கடந்த வாரம் ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியான ஒரு தரமான உருவாக்கம் மற்றும் கதையால் ட்ரைலர் மூலமே ரசிகர்களை ஈர்த்த ஒரு இணையத் தொடர் தான் ‘லிங்கம்’. தென் தமிழகப் பின்னணியில், உண்மைச் சம்பவங்களை உத்வேகமாகக் கொண்டு ஒரு சாமானியன் எப்படி சூழ்நிலைகளால் தாதாவாக மாறுகிறான் என்பதைப் பேசும் விறுவிறுப்பான க்ரைம் த்ரில்லர் சீரிஸாக உருவாகியுள்ள லிங்கம் எப்படி இருக்கு? என்பதை இந்த விமர்சனத்தில் பார்க்கலாம்.
இந்த தொடரின் கதைப்படி, கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த லிங்கம் (கதிர்) ஒரு திறமையான கபடி வீரர். காவல்துறை அதிகாரியாகி ஒரு அமைதியான வாழ்க்கையை வாழ வேண்டும் என்பதே அவரது லட்சியம். ஆனால், எதிர்பாராத ஒரு அசம்பாவிதமும், பழிவாங்கலும் அவரது கனவைச் சிதைக்கிறது. செய்யாத கொலைக் குற்றத்திற்காக சிறைக்குச் செல்லும் லிங்கம், அங்கு சந்திக்கும் காவல்துறை சித்திரவதைகளாலும் அவமானங்களாலும் முற்றிலுமாக மாறுகிறார். சிறையிலிருந்து வெளிவரும் லிங்கம், சாமியப்பன் மற்றும் செல்லப்பாண்டியன் ஆகியோரின் சட்டவிரோத மது வியாபார நெட்வொர்க்கிற்குள் நுழைகிறார். இறுதியில், சூழ்நிலைகளின் அழுத்தத்தால் கன்னியாகுமரியையே நடுங்க வைக்கும் மாபெரும் கிங்பின்னாக (Kingpin) அவர் எப்படி உருவெடுக்கிறார் என்பதை 8 எபிசோடுகளில் விறுவிறுப்பாக விவரிக்கிறது இந்தத் தொடர்.
நாயகன் கதிர், ஒரு கபடி வீரராக, அமைதியான இளைஞனாகத் தொடங்கி, பின்னர் ஒரு முரட்டுத்தனமான கேங்க்ஸ்டராக மாறும் பாத்திரத்தில் கதிர் அசாத்தியமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். அவரது உடல்மொழி மற்றும் கண்கள் காட்டும் ஆக்ரோஷம் தொடருக்குப் பெரும் பலம். நாயகி திவ்ய பாரதி பொன்மலர் கதாபாத்திரத்தில் கலக்குகிறார். பூர்ணிமா ரவி கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை மிக நேர்த்தியாக செய்துள்ளார். போஸ் வெங்கட் மற்றும் பிற நடிகர்கள் கச்சிதமாக பொருந்துகிறார்கள். தென் தமிழகத்தின் மண் வாசனை மாறாத எதார்த்தமான நடிப்பை வழங்கியுள்ளனர்.
‘விலங்கு’ தொடர் புகழ் பிரசாந்த் பாண்டியராஜ் வழங்கும் இந்த சீரிஸை லட்சுமி சரவணகுமார் எழுதி இயக்கியுள்ளார். ஒளிப்பதிவு, பின்னணி இசை என எல்லாமே தரம். தென் தமிழகத்தின் ரவுடியிசம், அரசியல் மற்றும் போலீஸ் அராஜகம் ஆகியவற்றை எந்தப் பூச்சுமின்றிக் காட்டியுள்ளார் இயக்குனர். விறுவிறுப்பான திரைக்கதை & எதார்த்தமான வசனங்கள் கூடுதல் பலம். அளவுக்கு அதிகமான வன்முறை காட்சிகள் இருப்பதால் 18+ ரசிகர்கள் பார்க்க பரிந்துரைக்கிறோம். மொத்தத்தில் தமிழி வந்திருக்கும் மற்றுமொரு சிறந்த தொடர் இந்த “லிங்கம்”.

