தமிழில் வெளியாகும் Original Series பிரிவில் தனக்கென ஒரு தனித்துவமான இடத்தை உருவாக்கி இருக்கிறது Zee 5. அந்த வகையில் தற்போது Zee5-யில் வெளியாகி இருக்கும் ஒரு தொடர் தான் ‘ஆக்டோபஸ்’ (Octopus). மர்மங்கள் நிறைந்த ஒரு பரபரப்பான சஸ்பென்ஸ் திரில்லராக வெளியாகி இருக்கும் இந்த தொடரில் அஷ்வின் குமார், அர்ச்சனா ரவிச்சந்திரன், வினோத் கிஷன், சித்து குமரேசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க, ஜெயச்சந்திர ஹாஷ்மி இயக்கியுள்ளார். 7 எபிசோடுகளைக் கொண்ட இந்த தொடர் எப்படி இருக்கு? என்பதை இந்த விமர்சனத்தில் பார்க்கலாம்.
இந்த தொடரின் கதைப்படி, அன்பு நகர் என்ற ஒரு குடியிருப்பில் வசிக்கும் குடும்பத்தினர் எல்லோரும் ஒரே குடும்பம் போல அன்புடன், மிக அன்யோன்யமாக வாழ்ந்து வருகிறார்கள். அந்த குடியிருப்பில் ஒரு இளம் தம்பதி வந்து குடியேறுகிறார்கள். புதிதாக வந்த பெண் அந்த குடியிருப்பில் அனைவருக்கும் பிடித்தமானவளாக மாறுகிறாள். ஆனால் அவள் கணவன் அவளை தொடர்ந்து துன்புறுத்துகிறான். அதை அந்த குடியிருப்புவாசிகள் பொறுத்துக் கொள்ள முடியாமல் அவளை காப்பாற்ற வேண்டும் என அவர்களால் முடிந்த எல்லா முயற்சிகளை மேற்கொள்கிறார்கள். ஒரு கட்டத்தில் அவள் காணாமல் போக, அவளுக்காக அந்த குடியிருப்புவாசிகள் ஒன்றிணைகின்றனர். இந்த தேடலில் இதுவரை வெளிவராத பல மறைந்திருக்கும் உண்மைகளும் வெளிவருகின்றன. Octopus கரங்களை போல எதிர்பாராத திசைகளில் கதை விரிவடைகிறது. அடுத்தடுத்து பல திடுக்கிடும் திருப்பங்களுடன் நகர்கிறது மீதிக்கதை.
அஷ்வின் குமார் வருண் என்ற கதாபாத்திரத்தில் வித்தியாசமான, பல்வேறு பரிமாணங்களை வெளிப்படுத்தும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். முதல் 4 எபிசோடுகளில் ஒருவராகவும், மீதி எபிசோடுகளில் அப்படியே வேறு ஒரு மனிதராகவும் மாறி நம்மை ஆச்சர்யப்படுத்துகிறார். அர்ச்சனா ரவிச்சந்திரனுக்கு இதுவரை கிடைக்காத ஒரு மிகப்பெரிய வாய்ப்பு. துடிப்பான ஒரு இளம் பெண்ணாக நம் மனதை கவர்கிறார். இறுதிக் காட்சியில் கைதட்டல் பெறுகிறார்.
வினோத் கிஷன் மீண்டும் ஒரு முறை சிக்கலான ஒரு கதாபாத்திரத்தில், அனைத்து வித உணர்வுகளையும் வெளிப்படுத்தும் நடிப்பை தந்திருக்கிறார். சித்து குமரேசன் கதையை திசைமாற்றும் மிக முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் வந்து நல்ல நடிப்புடன் ஸ்கோர் செய்திருக்கிறார். பகவதி பெருமாள், கோடங்கி வடிவேலு, பாலாஜி வேணுகோபால், ஆர்ஜே சரித்திரன், கலைவாணி பாஸ்கர் உள்ளிட்ட மற்ற எல்லா நடிகர்களுமே கதைக்கு ஏற்ற இயல்பான, சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் கண்ணா, பெரும்பாலும் ஒரு குடியிருப்பில் நகரும் கதை என்றாலும் அதை அலுப்பு தட்டாத வண்ணம் காட்சிப்படுத்தியிருப்பது பாராட்டுக்குரியது. இரவுக் காட்சிகளிலும் மிகச் சிறப்பாக ஒளிப்பதிவு செய்திருக்கிறார். தீபன் சக்ரவர்த்தியின் இசை இந்த தொடருக்கு மிகப்பெரிய பலம். பின்னணி இசையில் தொடரின் சஸ்பென்ஸ் மூடுக்கு ஏற்ற இசையையும், டைட்டில் இசையையும் வழங்கியுள்ளார். கிளைமாக்ஸில் வரும் பாடல் மொத்த தொடரின் எமோஷனையும் அழகாக கொண்டு வந்து முடித்திருக்கிறது. படத்தொகுப்பு, கலை இயக்கம், காஸ்ட்யூம்ஸ் என மற்ற துறைகளும் சிறப்பான பங்களிப்பை செய்திருக்கிறார்கள்.
இயக்குநர் ஜெயச்சந்திர ஹாஷ்மி ஒரு குடியிருப்புக்குள் வாழும் மனிதர்களின் வாழ்க்கை பின்னணியில் ஒரு சஸ்பென்ஸ் திரில்லர் தொடரை தந்திருக்கிறார். என்ன தான் அன்யோன்யமாக பழகினாலும் எல்லோருக்குள்ளும் ரகசியம் புதைந்து இருக்கும் என்பதை சொல்லியிருக்கிறார். ஆரம்ப எபிசோடுகளில் சஸ்பென்ஸ் திரில்லர் என்ற ஒரு கோணத்தில் பயணிக்கும் கதை 4 எபிசோடுகளுக்கு பிறகு சமூகத்தில் இருக்கும் ஒரு மிக முக்கிய பிரச்சினை என்ற கோணத்தில் மாறும் இடம் சிறப்பு. யூகிக்க முடியாத அளவுக்கு சஸ்பென்ஸை மெயிண்டெயின் செய்த விதம் அருமை.
இன்வெஸ்டிகேஷன், கோர்ட் proceedings என பல அம்சங்களும் ரசிக்கும்படி இருந்தது. வழக்கமான ஒரு போலீஸ் இன்வெஸ்டிகேடிவ் திரில்லராக இல்லாமல், சாதாரண மனிதர்களே துப்பறியும் கதாபாத்திரங்களாக மாறும் வித்தியாசமான முயற்சி. யார் உண்மையைச் சொல்கிறார்கள், யார் எதையோ மறைக்கிறார்கள் என்ற கேள்விகளை பார்வையாளர்களுக்கும் தொடர்ந்து எழுப்பி நம்மையும் கதையுடன் ஒன்ற வைக்கும் இந்த தொடர், வார இறுதியில் குடும்பத்துடன் அமர்ந்து பார்க்க வைக்கும் ஒரு Binge watch தொடர். அதில் சமூகப் பிரச்சினையும் அழுத்தமாக பேசி ஜெயித்திருக்கிறார் ஜெயச்சந்திர ஹாஸ்மி.

