காக்கா – விமர்சனம்!

ஆரன் பிக்சர்ஸ் சார்பில் ரேணுகா கிருஷ்ணசாமி தயாரிப்பில் தேனி பரமன் இயக்கத்தில் உருவாகியுள்ள காமெடி திரைப்படம் ‘காக்கா. இனிகோ பிரபாகர், சென்றாயன், ரோஸ்மின், சாய் தன்யா, அப்புக்குட்டி, முனீஷ்காந்த், கொட்டாச்சி உட்பட பலர் நடித்துள்ளனர் இந்த படம் எப்படி இருக்கு? ரசிகர்களை கவர்ந்ததா? பார்க்கலாம்.

படத்தின் கதைப்படி, மதுரையில் குடும்பத்துடன் வசிக்கும் நாயகி ரோஸ்மினின் திருமணம் மண மேடை வரை வந்து மாப்பிள்ளையான தேனி கே பரமன் மோசமானவன் என தெரிந்து நின்று விடுகிறது. அதன் பின் அவன் தொல்லை தாங்காமல் குடும்பமே சென்னைக்கு வருகிறது. வந்த இடத்தில் நாயகியின் தங்கை சாய் தன்யாவை கூலி வேலை பார்க்கும் சென்றாயன் காதலிக்கிறார். முதலில் அக்காவுக்கு திருமணம் நடந்தால் தான் தங்கையை தான் கரம் பிடிக்க முடியும் என சென்றாயன் அதற்கான வேலைகளிலும் இறங்குகிறார். ஒரு கட்டத்தில் நாயகி ரோஸ்மினுக்கு இனிகோ பிரபாகர் மேல் காதல் வருகிறது. என் அக்காவுக்கு அவன் விரும்பியவனை திருமணம் செய்து வைத்தால் நான் உன்னையே திருமணம் செய்து கொள்கிறேன என சொல்கிறார் சாய் தன்யா. என்று தங்கை சொல்கிறாள். அதே நேரம் மதுரையில் இருந்து நாயகியை அடைந்தே தீருவேன் என கிளம்புகிறார் தேனி கே பரமன். இந்த முக்கோண சூழலில் நாயகி விரும்பியபடி திருமணம் நடந்ததா? சென்றாயன் காதல் என்ன ஆனது? என்பதை கலகலப்பான காமெடி கலந்து சொல்லிருக்கும் படமே “காக்கா”.

நாயகனாக இனிகோ பிரபாகர். அவர் திரையில் தோன்றும் நேரம் கொஞ்சம் குறைவு தான் என்றாலும் நாயகனுக்குரிய குணங்களுடன் அமைந்த ஒரு கதாபாத்திரம். மரக்கன்று நடுவதின் அவசியத்தை வலியுறுத்தும் ஒரு இயற்கை ஆர்வலராக நடித்திருக்கிறார். நாயகியாக ரோஸ்மின். முதிர்ச்சியான நல்ல நடிப்பால் ஸ்கோர் செய்கிறார். இந்த ஜோடியின் கெமிஸ்ட்ரி நன்றாகவே திரையில் தெரிகிறது.

சென்றாயன், ஹீரோவை விட திரையில் அதிகம் தோன்றுபவர் இவர் தான். ஆனாலும் தனக்கே உரிய காமெடி சென்ஸ் மூலம் பல இடங்களில் சிரிக்க வைக்கிறார். காதல் காட்சிகளிலும் அட நம்ம சென்றாயனா என ஆச்சர்யப்பட வைக்கிறார். சாய் தன்யா. ஏற்கனவே சில காமெடி கலந்த காதல் படங்களில் நடித்தவர், இந்த படத்திலும் அவரின் குழந்தைத்தனம் கலந்த அந்த அழகோடு நம்மை ரசிக்க வைக்கிறார். ரோஸ்மின் முழுக்க சீரியஸ் என்றால் இவர் வரும் காட்சிகள் கலகலப்பு.

இவர்களை தாண்டி நானே களத்துல இறங்குறேண்டா என இயக்குனர் தேனி கே பரமன் அவர் பங்குங்கு வந்து ரகளை செய்கிறார். அவர் நல்லவரா? கெட்டவரா? என கடைசி வரை தெரிந்து கொள்ள முடியாத அளவுக்கு காமெடியாகவும் வந்து அலப்பறை செய்து விட்டு போகிறார். அப்புக்குட்டி வழக்கம் போல அவர் காட்சிகளில் ஸ்கோர் செய்கிறார். முனிஷ்காந்த் வழக்கம் போல அவரது ஸ்டைலில் பல்பு வாங்கும் காட்சிகளிலும், திருமணத்தை நடத்தி வைக்க திட்டம் போடும் காட்சிகளில் சிரிப்பை வரவழைக்கிறார். மணிமேகலை, கொட்டாச்சி, மற்ற நடிகர்கள் என அவர்களும் அவர்கள் பங்கை சிறப்பாகவே செய்திருக்கிறார்கள்.

சுரேஷ்குமார் ஒளிப்பதிவில் சென்னை விருகம்பாக்கம், சாலிகிராமம், வளசரவாக்கம் என சுற்றி சுற்றி படம் பிடித்திருந்தாலும் பார்ப்பதற்கு ஏதுவாக காட்சிகளை அமைத்திருக்கிறார். கெவின் டிகோஸ்டா இசையில் வரும் அந்த இரண்டு காதல் பாடல்களும் கேட்பதற்கு இனிமை, அதை படமாக்கியிருந்த விதமும் அருமை. பின்னணி இசையும் காமெடி படத்துக்கு ஏற்ப அமைத்திருக்கிறார்.

இயக்குனர் தேனி கே பரமன். வன்முறை படங்களாக வந்து கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில் தானும் அதற்குள் சிக்கிக் கொள்ளாமல் குடும்பத்துடன் அனைவரும் பார்த்து ரசிக்கும்படியான ஒரு படத்தை கொடுத்திருக்கிறார். முதல் பாதி முழுக்க காமெடியில் பயணப்படும் படம் இரண்டாம் பாதியில் ஒரு காதலையும் அழகாக காட்டியிருக்கிறது. பின் கிளைமாக்ஸில் காதல் ஜோடிக்கு திருமணம், அதை சுற்றிய காமெடி கலாட்டா என நாம் பார்த்து ரசித்த படங்களின் ரூட்டில் பயணிக்கிறது. இந்த கதைக்குள்ளும் நம்மாழ்வார், சின்ன கலைவாணர் விவேக் ஆகியோரை நினைவுபடுத்தியது, செல் முருகன் கேமியோ காட்சியில் நடிக்க வைத்தது என கொஞ்சம் எக்ஸ்ட்ராவா ஸ்கோர் செய்திருக்கிறார். மொத்தத்தில் எந்த முகம் சுழிப்பும் இல்லாமல் குடும்பத்துடன் பார்க்கக் கூடிய ஒரு படமாக அமைந்திருக்கிறது இந்த “காக்கா”.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *