இன்சிடியஸ் வரிசை திரைப்படங்கள் மிகப்பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றவை. ஒவ்வொரு பாகமும் வெளியாகும்போது ரசிகர்கள் உற்சாகத்துடன் திரையரங்குகளில் கண்டு களிப்பது வழக்கம். லீ வானல் மற்றும் ஜேம்ஸ் வான் ஆகியோரால் உருவாக்கப்பட்ட இந்த புகழ்பெற்ற திகில் திரைப்பட வரிசை, இன்சிடியஸ் (2010) படத்துடன் தொடங்கி, இன்சிடியஸ்: சாப்டர் 2 (2013), இன்சிடியஸ்: சாப்டர் 3 (2015) என தொடர்ந்து, பின்னர் இன்சிடியஸ்: த லாஸ்ட் கீ (2018) மற்றும் இன்சிடியஸ்: த ரெட் டோர் (2023) ஆகிய இரண்டு தொடர் படங்களுடன் தொடர்ந்தது. தற்போது சோனி பிக்சர்ஸ் வெளியிட்டிருக்கும் புதிய படம் தான் “இன்சிடியஸ்: அவுட் ஆஃப் த ஃபர்தர்”. படம் எப்படி இருக்கு? என்பதை இந்த விமர்சனத்தில் பார்க்கலாம்.
படத்தின் கதைப்படி, ‘த ஃபர்தர்’ எனும் ஆவி உலகிற்குள் பயணித்து, தொலைந்து போன ஆன்மாக்களை மீட்டு, அவற்றுடன் தொடர்பு கொண்டு இந்த உலகிற்கு திரும்பக் கொண்டு வரும் ஆற்றலைப் பெற்ற நாயகியை சுற்றி நகர்கிறது கதை. தன் மகளை தங்களது மூதாதையர் வீட்டில் வளர்க்கும்போது அவள் தனது சிறப்பு ஆற்றலை உணர்கிறாள்! ஆனால் விரைவிலேயே, தான் திரும்பக் கொண்டு வரும் இறந்த ஆன்மாக்களின் உண்மையான தன்மையை அவள் அறிந்து கொள்கிறாள். அப்போது சில தீய சக்திகள் அவளைத் துரத்தத் தொடங்க, அந்த ஆன்மாக்கள் அவளுடைய ஆற்றலை பயன்படுத்தி இந்த உலகத்துக்குள் நுழைய முயற்சி செய்யும்போது அதை முறியடித்தாரா நாயகி? ரெட் டோர் என்ன செய்யும்? என்பதை சொல்வதே மீதிக்கதை.
நடிகர்களை பொறுத்தவரை நாயகி அமீலியா ஈவ் அவரது கதாபாத்திரத்தை உணர்ந்து மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார். அவரது புத்திசாலித்தனத்தை உபயோகித்து வெற்றி பெறும் காட்சிகளில் அசத்துகிறார். பிராண்டன் பெரியா, மேசி ரிச்சர்ட்சன்-செல்லர்ஸ், லின் ஷே, லாரா கார்டன், ஐலண்ட் ஆஸ்டின், சார்லி பெண்டன் உள்ளிட்ட மற்ற நடிகர்களும் படத்துக்கு வலு சேர்க்கிறார்கள்.
டேவ் கார்பெட் ஒளிப்பதிவு அந்த திகில் உணர்வை அப்படியே நமக்கு கடத்துகிறது. முந்தைய 5 படங்களுக்கும் இசையமைத்த ஜோசப் பிஷாரா இந்த படத்துக்கும் இசையமைத்திருக்கிறார். மிக நேர்த்தியான அதே சமயம் படத்தின் தரத்தையும் உயர்த்துகிறார். படத்தின் கிராஃபிக்ஸ் காட்சிகளின் பங்கு அலாதியானது.
கதை, திரைக்கதை எழுதி இயக்கியிருக்கிறார் ஜேக்கப் சேஸ். ஆரம்ப காட்சிகளிலேயே கதைக்குள் நம்மை அழைத்துச் செல்கிறார். கதை நடக்கும் இடத்தில் நாமும் கதாபாத்திரங்களுடன் பயணிக்கும் உணர்வை தந்திருக்கிறார். கதையை புரிந்து கொள்ளும் விதம் திரைக்கதையை எழுதியதும், திகில் மற்றும் எமோஷன் என அத்தனை உணர்வுகளையும் நமக்கு கடத்தியதிலேயே வெற்றியும் பெற்றிருக்கிறார். மொத்தத்தில் இன்சிடியஸ் ரசிகர்களுக்கு விருந்து, முதன் முறை இன்சிடியஸ் பார்ப்போரும் ரசிக்கலாம்.

