ஏன் என்னை ஏதோ செய்தாய் – விமர்சனம்!

ஆண்டனிஸ் அட்லியர் தயாரிப்பில் முற்றிலும் புதுமுகங்கள் மற்றும் வளர்ந்து வரும் கலைஞர்களின் பங்களிப்பில் உருவாகியிருக்கு ஒரு காதல் திரைப்படம் தான் ‘ஏன் என்னை ஏதோ செய்தாய்’. இன்றைய இளைய தலைமுறையினர் எதிர்கொள்ளும் வாழ்வியல் சிக்கல்களை மையமாக வைத்து ஒரு தீவிரமான, அழுத்தமான, ஆழமான காதல் கதையாக உருவாகியுள்ள இந்த படத்தை ஆண்டனி எழுதி இயக்கியுள்ளதோடு நாயகனாகவும் நடித்திருக்கிறார். படம் எப்படி இருக்கு? என்பதை இந்த விமர்சனத்தில் பார்க்கலாம்.

படத்தின் கதைப்படி, சிறு வயதில் இருந்தே வாழ்க்கையின் ஏமாற்றங்கள், தாய், தந்தை அன்பு கிடைக்காமல் ஏங்கும் தனிமை மற்றும் போதைப்பொருள் பழக்கத்தினால் உளவியல் தாக்கத்துக்கு உள்ளான நாயகன் ஆண்டனியின் வாழக்கையை பேசும் படம் தான் இது. குடி, சிகரெட் என இருகும் நாயகன் விலைமாதுவை வரவழைக்க, அப்படி வந்த நாயகியின் மேல் ஈர்ப்பு கொள்கிறார். பின் அடிக்கடி அவரை சந்திக்க அது காதலாகவும் மாறுகிறது. ஒரு கட்டத்தில் திருமணம் செய்து கொள்ளவும் முடிவெடுக்கிறார். அந்த சூழலில் சில பிரச்சினைகளால் இருவரும் பிரிந்து வாழ்கிறார்கள். அப்படி பிரிந்த இந்த ஜோடி மீண்டும் சேர்ந்ததா? நாயகி ஏன் விலைமாது ஆனார்? நாயகன் ஏன் குடிக்கு அடிமையானார்? இவர்கள் காதல் பிரிய காரணம் என்ன? என்பதே மீதிக்கதை.

நாயகனாக நடித்திருக்கும் டி.ஆண்டனி தற்கொலை எண்ணத்தின் விளிம்பில் நிற்கும் ஒரு உடைந்துபோன வாலிபனை அப்படியே கண் முன் கொண்டு வந்து நிறுத்திருக்கிறார். முதல் பாதியில் ரசிகர்களை சோதித்தாலும் பிற்பாதியில் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட இளைஞனின் வலியை தனது யதார்த்தமான மற்றும் முதிர்ச்சியான நடிப்பால் மிகச்சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார்.

பெங்காலி பெண்ணாக ஒரு சவாலான கதாபாத்திரத்தில் அறிமுகமாகியுள்ள நாயகி மதுமிதா தாஸ், நல்ல இயல்பான நடிப்பால் மனம் கவர்கிறார். நாயகன் கதாபாத்திரம் செய்யும் செயல்கள் நம்மை வெறுப்பேற்றும்போது, அன்பையும் நம்பிக்கையையும் விதைக்கும் காட்சிகளில் அட்டகாசமான நடிப்பை வழங்கி நம்மை நெகிழ வைக்கிறார் நாயகி. நாயகனின் நண்பர்களாக வரும் ரெஜின் ரோஸ், ஆலம் ஷா, நாயகனின் அப்பாவாக ஜீவா ரவி, நண்பர்களின் ஜோடியாக வரும் மாதங்கி சதீஷ், நவ்யா சுஜி, குழந்தையாக வரும் ரியா மனோஜ் என பிற நட்சத்திரங்களும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களை நேர்த்தியாக செய்து படத்திற்கு பலம் சேர்த்துள்ளனர். இவர்களில் ரெஜின் ரோஸ் மனதில் நிற்கிறார்.

பியட்ரோ வில்லானியின் கவித்துவமான ஒளிப்பதிவு, கதையின் தீவிரத்தன்மையையும் கதாபாத்திரங்களின் மன அழுத்தத்தையும் காட்சிகளின் வழியே மிக நேர்த்தியாகக் கடத்தியுள்ளது. ஜோய் ரெடாவின் பின்னணி இசை, காதல் மற்றும் சோகக் காட்சிகளுக்கு கூடுதல் உணர்வைத் தந்து உயிரூட்டியுள்ளது. சிங்க் சவுண்ட் முறையில் படத்தை எடுத்திருப்பதும் படத்துக்கு மேலும் உண்மைத் தன்மையை கொடுப்பதோடு மனதுக்கு மிக நெருக்கமான படமாக அமைகிறது. ஆண்டனியின் படத்தொகுப்பில் சில காட்சிகளை இன்னும் கொஞ்சம் சுருக்கியிருக்கலாமே என்ற எண்ணம் மட்டும் அவ்வப்போது எழுகிறது.

நடிப்போடு கதை, திரைக்கதை எழுதி, இயக்கி, தயாரித்துள்ள டி. ஆண்டனி, வழக்கமான மசாலா அம்சங்களை தவிர்த்து மனதுக்கு நெருக்கமான ஒரு காதல் படத்தை தந்திருக்கிறார். ஒரே படத்தில் காதலின் தீவிரம், போதை மற்றும் மன அழுத்தத்தில் சிக்கும் இளைஞனின் வாழ்க்கை, பெற்றோரின் அன்புக்கு ஏங்கும் ஒரு இளைஞனின் எதிர்க்காலம் என பல விஷயங்களை பேசியிருக்கிறார். ஆரம்பத்தில் அடல்ட் ஒன்லி படம் போல நகரும் கதை போகப் போக அன்பு, நம்பிகை ஆகியவற்றை விதைக்கும் ஒரு மருந்தாக மாறுகிறது. பல இடங்களில் 7ஜி ரெயின்போ காலனி படத்தின் பாதிப்பையும் உணர முடிகிறது. நாயகி செய்யும் தொழிலையும் தாண்டி அவர் கதாபாத்திரம் கொண்டிருக்கும் கண்ணியமும், அவரை காட்டியிருக்கும் அழகியலும் அந்த கதாபாத்திரத்தை மேலும் அழகாக்குகிறது. காதலை, காதல் திரைப்படங்களை விரும்பும் இளைஞர்களும் நிச்சயம் திரையரங்குகளில் சென்று தாராளமாக ஒருமுறை பார்த்து ரசிக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *