I’m Game – விமர்சனம்!

மலையாளத்தில் ஆர்டிஎக்ஸ் படத்தை இயக்கிய பிரபல இயக்குனர் நஹாஸ் ஹிதாயத், துல்கர் சல்மான் உடன் கைகோர்க்க மிக பிரமாண்டமாக உருவாகியிருக்கும் திரைப்படம் தான் ‘ஐ அம் கேம்’. ஒரு ஃபேண்டஸி ஆக்ஷன் திரைப்படம் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளுடன் வெளியாகி இருக்கும் இந்த படம் ஹாலிவுட் திரைப்பட பாணியில் உருவாகியுள்ளது. படம் எப்படி இருக்கு? என்பதை இந்த விமர்சனத்தில் பார்க்கலாம்.

படத்தின் கதைப்படி, விளையாட்டுக்கு அடிமையாகி சூதாட்டமே வாழ்க்கை என்று வாழும் துல்கர் சல்மான், சூதாட்டத்தில் பெரும் பணத்தை இழக்கிறார். கந்து வட்டிக்காரனிடம் கடனும் வாங்கி அதையும் சூதாட்டத்தில் இழக்கிறார். கடனை அடைக்க அவரது அம்மா கொடுத்த 60 லட்சம் பணத்தையும் சூதாட்டத்தில் இழந்து வெறுப்பில் இருக்கும் அவர் அந்த பணத்தை பிடுங்கிக் கொண்டு தப்பிக்கும்போது விபத்தில் சிக்குகிறார். அந்த விபத்தில் வலது கையை இழக்கிறார். நல்ல வேளையாக அவருக்கு டோனர் கிடைக்க மற்றொரு நபரின் கை மாற்று அறுவை சிகிச்சை மூலம் பொருத்தப்படுகிறது. ஆனால் அந்த கை கொஞ்சம் கட்டுப்பாடு இல்லாமல் விசித்திரமான மற்றும் அமானுஷ்யமான சில சம்பவங்களை செய்கிறது, அதற்கான பின்னணி என்ன? அதனால் ஏற்படும் குழப்பங்கள் என்ன? துல்கர் சல்மான் என்ன செய்தார்? என்பதே மீதிக்கதை.

படத்துக்குப் படம் வேறு மொழி, வேறு ஒரு வித்தியாசமான கதைக்களம் என படங்களை கொடுக்கும் துல்கர் சல்மான் இந்த முறை மலையாளத்தில் ஒரு பிரமாண்டமான ஃபேண்டஸி ஆக்ஷன் திரில்லர் படத்தை தந்திருக்கிறார். ஒற்றை ஆளாக ஒட்டுமொத்த படத்தையும் தாங்கிப் பிடித்துள்ளார். அவருக்கு பொருத்தப்படும் புதிய கை கட்டுப்பாட்டை இழந்து அவரைப் பாடாய் படுத்தும் காட்சிகளிலும், பேண்ட் பாக்கெட்டில் கையை விட்டுக் கொண்டு ஸ்டைலாக சண்டை போடும் காட்சி உட்பட அனைத்து சண்டைக் காட்சிகளில் அவரது நடிப்பு அற்புதம்.

கதாநாயகி காயடு லோஹர். கொஞ்சம் சின்ன கதாபாத்திரமாக இருந்தாலும் அவரது அழகால் நம்மை சுண்டி இழுக்கிறார். முக்கியமான கதாபாத்திரத்தில் அந்தோணி வர்கீஸ் பெப்பே அவருக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்துள்ளார். கதிர் கிளைமாக்ஸ் காட்சியில் ஸ்கோர் செய்கிறார். மிரட்டல் வில்லனாக மிஷ்கின் அவரது மிகைப்படுத்தட்ட நடிப்பால் கதையின் ஓட்டத்திற்கு பலம் சேர்த்துள்ளார். சம்யுக்தா விஸ்வநாதன் கையறு நிலையில் இருக்கும் இளம் பெண்ணாக நல்ல நடிப்பை பதிவு செய்துள்ளார்.

ஜிம்ஷி காலித்தின் ஒளிப்பதிவு படத்தின் ஆகப்பெரும் பலம். ஹைதரபாத்தின் பிரமாண்டங்களையும், கிரிக்கெட் காட்சிகளை காட்டிய விதமும் மிக அருமை. ஜொலிக்கும் வண்ண விளக்குகள் மூலம் படத்தை மிக அழகாக திரையில் காட்டியிருக்கிறார். ஜேக்ஸ் பிஜாயின் பின்னணி இசையில் வழக்கம் போல தெறிக்க விட்டிருக்கிறார். ஆக்ஷன் காட்சிகளில் எல்லாம் அவரின் பங்கு அலாதியானது.

இயக்குநர் நஹாஸ் ஹிதாயத். முதல் படத்தில் மிகச் சிறப்பான ஆக்ஷன் விருந்து படைத்தவர் இந்த படத்தில் கடந்த சில ஆண்டுகளாக தேசத்தையே அடிமையாக்கி வைத்திருந்த சூதாட்டத்தின் பின்னணியில் ஒரு கதையை சொல்லியிருக்கிறார். கூடவே ஒரு ஃபேண்டசி விஷயத்தை படத்துக்குள் கொண்டு வந்தது அருமை. முதல் பாதி முழுக்க திரில்லர் பாணியில் விறுவிறுப்பாகவும், புதுமையாகவும் கொண்டு செல்கிறார். இரண்டாம் பாதியில் எமோஷன் கலந்த ஒரு பழிவாங்கும் ஆக்ஷன் கதையாக வேறு ரூட்டுக்கு மாற்றுகிறார். தொழில்நுட்ப நேர்த்தியும், பிரமாண்டமும், நடிகர்கள் பட்டாளமும் கொண்டு ஒரு நல்ல ஆக்ஷன் த்ரில்லர் படத்தை ரசிகர்களுக்கு தந்திருக்கிறார் நஹாஸ் ஹிதாயத். நிச்சயம் ஒரு முறை பார்க்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *