தனுஷ், மம்மூட்டி, சாய் பல்லவி, ஸ்ரீலீலா என நட்சத்திரப் பட்டாளமே நடிக்க இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ள திரைப்படம் ‘ஓம் – ஆபரேஷன் மோல்’. அமரன் படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றிக்கு பிறகு செம்மரக் கடத்தல் பின்னணியில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த படம் எப்படி இருக்கு? என்பதை இந்த விமர்சனத்தில் பார்க்கலாம்.
படத்தின் கதைப்படி, ஆந்திர மாநில வனப்பகுதியில் நடைபெறும் செம்மரக் கடத்தல் பின்னணியாகக் கொண்டு கதை நகர்கிறது. மிகப்பெரிய ஒரு கடத்தல் கும்பலைக் கண்டுபிடித்து அழிக்க காவல்துறை அதிகாரி சாய் பல்லவி தலைமையில் ஒரு ரகசிய ஆபரேஷன் தொடங்கப்படுகிறது. தனுஷ் உளவாளியாக தேர்ந்தெடுக்கப்பட்டு மம்மூட்டியின் கும்பலில் ஊடுருவுகிறார். அந்த ஊர் மக்கள் மத்தியில் மிகுந்த செல்வாக்குடன் இருக்கும் மம்மூட்டியின் நம்பிக்கையை பெறுகிறார் தனுஷ். மம்மூட்டிக்கு மேல் இருக்கும் சிலரை கண்டுபிடிக்க தனுஷ் சில முயற்சிகள் எடுக்கிறார். தனுஷ் தன் உண்மையான அடையாளத்தை, தன் குடும்பத்தை எல்லாம் மறைத்துக் கொண்டு செயல்பட வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படுகிறார். அந்த சூழலில் அவர் எதிர்கொள்ளும் போராட்டங்கள் என்ன? குடும்ப வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சினைகள் என்ன? கடத்தல் கும்பலை கண்டுபிடித்து அழித்தார்களா? என்பதே மீதிக்கதை.
நாயகன் தனுஷ். ஒரு அண்டர் கவர் அதிகாரியாக நல்ல ஒரு நடிப்பை வழங்கியிருக்கிறார். அவரது பாடி லாங்குவேஜ், ஆக்ஷன் மற்றும் எமோஷனல் நடிப்பால் அந்த கதாபாத்திரத்திற்கு உயிரூட்டியிருக்கிறார். இடைவேளை காட்சியிலும், கிளைமாக்ஸூக்கு முந்தைய காட்சியிலும் எமோஷனில் நம்மை கட்டிப் போடுகிறார். டான்ஸ் பட்டைய கிளப்புகிறார். வழக்கம் போல ரசிகர்களுக்கு நல்ல விருந்து. மம்மூட்டி கம்பீரமான திரை ஆளுமையாலும், அசாத்திய நடிப்பாலும் திரையை ஆக்கிரமிக்கிறார். தனுஷ், மம்மூட்டி இடையேயான உறவு அப்படியே தளபதியில் பார்த்த அந்த உணர்வை கொடுக்கிறது.
சாய் பல்லவி ஓ.ம். ஆபரேஷனை நடத்தும் காவல்துறை அதிகாரியாக கலக்கியிருக்கிறார். அவரது தோற்றம், கம்பீரமான ஆளுமை, எமோஷனல் தருணங்கள் என சிறப்பான நடிப்பை வழங்கியுள்ளார். ஸ்ரீலீலா நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள ஒரு கதாபாத்திரத்தில் வித்தியாசமான உணர்வை தந்திருக்கிறார். இந்திரன்ஸ் தனுஷின் தந்தையாக வந்து நம்மை நெகிழ வைக்கிறார். நசீருதீன் ஷா உள்ளிட்ட மற்ற நடிகர்களும் வழங்கப்பட்ட கதாபாத்திரங்களுக்கு நியாயம் செய்துள்ளனர்.
சாய் அபயங்கரின் இசையில் பாடல்கள் தியேட்டரை தெறிக்க விடுகின்றன. அலாகா லூவா பாடல் நம்மையும் எழுந்து ஆட வைக்கிறது. வீரா பாடல் இணைக்கப்பட்ட இடம் Goosebumps. பின்னணி இசையிலும் பரபரப்பான காட்சிகளுக்கு வலுசேர்க்கிறார். எழில் அரசுவின் ஒளிப்பதிவு பிரமாண்டத்தை மிகச் சிறப்பாக காட்டியிருக்கிறது. கலைவாணனின் படத்தொகுப்பு முடிந்தவரை நன்றாகவே இருக்கிறது, ஆனாலும் நீளத்தை கொஞ்சம் குறைத்திருக்கலாம்.
இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி, எந்த படத்தை எடுத்தாலும் ரொம்பவே Detail-ஆக Research செய்து திரையில் மிகச்சிறந்த ஒரு அனுபவத்தை தரக் கூடியவர். செம்மரக் கடத்தல் என்ற முக்கியமான பின்னணியில் காவல்துறையின் ரகசிய நடவடிக்கையையும் அதற்குப் பின்னால் இருக்கும் மனித உணர்வுகளையும் இணைத்து திரைக்கதை அமைத்துள்ளார். தனுஷ், சாய் பல்லவியின் ரகசிய ஆபரேஷன் படத்துக்கு ஒரு திரில்லை தருகிறது. நடு இரவில் காட்டில் நடக்கும் சண்டைக்காட்சியும், சிறைச்சாலையில் நடக்கும் சண்டைக் காட்சியும் ரசிக்க வைக்கின்றன. திருப்பதி, திருவண்ணாமலையை இணைத்த விதம் சிறப்பு. கதையின் பின்னணியும் நடிகர்களின் பங்களிப்பும் படத்தை Engaged-ஆக வைக்கிறது. மொத்தத்தில் படக்குழுவின் உழைப்பும், இந்த களத்தை எடுத்து அழகாக சொல்ல எடுத்துக் கொண்ட முயற்சியும் நம்மை நிச்சயம் திரையரங்கில் பார்க்க வைக்கிறது.

