விஜய் ஆண்டனி நடிப்பில், மு.மாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள எமோஷனல் டிராமா திரைப்படம் ‘அப்பா குட்டி’. பிச்சைக்காரன் மாதிரியான உணர்வுப்பூர்வமான குடும்ப உணர்வுகளை பேசும் ஒரு படமாக, தந்தை – மகள் பாசத்தை பேசும் ஒரு படமாக இப்படம் உருவாகியுள்ளது. ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’, ‘கண்ணை நம்பாதே’, ‘பிளாக்மெயில்’ போன்ற கிரைம் த்ரில்லர் படங்களை இயக்கிய மு.மாறன், இந்தப் படத்தின் மூலம் எமோஷனல் டிராமா களத்தை கையில் எடுத்திருக்கிறார். படம் எப்படி இருக்கு? விஜய் ஆண்டனிக்கு இன்னொரு மாபெரும் வெற்றிப்படமாக அமைந்ததா? பார்க்கலாம்.
படத்தின் கதைப்படி, ஒரு கைக்குழந்தையுடன் சென்னையில் இருந்து ஊட்டிக்கு வருகிறார் விஜய் ஆண்டனி. தாய் இல்லாத அந்த குழந்தையை தனி ஒரு ஆளாக வளர்த்து வருகிறார். அவளுக்குத் தேவையான அனைத்தையும் செய்து கொடுக்கிறார். தாயின் அன்புக்காக ஏங்கும் மகள், அதை தந்தையிடம் காட்டிக் கொள்ளாமல் இருக்கிறார். அதே நேரம் குழந்தையின் பள்ளி ஆசிரியை பிரீத்தி அஸ்ரானிக்கு விஜய் ஆண்டனியின் மீது அன்பும், மரியாதையும் வர, அவர் அந்த குழந்தைக்கு தாயாக மாற விரும்புகிறார். ஆரம்பத்தில் விஜய் ஆண்டனி அதை ஏற்க மறுக்கிறார். ஒரு கட்டத்தில் அந்த குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் போக, அவரது உயிரைக் காப்பாற்ற மிகப்பெரிய அறுவை சிகிச்சை செய்ய வேண்டி வருகிறது. தனது மகளுக்காகவே வாழ்க்கையை அர்ப்பணித்து வாழும் தந்தை விஜய் ஆண்டனி மகள் உயிரைக் காப்பாற்ற எந்த எல்லைக்கு போகிறார் என்பதை எமோஷனலாக சொல்வதே மீதிக்கதை.
பிச்சைக்காரன் போன்ற உணர்வுப்பூர்வமான எமோஷனல் கதைகள் எல்லாவற்றிலுமே கச்சிதமாக பொருந்திப் போகிறார் விஜய் ஆண்டனி. இந்த படத்திலும் ஒரு அதீத பாசமிக்க தந்தை கதாபாத்திரத்தில் மிக இயல்பாக நடித்துள்ளார். மகளுடன் பாசப்பிணைப்பை வெளிப்படுத்தும் உணர்ச்சிகரமான தருணங்கள் எல்லாமே நம்மை நெகிழ வைக்கிறது. அவரது மகளாக வரும் குழந்தை நட்சத்திரம் லிதன்யா அவ்வளவு கியூட். விஜய் ஆண்டனி, பேபி லிதன்யா காட்சிகள் எல்லாமே ஒவ்வொரு தந்தைக்கும் மனதுக்கு நெருக்கமாக இருக்கும்.
நாயகி ப்ரீத்தி அஸ்ராணி, ஒரு Matured கதாபாத்திரத்தில் நம் மனதில் நிற்கிறார். இரண்டாம் பாதியில் அவரே தாயாக முன்வரும் காட்சியில் நெகிழ வைக்கிறார். வில்லத்தனமான ஒரு கதாபாத்திரத்தில் பகவதி பெருமாள் ரசிகர்களையே வெறுக்க வைக்கும் அளவுக்கான ஒரு நடிப்பை வழங்கியிருக்கிறார். எமோஷனலான ஒரு கதாபாத்திரத்தில் ஹரிப்ரியா ஸ்கோர் செய்கிறார். ஜென்சன் திவாகர், முருகானந்தம் இருவரும் வரும் காட்சிகள் சிரிக்க வைக்கின்றன. அருவி மதன், முத்துக்குமார், சித்ரா லட்சுமணன், ஸ்ரீஜா ரவி ஆகியோரும் நல்ல நடிப்பை தந்து படத்துக்கு துனை புரிகின்றனர்.
இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியின் இந்த படத்துக்கும் ஜீவனாக அமைந்து படத்தை உணர்வு ரீதியாக அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்கிறது. பாடல்களிலும், பின்னணி இசையிலும் நம்மை உருக வைக்கிறார். விஜய் ஆண்டனியின் படத்தொகுப்புக்கும் பாராட்டுக்கள். ராஜீவ் ராஜேந்திரன் ஒளிப்பதிவு ஊட்டி போன்ற அழகியல் சார்ந்த இடத்திலும் அழகை காட்டி ஸ்கோர் செய்ய நினைக்காமல், உணர்வுகளின் மேல் கவனமாக இருந்தது தெரிகிறது. மெல்லிய உணர்வுகளை திரையில் கொண்டு வருவதில் இவரின் பங்களிப்பு முக்கியமானதாக இருக்கிறது.
இயக்குனர் மு மாறன், இதுவரை இயக்கிய படங்கள் எல்லாமே கிரைம் த்ரில்லர் படங்கள் தான். ஆனால் முதன் முறையாக ஒரு எமோஷனலான தந்தை, மகள் உறவை மையமாக கொண்ட கதையைத் தேர்ந்தெடுத்திருப்பது ஆச்சர்யப்படுத்துகிறது. அதை மிகச் சிறப்பாகவும் கையாண்டிருக்கிறார். முதல் பாதியில் ஓகேவாக செல்லும் கதை இரண்டாம் பாதியில் அப்படியே நம்மை எமோஷனலாக கட்டிப் போடுகிறது. இரண்டாம் பாதியில் புதுப்புது கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்தி அதோடு நம்மை ஒன்றவும் வைக்கிறார். கோர்ட் காட்சிகளில் எல்லாம் கலங்க வைக்கிறார். பிச்சைக்காரன் படத்தை போலவே எமோஷனில் விளையாடி இருக்கிறார்கள். மொத்தத்தில், விஜய் ஆண்டனிக்கு இன்னொரு பிச்சைக்காரனாக அமைந்திருக்கிறது இந்த அப்பா குட்டி. நிச்சயம் குடும்பத்துடன் சென்று பார்க்க வேண்டிய ஒரு படைப்பு.

