இயக்குநர் சஜோ சுந்தர் இயக்கத்தில், ‘விஜய் டிவி புகழ்’ புகழ், பிரக்யா நயன், ரவி மரியா மற்றும் வின்சென்ட் அசோகன் ஆகியோர் நடிப்பில் வெளியாகியிருக்கும் புதிய டார்க் காமெடி திரைப்படம் ‘4 இடியட்ஸ்’. லக்ஷ்மி மூவி மேக்கர்ஸ் சார்பில் அந்த நிறுவனத்தின் வாரிசுகள் இணைந்து தயாரித்துள்ள இந்த படம் வெற்றிப்படமாக அமைந்ததா? ரசிகர்களை திருப்திப்படுத்தியதா? பார்க்கலாம்.
படத்தின் கதைப்படி, சின்ன சின்ன திருட்டுக்களில் ஈடுபட்டு வாழ்க்கையை ஓட்டும் புகழ், அஸ்வின், இந்திரன், திடியன் (கிங், குயின், ஜாக், ஏஸ்) ஆகிய நால்வரும் தங்களை மிகவும் புத்திசாலி என்று நினைத்துக் கொண்டு, முட்டாள்தனமாக செயல்படுபவர்கள். இந்த நான்கு பேரும் ஒரு வீட்டிற்குள் கொள்ளையடிக்க செல்கிறார்கள். அங்கு அவர்கள் எதிர்பாராத விதமாக மாட்டிக் கொள்கிறார்கள். அந்த வீட்டில் இருக்கும் ரவி மரியா அவரின் பாஸ் டாக்டர் வின்செண்ட் அசோகனின் தீவிர விசுவாசி. அந்த வீட்டிற்குள் வருபவர்களை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு பின் அவர்களின் உடல் உறுப்புகளை திருடி விற்கிறார்கள். மாட்டிக் கொண்ட அந்த நால்வரும் அந்த வீட்டில் இருந்து தப்பித்தார்களா? எப்படி தப்பிக்கிறார்கள்? என்பதே மீதிக்கதை.
நாயகன் புகழ். 4 நண்பர்களின் அதிகம் புத்திசாலியானவர். அவர்களை வழிநடத்துபவர். அவர் அடிக்கும் கமெண்டுகள் ரசிக்க வைக்கிறது. அவரது நண்பர்களாக வரும் அஸ்வின், திடியன், இந்திரன் ஆகியோரும் அவரவர் கதாபாத்திரத்தை உணர்ந்து காமெடியிலும் ஸ்கோர் செய்கிறார்கள். அந்த வீட்டில் மாட்டிக் கொண்டு பயத்தில் முழிக்கும்போது நம்மையே சிரிக்கவும் வைக்கிறார்கள்.
அந்த வீட்டில் இவர்களை அடைத்து வைக்கும் ரவி மரியா காட்சிக்கு காட்சி ஒரு புது கெட்டப்பில் வந்து கெட்டப் மூலமாகவே நம்மை சிரிக்க வைக்கிறார். இவரை சமாளிக்க முடியாமல் நால்வரும் திணறும் காட்சிகள் நிச்சயம் சிரிப்பை வரவழைக்கும். வின்செண்ட் அசோகன் வழக்கம் போல ஒரு படித்த, ஸ்டைலிஷ் வில்லனாக கெத்து காட்டுகிறார். நாயகி பிரக்யா நயன் சின்ன வேடம் என்றாலும் பொருத்தமான தேர்வு. நன்றாக நடிக்கவும் செய்திருக்கிறார்.
யு.கே.செந்தில் குமார் ஒளிப்பதிவில் என்ன தான் கதை ஒரே வீட்டை சுற்றியே நகர்ந்தாலும் பெரும்பாலும் அலுப்பு தட்டாத வகையில் காட்சிகளை அமைத்து படம் பிடித்திருக்கிறார். சுபாஷ் முனிரத்னம் இசையில் பாடல்கள் ஒகே. பின்னணி இசையும் காமெடி படத்துக்கான தன்மையை பிரதிபலிக்கிறது.
இயக்குனர் சஜோ சுந்தர் முருகேசன். குறைந்த பட்ஜெட்டில் ஒரே வீட்டிற்குள் கதை நடக்கும் ஒரு படத்தை எடுக்க மேற்கொண்ட முயற்சி பாராட்டுக்குரியது. பெரும்பாலான கதைக்களம் ஒரே வீட்டிற்குள் நகர்ந்தாலும் அவர்கள் தப்பிக்க முயற்சிக்கும் அடுத்தடுத்த காட்சிகளை இயக்குநர் சுவாரசியமாக நகர்த்தியுள்ளார். விஜய் டிவி புகழ், ரவி மரியா உட்பட நடிகர்க்ளின் பலத்தை அறிந்து அவர்களை பயன்படுத்தியிருப்பதும் சிறப்பு. படத்தில் ஆங்காங்கே சில லாஜிக் குறைபாடுகள் இருந்தாலும், ஒரு நல்ல மெசேஜுடன் பார்த்து சிரித்து விட்டு வரக்கூடிய ஒரு காமெடி படமாக அமைந்திருக்கிறது இந்த ‘4 இடியட்ஸ்’.

