இந்தியன் 2 – முன்னோட்டம்

இந்த வாரம் வெளியாகும் இந்தியன் 2 திரைப்படம் ரசிகர்கள் நீண்ட காலமாக எதிர்பார்த்திருந்த மிக முக்கியமான படம். 28 ஆண்டுகளுக்கு வெளியான இந்தியன் படத்தின் ஆன்மாவை அதன் தரம் மாறாமல் இந்த தலைமுறை ரசிகர்களையும் கவருமா? என்பதை ஒரு SWOT Analysis மூலம் அலசுவோம்.

STRENGTH:

1) 1996-ல் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் என்பதே படத்துக்கு மிகப்பெரிய அடையாளம். அந்த பிராண்ட், கிளாசிக் இமேஜ் எல்லாமே இந்தியன் 2-க்கு மிகப்பெரிய பலம். மிகப்பெரிய அளவில் ரசிகர்களை தியேட்டருக்கு வர வைக்கக் கூடிய முக்கியமான காரணி.

2) மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளம். கமல்ஹாசன், சித்தார்த், எஸ் ஜே சூர்யா, பாபி சிம்ஹா, விவேக், காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், ப்ரியா பவானி ஷங்கர், காளிதாஸ் ஜெயராம், சமுத்திரகனி, குல்ஷன் குரோவர், பிரமானந்தம் மற்றும் பல நடிகர்கள் இந்த படத்துல இருக்காங்க. எந்த ஒரு சீன் எடுத்தாலும் தெரிந்த முகங்கள் தான் இருப்பாங்க. அப்படி காட்சிக்கு காட்சி ரசிகர்களை கட்டிப் போடும் திறமை இவர்களுக்கு உண்டு.

3) படத்தோட பட்ஜெட் கிட்டத்தட்ட 350 கோடி இருக்கும்னு சொல்றாங்க. ஷங்கர் படங்களில் பிரமாண்டம் பற்றி சொல்லித் தெரிய வேண்டியதில்லை. பல கோடி செலவில் பிரமாண்ட செட்கள், காட்சிக்கு காட்சி 1000 ஜூனியர் ஆர்டிஸ்ட்கள், இந்தியா முழுக்க பல மாநிலங்களில் ஷூட்டிங், நாம் பார்க்காத வெளிநாடுகளில் பாடல் காட்சி என நாம மிஸ் பண்ற பிரமாண்டத்தை திரையில் காட்ட இருக்கிறார் ஷங்கர். அந்த பிரமாண்டத்தை பார்ப்பதற்கே ஒரு கூட்டம் வரும் என்பதில் சந்தேகம் இல்லை.

4) இந்தியன் முதல் பாகத்துல பார்த்த மாதிரியே இதுலயும் பீரியட் போர்ஷன்ஸ் கண்டிப்பா இருக்கும்னு சொல்றாங்க. ஆனா அது 5,10 நிமிஷமா? இல்ல பாதி படமா? ஷங்கர் அதை சர்ப்ரைஸா வச்சிருக்காரா? இந்த ஆர்வமும், சர்ப்ரைஸூம் படத்துக்கு பெரிய பலம்.

5) ட்ரைலரில் பார்த்த வரை விஷூவல்ஸ் வேற லெவல்ல இருக்கு. ரவி வர்மன் பிரமாண்டத்தை வேற லெவல்ல தெறிக்க விட்டிருக்கிறார். பெரிய திரையில் பிரமாண்டமான காட்சிகளை பார்ப்பது ஒரு பேரனுபவமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

6) கமல், ஷங்கர் இந்த கூட்டணி இணைந்தது ஒரே ஒரு படத்தில் தான். அது மிகப்பெரிய ஹிட், வசூல். இப்போது இரண்டாவது படம். கண்டிப்பாக ஏதாவது ஒரு மேஜிக்கை நிகழ்த்தியிருப்பார்கள் என்ற நம்பிக்கை ரசிகர்கள் மனதில் உள்ளது. அதுவும் படத்துக்கு கூடுதல் பலம்.

7) அனிருத். ஆகப்பெரிய பலம்னு சொல்லலாம். என்ன தான் ஏ.ஆர்.ரஹ்மானுடன் ஒப்பிட்டு பலரும் குறை சொன்னாலும் அனிருத் போட்ட பாடல்கள், இசை எல்லாம் ரசிகர்களிடம் பெரிய அளவில் சென்று சேர்ந்திருக்கிறது. இன்றைய தலைமுறையினர் மத்தியில் படத்தை சிறப்பாக கொண்டு போய் சேர்த்திருக்கிறார். பின்னணி இசை எப்படி இருக்கும் என்பதை காண கண்டிப்பாக ரசிகர்கள் ஆர்வம் காட்டுவார்கள் என்பது உறுதி.

8) இந்தியன் முதல் பாகம் தமிழுக்கு இணையாக தெலுங்கில் பாரதீயுடு என்ற பெயரிலும், இந்தியில் ஹிந்துஸ்தானி என்ற பெயரிலும் பிளாக்பஸ்டர் ஹிட். அந்த பிராண்ட் வேல்யூவே இந்த படத்தை இந்தி மற்றும் தெலுங்கில் பெரிய வெற்றியடைய வைக்கும் என்பது கூடுதல் பிளஸ்.

9) அத்துடன் ஷங்கர் தற்போது ராம்சரணை வைத்து தெலுங்கில் கேம் சேஞ்சர் படத்தை இயக்கியுள்ளார், விரைவில் ரிலீஸ் ஆக இருக்கிறது. எனவே ஷங்கர் இந்த படத்தை எப்படி எடுத்திருக்கிறார் என்பதை பார்க்க தெலுங்கு ரசிகர்களும் பெரிய அளவில் ஆர்வம் காட்டுவார்கள் என்பதும் கூடுதல் பலம்.

WEAKNESS:

1) படத்தின் பாஸிடிவ்க்கு என்ன சொன்னோமோ, அதுவே தான் நெகடிவ்வும் கூட. ஆம், பல கிளாசிக் ஹிட் படங்களை அப்படியே விட்டுடணும், பார்ட் 2 எடுக்கிறேன், ரீமேக் செய்கிறேன் என செய்யும் போது ரசிகர்களை திருப்தி செய்வது மிகவும் கடினம். திருப்திப்படுத்துவது என்பதை தாண்டி இயக்குனர், நடிகர்களாலேயே முதல் பாகம் அளவுக்கு சிறப்பான படமாக கொடுக்க முடியாது. அப்படிப்பட்ட ஒரு மிகப்பெரிய சவால் ஷங்கர், கமல் என இரண்டு பேருக்குமே இருக்கிறது. அதையும் மீறி மேஜிக்கை நிகழ்த்துவார்களா? என்பதை திரையில் பார்ப்போம்.

2) நிறைய நட்சத்திரங்கள் இருப்பது எந்தளவுக்கு பாஸிடிவான விஷயமோ அதே அளவுக்கு நெகடிவாகவும் அமையலாம், அவர்கள் கதாபாத்திரம் வெறுமனே வந்து போவது போல் அமைந்திருந்தால். ரசிகர்கள் நிறைய எதிர்பார்த்து வருவார்கள். அதனால் அழுத்தமான கதாபாத்திரங்களாக இருப்பது முக்கியம். அப்படி இருக்கும் பட்சத்தில் இந்த பாயிண்டை பாஸிடிவ் செக்‌ஷனில் சேர்த்து விடலாம்.

3) ட்ரைலருக்கு கலவையான விமர்சனங்கள் வந்தால் அது ஓபனிங்கை தான் பாதிக்கும். ஆனால் படத்துக்கு கலவையான விமர்சனங்கள் வரும்போது அது படத்தின் வசூலையே பாதிக்கும். நல்ல படமாக இருந்தால் கூட முதல் பாகத்துடன் ஒப்பிட்டு அவ்வளவு சிறப்பாக ஒன்றும் இல்லை என சொல்வது ரசிகர்கள் இயல்பு. அதை சமாளித்து நல்ல விமர்சனங்கள் வர வைப்பது இயக்குனர் ஷங்கர் கையில் தான் இருக்கிறது.

4) படத்தின் நீளம் 3 மணி நேரம். பல 3 மணி நேர படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கின்றன. ஆனாலும் அந்த படங்களும் ரிஸ்க் எடுத்து தான் வெற்றி பெற்று இருக்கின்றன. 3 மணி நேரம் ரசிகர்களை கட்டிப்போடா வைக்கும் திரைக்கதை அமைந்திருக்கிறதா? என்பது முக்கியம். 3 மணி நேர படங்களுக்கு இன்றைய காலகட்டத்தில் நிறைய சர்ப்ரைஸ் விஷயங்கள் இருக்க வேண்டியது அவசியம். அப்படி என்னென்ன சர்ப்ரைஸ் ஷங்கர் வைத்திருக்கிறார் என்பது அவசியம்.

5) எடிட்டிங். இதை ஏன் இங்கே சொல்லுகிறோம் என்றால் படத்தை இரண்டு பாதியாக்கி இந்தியன் 3-யாக உருவாக்கி இருக்கிறார் ஷங்கர். எதை எல்லாம் இந்த பாகத்தில் சொல்லப் போகிறோம், ஆர்வத்தை தூண்டும் விஷயங்கள் எவ்வளவு இந்த பாகத்தில் இருக்கிறது என்ற மிகப்பெரிய முடிவை மிகச் சிறப்பாக கையாண்டிருக்க வேண்டும். ஏனென்றால் இந்தியன் 3-யின் தலைவிதி இந்தியன் 2 படத்தின் வெற்றியில் தான் இருக்கிறது. அதை தவற விட்டால் அது மிகப்பெரிய மைனஸாக அமைந்து விட வாய்ப்பு அதிகம்.

OPPURTUNITIES:

1) 360 டிகிரி பிரமோஷன் செய்திருக்காங்க கமல், ஷங்கர் & இந்தியன் டீம். லைகாவும் மிகப்பெரிய அளவுல பணத்தை செலவு பண்ணிருக்காங்க பிரமோஷனுக்கு. கமல், ஷங்கர் கூட்டணி 28 வருடங்களுக்கி பிறகு இணைவதாலேயே கண்டிப்பாக விக்ரம் வசூலை தாண்டி விடும் என்பது திரையுலகினர் கணிப்பு. ஆனாலும் படத்தின் ரிசல்ட் எப்படி இருக்கப் போகிறது? அதை தாண்டி எவ்வளவு வசூல் செய்யும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

2) 100% பாஸிடிவ் விமர்சனங்கள் வந்து குடும்பம் குடும்பமாக ரசிகர்கள் படத்தை பார்த்து, தமிழ் சினிமா நுழையவே முடியாத இந்தி மார்க்கெட்டில் நல்ல வசூலை இந்த படம் பெற்றாலும் கண்டிப்பாக 2.0, ஜெயிலர், லியோ வசூலை தாண்டி மிகப்பெரிய சாதனை படைக்க வாய்ப்பு இருக்கிறது.

3) இந்தியன் 3 தலைவிதி இந்தியன் 2-வை பொறுத்து தான் இருக்கிறது என்று சொல்லியிருந்தோம். அந்த வகையில் இந்த படமே அதிரி புதிரி வசூலை பெற்று மிகப்பெரிய வெற்றியை அடைந்தால் அடுத்த பாகமான இந்தியன் 3 கண்டிப்பாக பாகுபலி, கேஜிஎஃப் போன்ற படங்களின் வரிசையில் இணையும் வாய்ப்பும் மிகப்பிரகாசமாக இருக்கிறது. தமிழ் சினிமாவின் முதல் 1000 கோடி படமாகவும் அமைய வாய்ப்பு இருக்கிறது.

THREATS:

1) இந்தியில் அதே நாளில் சூர்யா நடித்த சூரரைப் போற்று படத்தின் ரீமேக்கான சர்ஃபிரா என்ற அக்‌ஷய் குமார் நடித்த படம் வருவது இந்தியில் வசூலில் சிறு பாதிப்பை ஏற்படுத்தலாம்.

2) தமிழில் இரண்டு வாரத்திலேயே தனுஷின் 50வது படமான ராயன் ரிலீஸ் ஆவதால் நீண்ட நாட்கள், அதிக வசூலுடன் ஓடும் வாய்ப்பு குறைகிறது. பெரிய தியேட்டர்கள் எல்லாம் 3வது வாரமும் இந்தியன் 2-வுக்கே கிடைக்குமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். அதனால் 2 வாரத்திலேயே மிகப்பெரிய வசூலை அறுவடை செய்தாக வேண்டிய கட்டாயம் இருக்கிறது.

3) மற்ற பார்ட் 2, பார்ட் 3 படங்களை போல அல்லாமல் இந்தியன் 3 படத்தை ரெடியாக எடுத்தே முடித்து விட்டனர். எனவே இந்தியன் 2 வெற்றி பெற்றே ஆக வேண்டும். சிறந்த படம் என்ற பெயரையும் பெற்றாக வேண்டிய கட்டாயம் இருக்கிறது. நல்லா இல்ல, சரியா ஓடலை என்ற நிலை ஏற்பட்டால் அது இந்தியன் 3க்கு பெரிய பாதிப்பை உண்டு பண்ணி விடும் என்ற ஆபத்தும் இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *