சிக்னல் அட் 11:30 – விமர்சனம்!

சந்தோஷ் பிரதாப், பவ்யா திரிகா, பூஜிதா பொன்னடா நடிப்பில், இயக்குனர் மலர்விழி நடேசன் எழுதி இயக்கியுள்ள திரைப்படம் ‘சிக்னல் அட் 11:30’. காதல் மற்றும் உளவியல் திரில்லர் என்ற கலவையில் உருவாகி இருக்கும் இந்த படத்துக்கு டி.இமான் இசையமைத்திருக்கிறார். பெண்கள் பாதுகாப்பை பற்றி பேசும் இந்த படம் எப்படி இருக்கு? என்பதை இந்த விமர்சனத்தில் பார்க்கலாம்.

படத்தின் கதைப்படி, ஒரு பெரிய நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் நாயகன் சந்தோஷ் பிரதாப் வேலையை முடித்து விட்டு கிளம்பும்போது இரவு 11:30 மணிக்கு சென்னை புறநகர் சாலையில் ஒரு இளம் பெண்ணை 4 இளைஞர்கள் பைக்கில் விரட்டுவதை பார்க்கிறார். உடனடியாக பின் தொடர்ந்து சென்று பார்க்க அந்த பெண்ணின் பைக் மட்டும் சாலை ஓரத்தில் கிடக்க, அந்த பெண் காணாமல் போகிறார். மறுபுறம் அந்த பெண்ணின் தந்தை, காணாமல் போன மகளை தேடத் துவங்குகிறார். காவல்துறையிலும் புகார் அளிக்கிறார். போலீஸ் இந்த கேஸை விசாரிக்க துவங்கும்போது அடுத்தடுத்து என்ன நடந்தது? காணாமல் போன அந்த பெண் யார்? அந்த பெண் என்ன ஆனார்? இரவு நேரங்களில் தனியாக போகும் பெண்களுக்கு நிகழும் பிரச்சினைகள் என்ன? என்பதை சைக்கலாஜிக்கல் திரில்லராக அடுத்தடுத்த திருப்பங்களுடன் சொல்வதே மீதிக்கதை.

நாயகன் சந்தோஷ் பிரதாப். சித்தார்த் என்ற கதாபாத்திரத்தில் ஒரு பெரிய பிஸினஸ்மேனாக நடித்துள்ளார். முதல் காட்சியில் இருந்தே அவரின் எண்ண ஓட்டங்களையும், உணர்ச்சிகரமான தருணங்களையும் அந்த கதாபாத்திரத்தின் மனநிலையையும் மிக அழகாக தன் நடிப்பால் வெளிப்படுத்துகிறார். இரண்டாம் பாதியில் சிக்கலான அந்த கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்.

பவ்யா திரிகா முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவரது கதாபாத்திரமே கொஞ்சம் ஆச்சர்யமூட்டும் வகையில் அமைக்கப்பட்டிருக்கிறது. அதை மிகச்சரியாக கையாண்டிருக்கிறார். பூஜிதா பொன்னடா சந்தோஷ் பிரதாப்பின் காதலியாக, ஒரு மருத்துவராக, படத்தின் திருப்புமுனை கதாபாத்திரத்தில் சிறப்பாகவே நடித்திருக்கிறார். ஜெயப்பிரகாஷ், முனீஸ்காந்த் உள்ளிட்ட மற்ற நடிகர்களின் பங்களிப்பும் படத்திற்கு கூடுதல் பலமாக அமைந்திருக்கிறது.

டி.இமானின் இசை இப்படத்தின் முக்கியமான பலம். பாடல் காட்சிகளை பொறுத்தவரை வழக்கம் போல காதல் பாடல்களிலும், கிளைமாக்ஸில் வரும் முக்கியமான பாடலிலும் தன் முத்திரையை பதித்திருக்கிறார். பின்னணி இசையும் இந்த ஜானருக்கு ஏற்ப மர்மம் மற்றும் திரில்லர் விஷயங்களை elevate செய்திருக்கிறது. ராஜா பட்டாச்சார்ஜியின் ஒளிப்பதிவு புறநகர் சென்னையை காட்டிய விதம் உண்மையில் நமக்கே பயத்தையும், பதட்டத்தையும் ஏற்படுத்துகிறது. இரவு நேரச் சாலைகளையும் நகரத்தின் பரபரப்பான சூழலையும் காட்சிப்படுத்துவதில் அவரின் கேமரா ஒர்க் முக்கியப் பங்கு வகிக்கிறது. கலைவாணனின் படத்தொகுப்பு படத்தை Slick ஆக்கி இருக்கிறது.

இயக்குநர் மலர்விழி நடேசன், ஒரு பெண் இயக்குனர். அவரது சொந்த அனுபவத்தில் ஏற்பட்ட ஒரு சாலை சம்பவத்தை கற்பனை கலந்து முழுநீள சைக்கலாஜிக்கல் திரில்லர் திரைப்படமாக உருவாக்கியிருக்கிறார். அதை மிக சுவாரஸ்யமாகவும் present செய்திருக்கிறார். இரவு 11:30 மணிக்கு சிக்னலில் நடக்கும் ஒரு சம்பவத்தை மையமாக வைத்து பல கதாபாத்திரங்களின் வாழ்க்கையையும் அவற்றின் பின்னணியையும் இணைக்கும் திரைக்கதை பாராட்டுக்களை பெறுகிறது. முதல் பாதியில் பார்த்த விஷயங்களை அப்படியே இரண்டாம் பாதியில் வேறு விதமாய் காட்டி நம்மை பிரமிக்க வைக்கிறார். அடுத்தடுத்த எதிர்பாராத திருப்பங்கள் தந்து நம்மை சீட்டின் நுனியில் உட்கார வைக்கிறார். பெண்கள் பாதுகாப்பு குறித்த ஒரு விவாதத்தையும் ஏற்படுத்தியிருக்கிறார். மொத்தத்தில் வித்தியாசமான ஒரு கதைக்களத்துடன் உருவாகியுள்ள ‘சிக்னல் அட் 11:30’ திரைப்படம் ரசிகர்களுக்கு விறுவிறுப்பான அனுபவமாக அமைந்திருக்கிறது. நிச்சயம் தியேட்டரில் சென்று பார்க்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *