சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ள ஜெயிலர் 2, ரசிகர்களுக்கு அதிரடி, நகைச்சுவை, சென்டிமென்ட் என அனைத்தையும் கலந்து வழங்கும் ஒரு கமர்ஷியல் திரைப்படமாக உருவாகியுள்ளது. 2023-ல் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற ஜெயிலர் படத்தின் தொடர்ச்சியாக உருவாகியுள்ள இப்படத்தில், முத்துவேல் பாண்டியனாக மீண்டும் களமிறங்கியிருக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். முந்தைய கதை முடிந்த 2 மாதங்கள் கழித்து துவங்கும் இந்த படம் எப்படி இருக்கு? என்பதை இந்த விமர்சனத்தில் பார்க்கலாம்.
75 வயதிலும் திரையில் தனது தனித்துவமான ஸ்டைலாலும் கம்பீரத்தாலும் ரசிகர்களைக் கட்டிப்போடுகிறார் ரஜினிகாந்த். அவரது பார்வை, நடை, வசன உச்சரிப்பு, நகைச்சுவை உணர்வு என அனைத்தும் படத்திற்குப் பெரிய பலமாக அமைந்துள்ளன. குறிப்பாக, அமைதியாக இருக்கும் கதாபாத்திரம் தனது அதிரடியான பக்கத்தை வெளிப்படுத்தும் தருணங்கள் ரசிகர்களிடம் விசில் சத்தத்தையும் கைதட்டல்களையும் பெறும் வகையில் உள்ளன.
ரஜினியின் திரை ஆளுமையை நன்கு புரிந்துகொண்ட இயக்குநர் நெல்சன், அவருக்கான மாஸ் தருணங்களைச் சரியான இடங்களில் அமைத்திருக்கிறார். பஞ்ச் வசனங்களும் ஹீரோவுக்கான உயர்வான காட்சிகளும் ரசிகர்களுக்கு விருந்தாக அமைகின்றன.
முதல் பாதியில் நெல்சனின் வழக்கமான நகைச்சுவை பாணி நன்றாகக் கைகொடுக்கிறது. கதாபாத்திரங்களின் இயல்பான உரையாடல்களும், சூழ்நிலைக்கு ஏற்ற நகைச்சுவைக் காட்சிகளும் படத்தைச் சுவாரஸ்யமாக நகர்த்துகின்றன. உணர்வுப்பூர்வமான தருணங்களும் கதையுடன் ஓரளவுக்கு பொருந்துகின்றன. இரண்டாவது பாதியில் முழுக்க முழுக்க ரஜினி ரசிகர்களுக்கான ஒரு முழு விருந்தாக அமைந்துள்ளது.
எஸ்.ஜே. சூர்யா தனது தனித்துவமான நடிப்பால் வில்லன் கதாபாத்திரத்துக்குச் சுவாரஸ்யம் சேர்க்கிறார். சூரஜ் வெஞ்சரமூடு தனது கதாபாத்திரத்தில் மிரட்டுகிறார். முக்கிய நட்சத்திரங்களை தாண்டி மிகப்பெரிய அளவில் ஸ்கோர் செய்திருக்கிறார் நமோ நாராயணன். வித்யா பாலன், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு உள்ளிட்டோரின் பங்களிப்பும் படத்திற்கு வலுசேர்க்கிறது. மோகன்லால், சிவராஜ்குமார், விஜய் சேதுபதி, ஹிருத்திக் ரோஷன் உள்ளிட்ட நட்சத்திரங்களின் தோற்றங்கள் படத்தின் பிரம்மாண்டத்தை அதிகரிக்கின்றன. இருப்பினும், சில கதாபாத்திரங்களுக்கு இன்னும் கூடுதல் முக்கியத்துவம் கொடுத்திருக்கலாம்.
அனிருத்தின் பின்னணி இசை ரஜினியின் மாஸ் காட்சிகளுக்கு உயிரூட்டுகிறது. சரியான தருணங்களில் இசையின் வேகத்தை உயர்த்தி, திரையரங்க அனுபவத்தை வலுப்படுத்துகிறார். விஜய் கார்த்திக் கண்ணன் ரஜினியை மிக மிக சிறப்பாக காட்டியிருக்கிறார். படம் முழுக்க ஒரு பிரமாண்டத்தையும் தன் கேமரா மூலம் சிறப்பாக காட்டியிருக்கிறார்.
ஜெயிலர் 2, ரஜினிகாந்த்தின் திரை ஆளுமையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு சுவாரஸ்யமான கமர்ஷியல் என்டர்டெய்னர். நகைச்சுவை, அதிரடி, இசை, நட்சத்திரங்களின் வருகை என ரசிகர்களைக் கவரும் அம்சங்கள் நிறைய உள்ளன. மொத்தத்தில், சூப்பர் ஸ்டாரின் மாஸ், காமெடி, ஆக்ஷன், எமோஷன் என தெறிக்க விட்டிருக்கிறார். திரையரங்கில் மீண்டும் ஒரு திருவிழா. குடும்பத்துடன் சென்று கொண்டாடி மகிழுங்கள்.

