சாகாவரம் பற்றி எத்தனையோ இயக்குனர்கள் படங்களை எடுக்கும் முயற்சியில் கதையோடு கூட காத்திருக்கலாம். ஆனால் அப்படிப்பட்ட சாகாவரம் பெற்ற ஒருவரை பற்றிய் ஒரு கதையில் உருவாகியிருக்கும் தமிழ் திரைப்படம் தான் “இம்மார்டல்”. ஜி.வி. பிரகாஷ் குமார் நடிப்பில் அறிமுக இயக்குனர் மாரியப்பன் சின்னா இயக்கியிருக்கும் ‘வேம்பயர் பேண்டஸி சர்வைவல் திரில்லர்’ ஜானரில் உருவாகியுள்ள இந்த படத்தில் நாயகியாக மையக்கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் கயாடு லோஹர். ஏகே ஃபிலிம் பேக்டரி தயாரிப்பில் ஹாலிவுட் பாணியில் ஒரு ரத்தக் காட்டேரி பின்னணியை மையமாக வைத்து தமிழ் ரசிகர்களுக்காக உருவாகியுள்ள இந்த படம் எப்படி இருக்கு? என்பதை இந்த விமர்சனத்தில் பார்க்கலாம்.
படத்தின் கதைப்படி, சென்னையில் தன் மாமா வைத்திருக்கும் பிரிண்டிங் பிரஸ்ஸில் வேலை செய்யும் ஜி.வி.பிரகாஷ் குடியிருக்கும் வீட்டை காலி செய்ய சொல்கிறார் வீட்டின் உரிமையாளர். வாடகைக்கு வீடு கிடைக்காமல் தவிக்கும் அவருக்கு ஒரு ஃபோன் கால் வர, அதில் என் வீட்டில் குடியிருக்க ஆள் தேவை என சொல்கிறார் கயாடு லோஹர். அவரின் சொகுசு அபார்ட்மெண்டையும், கயாடுவின் அழகையும் பார்த்து மயங்கும் ஜிவி பிரகாஷ் அங்கேயே குடி பெயர்கிறார். எது கேட்டாலும் கொடுக்கிறார் கயாடு. அங்கு சில மர்மமான விஷயங்களை பார்க்கும் ஜிவி பிரகாஷூக்கு சந்தேகம் வர, மேலும் தோண்டி செல்லும்போது தான் கயாடு ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேல் இளைஞர்களின் ரத்தத்தைக் குடித்து உயிர்வாழும் ஒரு ரத்தக் காட்டேரி என்ற உண்மை தெரிய வருகிறது. அங்கிருந்து ஜிவி பிரகாஷ் தப்பித்தாரா? இல்லையா? அந்த ரத்தக் காட்டேரியின் பின்னணி என்ன? என்பதே மீதிக்கதை.
வழக்கம் போல சென்னையின் நடுத்தர வர்க்க, சாதாரண இளைஞனாக அப்படியே மாறி நிற்கிறார் நாயகன் ஜி.வி.பிரகாஷ் குமார். முதல் பாதியில் பேச்சிலர் மோடில் பயணிக்கும் அவர் இடைவேளையில் இருந்து பயம், தவிப்பு, கோபம் என வேறு மோடுக்கு தாவுகிறார். தப்பித்து விட்டதாக நினைத்து வீர வசனம் பேசி விட்டு அடுத்த நொடியே ஷாக் ஆகும்போது பரிதாபத்தை விட நம்மை சிரிக்க வைக்கிறார்.
ரத்தக் காட்டேரியாக வரும் கயாடு லோஹர் முதல் பாதி முழுக்க கவர்ச்சியாக மாடர்ன் டிரஸ்ஸில் வந்து ஜிவி பிரகாஷோடு சேர்த்து நம்மையும் கிறங்கடிக்கிறார். இடைவேளையில் சோஃபாவில் படுத்துக் கொண்டு ஒரு புன்னகை கலந்த சிரிப்பில் மிரட்டுகிறார். இரண்டாம் பாதியில் இன்னொரு பரிமாணத்திலும் ஜொலிக்கிறார். லொள்ளு சபா மாறன், ஆதித்யா கதிர், டி.எம்.கார்த்திக், குமார் நடராஜன் என குறிப்பிட்டு சொல்லும்படியான கதாபாத்திரங்கள் தான். அவர்கள் ஒவ்வொருவருமே நல்ல சாய்ஸ். நல்ல நடிப்பு.
தொழில்நுட்ப ரீதியாகவும் குறிப்பிட்ட பட்ஜெட்டில் நல்ல ஒரு நேர்த்தியான படமாகவே உருவாக்கப்பட்டுள்ளது இந்த இம்மார்டல். சாம்.சி.எஸ். பின்னணி இசை திகில் காட்சிகளின்போது பதற்றத்தை அதிகரிக்கிறது. அந்த மலைகிராம ஆரம்ப காட்சியிலேயே இசையில் ஒரு வித்தியாசத்தை கொடுத்திருக்கிறார். அருண் ராதாகிருஷ்ணனின் ஒளிப்பதிவு பெரும்பாலும் ஒரே அபார்ட்மெண்டிற்குள் நடக்கும் கதை என்றாலும் எந்த ஒரு காட்சியிலும் சலிப்பு தட்டாத வண்ணம் நல்ல விஷூவலையே தந்திருக்கிறார். ராஜேஷ் எம். படத்தொகுப்பு பலம். 2 மணி நேரம் 10 நிமிடங்கள் மட்டுமே தந்து நம்மை உட்கார வைக்கிறார். கிராபிக்ஸ் & CG பணிகள் இப்படியும் தமிழில் நல்ல தரத்தில் படத்தை தர முடியுமா என வியக்க வைத்திருக்கிறது.
அறிமுக இயக்குநர் மாரியப்பன் சின்னா, முதல் படத்திலேயே இப்படி ஒரு முயற்சியை எடுத்ததற்கு பாராட்டுக்கள். தமிழ் சினிமாவில் இந்த ஜானரை கொண்டு வந்த பெருமையை பெற்றிருக்கிறார். அதற்கென கடுமையாக உழைத்தும் இருக்கிறார். திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் சிறப்பான மெறுகேற்றியிருக்கலாம். முதல் பாதியில் விறுவிறுப்பாக நகரும் படம் இரண்டாம் பாதியில் கொஞ்சம் தொய்வடைகிறது. ஆனாலும் ஒரு சில குறைகளை மறந்து தமிழில் கண்டு ரசிக்கும்படி உருவாகியுள்ள இந்த படத்தை குழந்தைகள் மற்றும் குடும்பத்துடன் தியேட்டரில் தாராளமாக ஒருமுறை பார்க்கலாம். வெற்றி தோல்வியை கடந்து புதுப்புது முயற்சிகளுக்கு துணையாக முதலில் நிற்கும் ஜிவி பிரகாஷூக்காக இந்த படம் நிச்சயம் பெருவெற்றியை பெறும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

