Zee5 தளத்தில் தரமான பல இணையத் தொடர்கள் வெளிவந்து கொண்டே இருக்கின்றன. அந்த வகையில் ஏற்கனவே வெளியாகி பெரும் வரவேற்பையும், வெற்றியையும் பெற்ற தொடர் தான் ‘சட்டமும் நீதியும்’. குற்றம், காவல்துறை, நீதிமன்றம் எனப் பல்வேறு கோணங்களில் சமூகத்தின் முக்கியமான கேள்விகளை முன்வைக்கும் வெப் தொடராக வெளியாகியுள்ளது இந்த இரண்டாவது சீசன் ‘சட்டமும் நீதியும்’. சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற அடிப்படைக் கருத்தை மையமாகக் கொண்டு, அதிகாரப் பின்னணியில் மறைக்கப்படும் உண்மைகளையும் நீதியை நிலைநாட்டுவதில் ஏற்படும் சவால்களையும் இந்தத் தொடர் பேசுகிறது.
இந்த தொடரின் கதைப்படி, காவல் ஆய்வாளர் பிரேம் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்படுகிறார். இந்தச் சம்பவம் தொடர்பாக நான்கு காவலர்கள் கைது செய்யப்பட, வழக்கு பல்வேறு திருப்பங்களைச் சந்திக்கிறது. பிரேம் மனைவியான வரலட்சுமி குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராகச் சட்டப் போராட்டத்தை முன்னெடுக்கிறார். மறுபுறம், அவர்களுக்காக வாதாட வழக்கறிஞர்கள் தயங்கும் சூழலில், பொருளாதார நெருக்கடியில் இருக்கும் வழக்கறிஞர் சரவணன் இந்த வழக்கை ஏற்றுக்கொள்கிறார். கொலையின் பின்னணியில் இருக்கும் உண்மை என்ன, குற்றம் சாட்டப்பட்டவர்கள் உண்மையிலேயே குற்றவாளிகளா, விசாரணையில் வெளிவரும் தகவல்கள் வழக்கின் போக்கை எவ்வாறு மாற்றுகின்றன என்பதே தொடரின் மீதிக்கதை.
சுந்தரமூர்த்தியாக வரும் சரவணன், ஆர்ப்பாட்டமில்லாத நடிப்பின் மூலம் கதாபாத்திரத்திற்கு இயல்பான தன்மையைக் கொடுக்கிறார். தொழில்முறை நெருக்கடிகளுக்கு மத்தியிலும் தனது வாதத்தின் மீது நம்பிக்கை வைக்கும் வழக்கறிஞராக அவரது நடிப்பு கவனிக்க வைக்கிறது. சந்திரா கதாபாத்திரத்தில் வரலட்சுமி சரத்குமார், உறுதியான மனநிலையையும் நீதிக்கான தீவிரத்தையும் வெளிப்படுத்துகிறார். மற்ற நடிகர்களின் பங்களிப்பும் கதையின் விசாரணைப் பின்னணிக்கு உதவுகிறது. பிரேம், லாவண்யா, கவிதா பாரதி, கல்லூரி வினோத், ஆறு பாலா உள்ளிட்ட மற்ற நடிகர்கள் எல்லோருமே நல்ல ஒரு பங்களிப்பை தந்திருக்கிறார்கள்.
கோகுல கிருஷ்ணன் ஒளிப்பதிவும், விபின் பாஸ்கர் பின்னணி இசையும் தொடரின் மிகப்பெரிய பலம். தொடரின் தரத்தையே இவர்களின் கடும் உழைப்பு உயர்த்தியிருக்கிறது.
இயக்குநர் பாலாஜி செல்வராஜ், முதல் சீசன் போலவே இதையும் மிக ஆழமாக, இன்னும் நுணுக்கமான சட்ட நடைமுறைகளையும் சேர்த்து மனிதர்களின் தனிப்பட்ட போராட்டங்களையும் இணைத்துச் சொல்ல முயன்றுள்ளார். அதிகாரம், ஆதாரம், சாட்சி ஆகியவற்றுக்கு இடையே உண்மை எவ்வாறு சிக்கிக்கொள்கிறது என்பதைத் தொடர் சுட்டிக்காட்டுகிறது. சில திருப்பங்கள் எதிர்பார்க்கக்கூடியதாக இருந்தாலும், நீதிமன்றப் பின்னணியில் உருவாகும் மோதல்கள் கதையைத் தொடர்ந்து பார்க்க வைக்கின்றன.
நீதிமன்ற விவாதங்கள், விசாரணைக் காட்சிகள், சாட்சியங்களின் முரண்பாடுகள் ஆகியவற்றை மையமாகக் கொண்ட திரைக்கதை தொடரின் முக்கிய பலமாக அமைகிறது. கதையின் மர்மத்தை ஒரே நேரத்தில் முழுமையாக வெளிப்படுத்தாமல் படிப்படியாகத் தகவல்களை முன்வைப்பது சுவாரஸ்யத்தைத் தக்கவைக்கிறது. மொத்தத்தில், குற்றப் புலனாய்வு மற்றும் நீதிமன்ற கதைகளை விரும்புபவர்களுக்கு ‘சட்டமும் நீதியும் 2’ நிச்சயம் நல்ல ஒரு சிறந்த தொடராகவே அமைகிறது. வார இறுதியில் ‘சட்டமும் நீதியும் சீசன் 2’ பார்த்து ரசிக்கலாம்.

