பிக் பாஸ் புகழ் முகேன் ராவ் நாயகனாக நடிக்க மருத்துவ பின்னணியில் உருவாகியுள்ள கிரைம் திரில்லர் திரைப்படம் ‘நிறம்’. முகேன் ராவ் உடன் பிரீத்தி அஸ்ரானி, தான்யா ஹோப், ஸ்மேஹா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்த படம் சில உண்மைச் சம்பவங்களால் ஈர்க்கப்பட்டு உருவாகியுள்ளது. மனிதர்களின் மாறுபட்ட குணங்களையும் அவர்களின் இருண்ட பக்கங்களையும் பேசும் இந்த படம் எப்படி இருக்கிறது? என்பதை இந்த விமர்சனத்தில் பார்க்கலாம்.
படத்தின் கதைப்படி, மருத்துவக் கல்லூரியில் படிக்கும் முகேன் ராவ் மற்றும் பிரீத்தி அஸ்ராணி இருவரும் காதலர்கள். பிரீத்தி அஸ்ராணி ஏதாவது பிரச்சினை என்றால் அதை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிடுபவர். அதனால் சிலரின் மிரட்டலுக்கும் ஆளாகிறார். ஒரு நாள் திடீரென காணாமல் போகிறார். அதே போல ஒரு பிரபல மருத்துவமனையின் நிறுவனரான சுரேகா வாணியின் மகள் தான்யா ஹோப்பும் காணாமல் போகிறார். இவர்களை போலவே சில இளம் பெண்களும் மர்மமான முறையில் காணாமல் போகிறார்கள். இளம் பெண்கள் அடுத்தடுத்து காணாமல் போகும் சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. இந்தச் சம்பவங்களுக்குப் பின்னால் இருப்பது யார்? ஏதேனும் பழிவாங்கலா? வேறு ஏதேனும் அதிர்ச்சிகரமான உண்மை இருக்கிறதா? வழக்கில் சிக்கிக்கொள்ளும் நாயகன் அதிலிருந்து எப்படி மீண்டார்? காணாமல் போன பெண்கள் என்ன ஆனார்கள்? என்பதை ஹைப்பர்லிங் பாணியில் சொல்வதே மீதிக்கதை.
முகேன் ராவுக்கு கிரைம் திரில்லர் பின்னணியிலான கதாபாத்திரம் நடிப்பில் புதிய பரிமாணத்தை வெளிப்படுத்த வாய்ப்பளிக்கிறது. ஆனாலும் நடிப்பில் இன்னும் கொஞ்சம் மெருகேற்றல் தேவை. பாடல் காட்சிகளில் நன்றாகவே இருக்கிறார். நாயகி பிரீத்தி அஸ்ரானி மருத்துவ மாணவியாகவும், கடத்தல் சம்பவத்தில் சிக்கிக்கொள்ளும் பெண்ணாகவும் முக்கியப் பங்கு வகிக்கிறார். அழகாலும், நடிப்பாலும் ஸ்கோர் செய்கிறார். முக்கியமான திருப்புமுனை கதாபாத்திரத்தில் சிறப்பாக கதையை நகர்த்துகிறார்.
தான்யா ஹோப்பின் கதாபாத்திரமும் கதையின் போக்கில் முக்கியத்துவம் பெறுகிறது. வழக்கம் போல நல்ல நடிப்பை தந்திருக்கிறார். நிதின் சத்யா, ஸ்மேஹா, சுரேகா வாணி, சுரேஷ் சக்ரவர்த்தி, ஸ்ரீஜித் ரவி, கஜராஜ், டிராவிட் செல்வம் உள்ளிட்ட மற்ற எல்லா நடிகர்களின் பங்களிப்பும் படத்திற்குக் கூடுதல் பலம் சேர்க்கிறது. ஆனாலும் இதில் ஒரு சில பரிச்சயமான நடிகர்களின் டப்பிங் குரல் அனுபவத்தை கெடுக்கிறது.
டி. இமானின் இசை படத்துக்கு பெரும் பலம். அவரது இசையில் நூதனா நூதனா டூயட் பாடலும், என் மகளே எமோஷன் பாடலும், குத்துப்பாடலும் கேட்கவும் நன்றாக இருக்கிறது. பின்னணி இசையும் திரில்லர் காட்சிகளுக்கு விறுவிறுப்பைக் கூட்டுகிறது. சான்டோனியோ டெர்சியோவின் ஒளிப்பதிவு முடிந்தவரை படத்தை சிறப்பாக காட்ட முயற்சி செய்திருக்கிறது. சாபு ஜோசப்பின் படத்தொகுப்பும் முக்கிய பங்கு வகிக்கிறது.
ஆறு முக்கியமான கதாபாத்திரங்களின் வாழ்க்கையை ஒன்றிணைத்து ஹைப்பர்லிங்க் திரைக்கதை மூலம் நல்ல ஒரு கிரைம்
திரில்லர் படத்தை கொடுக்க முயற்சித்திருக்கிறார் இயக்குனர் பலராம் கிருஷ்ணா. மனிதர்களின் குணங்கள் காலத்திற்கும் சூழ்நிலைக்கும் ஏற்ப எவ்வாறு மாறுகின்றன என்பதையும் சொல்லியிருக்கிறார். நான் லீனியர் முறையில் சொல்லப்பட்டிருக்கும் திரைக்கதையில் சுவாரஸ்யத்தை கூட்டுகிறார். முதலில் பார்க்கும் ஒரு காட்சி பின்னால் வரும் காட்சியின் மூலம் தெளிவாகிறது. சில நேரங்களில் Convenient writing படத்தின் மீதான ஆர்வத்தை குறைக்கிறது. யூகிக்கும்படியான திரைக்கதை பலவீனம். சென்னை நகரின் பல ரியல் லொகேஷன்களில் படமாக்கி இருப்பது சிறப்பு. மொத்தத்தில் மருத்துவப் பின்னணி, குற்றச் சம்பவங்கள், மனிதர்களின் இருண்ட பக்கங்கள் என வித்தியாசமான அம்சங்களைக் கொண்டுள்ள ‘நிறம்’ நல்ல ஒரு திரையரங்க அனுபவமாக அமைந்திருக்கிறது. நிச்சயம் பார்க்கலாம்.

