கோழிக்கோட்டைச் சேர்ந்த 7 வயது சுற்றுச்சூழல் ஆர்வலரான ரூஹி மொஹஸ்ஸாப், ஐக்கிய நாடுகள் சபையின் உலகிலேயே இளவயது உரையாளர், இளவயது சுற்றுச்சூழல் ஆர்வலர் மற்றும் காலநிலை நடவடிக்கை செயற்பாட்டாளர் என்ற சிறப்புகளைப் பெற்றுள்ளார். இவர் திருவனந்தபுரத்தில் உள்ள லோக் பவனில் இந்தியாவின் மாண்புமிகு குடியரசுத் துணைத் தலைவர் சி. பி. ராதாகிருஷ்ணன் அவர்களை சந்தித்தார்.
மாண்புமிகு குடியரசுத் துணைத் தலைவர் அவர்கள் ரூஹியை அன்புடன் வரவேற்றார். மரங்களைப் பாதுகாத்தல், காகிதத்தைச் சேமித்தல், மறுசுழற்சி, காலநிலை மீதான அக்கறை மற்றும் குழந்தைகளின் சுற்றுச்சூழல் செயல்பாடுகளை ஊக்குவிக்கும் அவரது முயற்சிகள் குறித்து மிகுந்த ஆர்வத்துடன் கேட்டறிந்தார். ரூஹி தனது ’காகிதத்தைச் சேமிப்போம்! மரங்களைப் பாதுகாப்போம்!! பூமியைக் காப்போம்!!! (SAVE PAPER • SAVE TREES • SAVE EARTH)’ என்ற செய்தியை அவரிடம் எடுத்துரைத்ததுடன், குழந்தைகள் மற்றும் பள்ளிகள் பயன்படுத்திய காகிதங்களைச் சேகரித்து மறுசுழற்சி செய்ய ஊக்குவிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள ’ரூஹியின் பேப்பர் பேங்க்’ குறித்த தனது தொலைநோக்குப் பார்வையையும் பகிர்ந்துகொண்டார்.
குடியரசுத் துணைத் தலைவர் அவர்கள் ரூஹிக்கு அன்புடன் சாக்லேட்டுகளை வழங்கியதுடன், அவரது முயற்சியைப் பாராட்டி,“மனிதகுலத்தின் மீதான உங்களது அக்கறை அசாதாரணமானது. இறைவன் உங்களை ஆசீர்வதிக்கட்டும்! எப்போதும் நல்ல சிந்தனையுடன் தொடர்ந்து செயல்படுங்கள்” என்று தனது கையெழுத்துடன் பாராட்டு செய்தியைப் பதிவு செய்தார். மேலும், ரூஹி வழங்கிய மறுசுழற்சி செய்யப்பட்ட காகிதத்தால் தயாரிக்கப்பட்ட குறிப்பேட்டிலும் அவர் கையெழுத்திட்டார். ரூஹி வழங்கிய செடி தொட்டியையும், நேபாள மக்கள் மீதான அக்கறை மற்றும் ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் அவர் வரைந்த ஓவியத்தையும் குடியரசுத் துணைத் தலைவர் அவர்கள் அன்புடன் ஏற்றுக்கொண்டார்.
நேபாளத்தில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக குழந்தைகள், மரங்கள் மற்றும் சமூகம் எதிர்கொண்ட பாதிப்புகளால் ஆழமாகப் பாதிக்கப்பட்ட ரூஹி, தனது அக்கறையை செயல்பாடாக மாற்றும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளார். பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்று, அங்குள்ள குழந்தைகளுக்கு ஆதரவளித்து, மரங்களை நடுதல் மற்றும் அவற்றைப் பாதுகாப்பதில் பங்கேற்க வேண்டும் என்பதே ரூஹியின் விருப்பமாக உள்ளது. அக்கறை, மறுசீரமைப்பு மற்றும் நம்பிக்கையை தனது செயல்பாடுகள் மூலம் எடுத்துச் செல்ல அவர் விரும்புகிறார்.
ரூஹியின் தொலைநோக்குப் பார்வை தற்போது மரங்களைப் பாதுகாப்பதைத் தாண்டி, குழந்தைகள் முன்னெடுக்கும் காலநிலை மீதான அக்கறை, சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் அமைதி ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு இயக்கமாக விரிவடைந்து வருகிறது. காடுகள், நீர், பல்லுயிர் வளம், பொறுப்பான நுகர்வு மற்றும் மனிதகுலம் அனைவருக்கும் பொதுவான பூமியின் வளங்களைப் பாதுகாப்பது ஆகியவை இந்த இயக்கத்தின் முக்கிய நோக்கங்களாக உள்ளன. மனிதகுலம் அமைதியுடன் பகிர்ந்து கொள்ள வேண்டிய வளங்களைப் பாதுகாக்க வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த குழந்தைகள் ஒன்றிணைந்து செயல்பட முடியுமா என்பதே அவர் சொல்லவரும் செய்தி.
தி சில்ட்ரன் மூவ்மெண்ட் பார் கிளைமேட் கம்பேசன் பவுண்டேஷன் மூலம் ட்ரீ பேங்க் நர்சரிஸ், ரூஹியின் பேப்பர் பேங்க் உள்ளிட்ட பல்வேறு முயற்சிகளை உருவாக்க ரூஹி திட்டமிட்டுள்ளார். நீண்டகால நோக்கமாக, உலகின் 195 நாடுகளைச் சேர்ந்த குழந்தைகளிடையே சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்பை ஏற்படுத்துவதே அவரது கனவாகும். தான் ஒரு குழந்தை என்றாலும், ஒவ்வொரு குழந்தையும் தாய் பூமியைப் பாதுகாக்க உதவ முடியும் என்று தான் நம்புவதாக ரூஹி தெரிவிக்கிறார்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகள், தலைமுறைகளையும் நாடுகளின் எல்லைகளையும் கடந்து ஒத்துழைப்பு, அக்கறை மற்றும் அமைதிக்கான பாதையாக அமைய முடியும் என்று ரூஹி நம்புகிறார். அவரது கனவு எளிமையானது: “காகிதத்தைச் சேமிப்பதும், மரங்களைப் பாதுகாப்பதும் ஒவ்வொரு குழந்தையும், ஒவ்வொரு நிறுவனமும், ஒவ்வொரு குடிமகனும் பகிர்ந்து கொள்ள வேண்டிய பொறுப்பாக மாற வேண்டும் என்பதே எனது கனவு.”
மாண்புமிகு குடியரசுத் துணைத் தலைவருடனான இந்த சந்திப்பு, தனது செய்தியை ஒரு குழந்தையிடமிருந்து கோடிக்கணக்கான குழந்தைகளிடம் கொண்டு செல்லவும், ஒரு சிறிய செயலிலிருந்து தாய் பூமிக்கான மிகப்பெரிய இயக்கமாக மாற்றவும் ரூஹியின் உறுதியை மேலும் வலுப்படுத்தியுள்ளது. ஒரு குழந்தையின் குரல் கேட்கப்படும்போது, ஒரு கனவு இயக்கமாக மாறும் என்கிறார் ரூஹி.
காகிதத்தைச் சேமிப்போம்! மரங்களைப் பாதுகாப்போம்!! பூமியைக் காப்போம்!!!

