளில் அதகளப்படுத்துகிறார். நாயகி வர்திகா. அழகுப் பதுமையாக தோன்றியிருக்கிறார். அந்த உண்மையை வெளிப்படுத்தும் காட்சிகளிலும் அதற்குப் பின் வரும் காட்சிகளிலும் காட்சியின் தன்மையை உணர்ந்து நடித்துள்ளார்.

நாயகனின் தந்தையாக சேத்தன் வழக்கம் போல அசத்துகிறார். முனிஷ்காந்த் சில காட்சிகளே வந்தாலும் காமெடியில் சிரிக்க வைக்கிறார். பாலாஜி தியாகராஜன் முக்கியமான கதாபாத்திரத்தில் வந்து சர்ப்ரைஸ் செய்கிறார். மாகாபா ஆனந்த், மாளவிகா அவினாஷ், தீபா வெங்கட், சூப்பர் சுப்பராயன், தாஃபியா அபு, காக்கா ராதாகிருஷ்ணன், கவின் என மற்ற நடிகர்கள் அனைவருமே நல்ல பங்களிப்பு.

அங்கித் மேனன் இசையில் பாடல்கள் மனதை வருடுகின்றன. பின்னணி இசையிலும் படத்துக்கு வலு சேர்க்கிறார். மல்லிகார்ஜூன் ஒளிப்பதிவு படத்தை கலர்ஃபுல்லாக காட்டி ரசிக்க வைக்கிறது. Flat எனப்படும் லார்ஜ் ஃபார்மேட்டில் படத்தை திரையில் கொடுக்க நினைத்தது ஏன் என்ற கேள்வி எழுகிறது.

இயக்குனர் ராமச்சந்திரன் கண்ணன் படத்தின் தலைப்பிலேயே சொல்ல வந்த கதையை உணர்த்தியிருக்கிறார். முதலில் வைத்த தலைப்பும் சரி, இப்போதைய ராம் அண்ட் லீலா என்ற தலைப்பும் சரி, ரெண்டுமே கச்சிதம். இப்படி ஒரு காதல் கதையை சொல்ல அவர் எடுத்த முயற்சியும், கான்செப்டும் பாராட்டுக்குரியது. நல்ல நடிகர்கள் தேர்வும், தொழில்நுட்ப விஷயங்களும் அதை மேலும் தரமாக்குகிறது. ஆனாலும் திரைக்கதை மற்றும் Execution-ல் இன்னும் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால் இன்னும் சிறப்பான ஒரு படமாக மாறியிருக்கும் என்பதே உண்மை. மொத்தத்தில் நல்ல ஒரு சிந்தனை, ஆனால் திரையில் ஓகேவாக வந்திருக்கும் ஒரு படம். ஒரு முறை பார்க்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *