புராணக் கதையான சத்தியவான் சாவித்திரி கதையை தழுவி ஒரு சில தமிழ் திரைப்படங்கள் (சாவித்திரி, மணிரத்னத்தின் ரோஜா) வெளிவந்திருக்கின்றன. அந்த வகையில் அந்த கதையின் மையத்தை தழுவி கோர்ட் ரூம் டிராமாவாக வெளியாகி இருக்கிறது இந்த ‘சத்தியவான் சாவித்திரி’. கீர்த்தி சுரேஷ், மிஷ்கின் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்க உருவாகியுள்ள இந்த படத்தை அறிமுக இயக்குனர் பிரவீன் விஜய் இயக்கியுள்ளார். திருமண உறவு, கொலை வழக்கு, நீதிக்கான போராட்டம் என வித்தியாசமான களத்தில் பயணிக்கும் இந்த படம் எப்படி இருக்கு? என்பதை இந்த விமர்சனத்தில் பார்க்கலாம்.
படத்தின் கதைப்படி, நாயகி கீர்த்தி சுரேஷ் வழக்கறிஞராக வேண்டும் என்ற கனவுடன் இருக்கும் ஒரு இளம்பெண். இதற்கிடையில் அவருக்கு விருப்பமில்லாமல் திருமணமும் அரங்கேறுகிறது. ஓரளவு திருமண உறவு சீராகும் நேரத்தில் ஒரு எதிர்பாராத சூழலில் கீர்த்தியின் கணவர் கொலைக் குற்றச்சாட்டில் சிக்கிக் கொள்கிறார். அவருக்கு எதிராக கீர்த்தியின் ஆதர்சமான, அவரின் குருவான மூத்த வழக்கறிஞர் மிஷ்கின் களம் இறங்க அவரை எதிர்த்து தன் கணவரை காப்பாற்ற நீதிமன்றத்தில் வழக்கறிஞராக களமிறங்குகிறார் கீர்த்தி. அனுபவமிக்க மிஷ்கினை எதிர்த்து வழக்கை வென்றாரா? நீதியை நிலை நாட்டினாரா? தன் கணவரை வழக்கில் இருந்து மீட்டாரா? அந்த கொலையை செய்த உண்மையான கொலையாளி யார்? தனக்கு விருப்பமான வழக்கறிஞர் தொழிலில் வெற்றியை பெற்றாரா? என்பதே மீதிக்கதை.
நடிகையர் திலகமாக மாறி தேசிய விருதையும் பெற்ற கீர்த்தி சுரேஷ் மீண்டும் ஒரு சாவித்திரி கதாபாத்திரத்தில் அவரது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார். நாயகியை மையப்படுத்திய கதைகளில் தொடர்ந்து தானும் ஒரு ஸ்டார் என்பதையும் நிரூபித்து வருகிறார். நீதிமன்றக் காட்சிகளில் கீர்த்தி சுரேஷ் இன்னொரு பரிமாணத்தில் மிளிர்கிறார். ஆரம்பத்தில் தனியாக ஒரு வழக்கை கையாளும்போதும், அதன் பின் அவரது கணவர் வழக்கில் வாதிடும் காட்சிகளும் அவரது கதாபாத்திரத்தின் கிராஃபை அழகாக காட்டியுள்ளது.
அசுர பலத்துடன் இருக்கும் நம்பர் 1 வழக்கறிஞராக மிஷ்கின். அவரது Attitude மற்றும் body language மூலமே அவரது கதாபாத்திரத்தில் கனகச்சிதமாக பொருந்துகிறார். மிரட்டலான நடிப்பை தந்திருக்கிறார். புத்திசாலி வழக்கறிஞராக மிகச்சிறந்த நடிப்பை வழங்கியிருக்கிறார். ஆரம்பத்தில் கீர்த்தியின் குருவாக இருந்து பின் எதிர்தரப்பு வழக்கறிஞராக அவர் கீர்த்தி சுரேஷூடன் மோதும் காட்சிகளில் சுவாரஸ்யப்படுத்துகிறார்.
சாருகேஷ் கீர்த்தி சுரேஷின் கணவராக, மிக இயல்பாக, எந்தவித பதட்டமும் இல்லாமல் நடித்திருக்கிறார். பாலசரவணன் அடிக்கும் கவுண்டர்கள் எல்லாம் சிரிக்க வைக்கின்றன. ஷில்பா மஞ்சுநாத், பிரிகிடா இருவருமே சின்ன கதாபாத்திரம் என்றால் அழுத்தமான, கவனத்தை ஈர்க்கின்ற கதாபாத்திரங்களில் ஸ்கோர் செய்திருக்கிறார்கள். மதுசூதனராவ், சுந்தர்ராஜன், மாலா பார்வதி ஆகியோரும் சிறப்பான பங்களிப்பு செய்திருக்கிறார்கள்.
சாம்.சி.எஸ் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் நன்றாகவே கதைக்கு ஏற்ற வகையில் சிறப்பாக அமைந்திருக்கிறது. இரண்டாம் பாதியில் விறுவிறுப்புக்கு ஏற்ற பின்னணி இசையை தந்திருக்கிறார். அருள் வின்செண்ட் ஒளிப்பதிவு கலர்ஃபுல்லாகவும், காட்சிகளில் உணர்வுகளையும் அழகாக கொண்டு வந்திருக்கிறது. ஜி.கே.பிரசன்னா படத்தொகுப்பும் திரைக்கதையின் விறுவிறுப்புக்கு துணை புரிகின்றது.
இயக்குனர் பிரவீன் எஸ் விஜய் சத்தியவான் சாவித்திரி கதையை ஒரு சிறப்பான கோர்ட் ரூம் தளத்தில் மிக சுவாரஸ்யமாகவும், விறுவிறுப்பாகவும் சொல்லியிருக்கிறார். நாயகியை மையப்படுத்திய ஒரு கதையில் வலுவான ஒரு எதிர் கதாபாத்திரத்தை வைத்து அதை மிக சுவாரஸ்யமான திரைக்கதை மூலம் சொல்லி நல்ல ஒரு கோர்ட் ரூம் திரைப்படத்தை தந்திருக்கிறார். முதல் வழக்கிலேயே நல்ல ஒரு திருப்பத்தை வைத்து ஆச்சர்யப்படுத்திய இயக்குனர் இரண்டாம் பாதியில் இன்னொரு பெரிய ட்விஸ்டை வைத்து அட போட வைக்கிறார். எளிய மக்களுக்கும் புரியும் வகையிலும் கோர்ட் விஷயங்களை அழகாக சொல்லியிருக்கிறார். மொத்தத்தில் ஒரு நல்ல நீதிமன்றப் பின்னணி படத்தை தந்து முதல் படத்திலேயே சிக்ஸர் அடிக்கிறார் இயக்குனர் பிரவீன் எஸ் விஜய். நிச்சயம் ரசிகர்களுக்கு ஒரு சுவாரஸ்யமான திரையரங்க அனுபவத்தை கொடுக்கும்.

