காதல் மற்றும் ஃபேண்டஸி என்ற அம்சங்களின் வித்தியாசமான கலவையாக உருவாகியுள்ள திரைப்படம் ‘சிட்டுக்குறிஞ்சி’. ரஜித் மேனன், தீப்ஷிகா, ஸ்ரீராம் கார்த்திக், நக்ஷா சரண் ஆகியோர் நடித்துள்ள இப்படத்தை அறிமுக இயக்குநர் வி.ஜே. மீனாட்சி சுந்தரம் எழுதி இயக்கியுள்ளார். 1983 மற்றும் 2023 என இரண்டு வெவ்வேறு காலகட்டங்களில் பயணிக்கும் கதைக்களம் என்பதே படத்தின் மீதான எதிர்பார்ப்பை நமக்குள் ஏற்படுத்துகிறது. முற்றிலும் புதிய அனுபவத்தை வழங்கும் முயற்சியாக உருவாகியுள்ள இப்படம் எப்படி இருக்கு? என்பதை இந்த விமர்சனத்தில் பார்க்கலாம்.
படத்தின் கதைப்படி, 2023-ல் வத்தலகுண்டு பஸ் ஸ்டாண்டில் இருந்து பூம்பாறைக்கு செல்லும் நாயகன் ரஜித் மேனன், அங்கு ஒரு திருமணமான பெண்ணை சந்திக்கிறார். ஒருவித குழப்பமான மனநிலையுடன் இருப்பவராக தோன்றும் ரஜித், அந்த பெண் அவருக்கு செய்யும் உதவிகளையும் பழகும் விதத்தையும் வைத்து காதல் வயப்படுகிறார். நான் இங்கேயே தங்கி விட ஆசைப்படுகிறேன் என சொல்ல, அந்த பெண் அதிர்ச்சியடைகிறார். பின் அங்கிருந்து கிளம்புகிறார் ரஜித் மேனன். சில நாட்கள் கழித்து நண்பன் விஜே பப்புவுடன் அங்கு சென்று அந்த பெண்ணைத் தேட, வழியில் அதே பெண்ணையும் சந்திக்கிறார். ஆனா அவரோ ரஜித் மேனனை யாரென்றே தெரியாது என சொல்கிறார். பின் அந்த வீட்டுக்கு சென்று பார்க்க மிகப்பெரிய அதிர்ச்சிக்கு ஆளாகிறார்கள். அதை நூல் பிடித்து போனால் கதை 1983-க்கு பயணிக்கிறது. வெவ்வேறு காலங்களில் வாழும் கதாபாத்திரங்களின் வாழ்க்கையில் ஏற்படும் சம்பவங்கள், எதிர்பாராத தொடர்புகள் மற்றும் மர்மமான நிகழ்வுகள் ஒன்றோடொன்று இணைகின்றன. கடந்த காலத்திற்கும் நிகழ்காலத்திற்கும் இடையே உருவாகும் இந்தத் தொடர்பு எத்தகைய மாற்றங்களை ஏற்படுத்துகிறது என்பதே மீதிக்கதை.
நாயகன் ரஜித் மேனன். முதல் பாதி முழுக்க ஏதோ பிரம்மை பிடித்தவர் போல சுற்றுகிறார். இரண்டாம் பாதியில் எனர்ஜிடிக் இளைஞராக ஸ்கோர் செய்கிறார். இருவேறு தோற்றங்களில் இருவேறு கதாபாத்திரங்களில் நல்ல குறிப்பிடும்படியான ஒரு நடிப்பை வழங்கியுள்ளார். நாயகி தீப்ஷிகா. அவரது என்ட்ரியே இரண்டாம் பாதியில் தான் என்றாலும் இரண்டாம் பாதி முழுக்க அழகாலும், நடிப்பாலும் திரையை ஆக்கிரமிக்கிறார். நக்ஷா சரண் ஆரம்ப காட்சிகளில் ஏடாகூடமாக எண்ண வைக்கும் ஒரு மிஸ்டரி கதாபாத்திரம் தான். ஆனாலும் அந்த பஸ் காட்சியில் இருந்து அவரது கதாபாத்திரம் புரிய ஆரம்பிக்கிறது. நன்றாகவே நடித்திருக்கிறார்.
ஸ்ரீராம் கார்த்திக் ஒரு சிறப்புத் தோற்றத்தில் சில காட்சிகள் வந்தாலும் நல்ல ஒரு கதை சொல்லியாக ரசிக்க வைக்கிறார். விஜே பப்பு காமெடி காட்சிகள் சில இடங்களில் சிரிக்க வைக்கிறது. ஜி.எம்.குமார் கதாபாத்திரமும், நாயகியை மகளாக பார்த்து பார்த்து அவர் செய்யும் விஷயங்களும் எமோஷனாக்குகிறது. ராம்ஸ் அவரது தோற்றம் மற்றும் நடிப்பால் அந்த கதாபாத்திரத்தை அழகாக செய்திருக்கிறார். தோழர் எல்.வி.ஆதவன், ஹலோ கந்தசாமி, தேனி முருகன் உள்ளிட்ட அனுபவம் வாய்ந்த நடிகர்கள் படத்தின் கூடுதல் பலம்.
இசையமைப்பாளர் மாறா இசையில் பாடல்கள் இதம். ரம்யா நம்பீசன் பாடிய குறிஞ்சி மல மேல பாடல் துள்ளல். உள்ளார டூயட் பாடலும் காட்சிகளுடன் பார்க்க மிக அழகாகவே இருக்கிறது. பின்னணி இசையிலும் படத்துக்கு ஏற்ற அந்த தன்மையை அழகாக ரசிகர்களுக்கு அழகாக கடத்துகிறார். இரண்டாம் பாதியில் வரும் அந்த முக்கியமான காட்சியில் மௌனத்தை இசையாக்கிய விதமும் அருமை. ஹங்கேரியை சேர்ந்த புடாபெஸ்ட் ஃபில்ஹார்மோனிக் ஆர்கெஸ்ட்ரா இசைக்குழுவினர் பங்களிப்பும் படத்துக்கு சிறப்பு சேர்த்துள்ளது.
கொடைக்கானல் அருகே 80 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்டமான ஒரு கிராமத்தையே உருவாக்கிப் படப்பிடிப்பு நடத்தியிருக்கிறார்கள், கலை இயக்குனர் ராம்ஜியின் பங்களிப்பு அதீதம். ராம்ஜி குழுவினரின் மிகக் கடுமையான உழைப்பு திரையில் தெரிகிறது.
பிரான்சிஸ் ராஜ்குமாரின் ஒளிப்பதிவு, இரண்டு காலகட்டங்களின் பின்னணியையும் காட்சிப்படுத்துவதில் முக்கியப் பங்கு வகித்திருக்கிறது. சிட்டுக்கிறிஞ்சி கிராமத்தின் அழகும், அதன் பின்னணியும் அவ்வளவு அழகு. ஃபிளாஷ்பேக்கில் வரும் கிராமமும் இயல்பில் மாறாமல் அழகாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
இயக்குனர் வி.ஜே.மீனாட்சி சுந்தரம், முதல் படத்திலேயே இரண்டு காலகட்டங்களை இணைக்கும் வித்தியாசமான ஒரு கதைக்களத்தைத் தேர்ந்தெடுத்து சொல்ல முயற்சித்திருப்பது பாராட்டுக்குரியது. பெரிய பட்ஜெட் படங்களில் கூட ஒரு கிராமத்தையே செட் போட்டு படம் பிடிக்க யோசிக்கும் வேளையில் இந்த மாதிரியான ஒரு முயற்சியை எடுத்த அவரை பாராட்டியே தீர வேண்டும். இரண்டு காலகட்டங்களையும் இணைக்கும் திரைக்கதை என்பது கொஞ்சம் கத்தி மேல் நடக்கும் விஷயம். அதை மிகுந்த சிரத்தை எடுத்து எழுதியுள்ளார்.
கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்திய விதம், கதாபாத்திரங்களுக்கு இடையேயான தொடர்புகள், இறுதியில் வெளிப்படும் மர்மங்கள் என திரைக்கதையும் சோடை போகவில்லை. ஆரம்பத்தில் இது என்ன இப்படி இருக்கு என நாம் எண்ணும் சில விஷயங்களுக்கு பின்னால் கிடைக்கும் விடைகள் நம்மை அட போட வைக்கிறது. உதாரணமாக முதல் பாதியில் வரும் பால்காரரின் குரல். இரண்டாம் பாதியில் தான் தெளிவாக தெரியும். மொத்தத்தில், வித்தியாசமான கதைத் தேர்வும் பிரம்மாண்டமான தொழில்நுட்ப முயற்சிகளும் ‘சிட்டுக்குறிஞ்சி’ திரைப்படத்தை நிச்சயம் ஒரு முறை பார்க்க வைக்கிறது.

