ரிவால்வர் ரீட்டா – விமர்சனம்!

நாயகி மையப்படுத்திய கதைகள் தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களாகவே வெளிவந்து கொண்டிருக்கிறது. மாயா, கோலாமாவு கோகிலா என வெற்றிப்படங்களை உதாரணமாக சொல்லலாம். அந்த வரிசையில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடித்திருக்கும் படம் “ரிவால்வர் ரீட்டா”. Passion Studios சார்பில் சுதன் சுந்தரம் மற்றும் The Route நிறுவனத்தின் சார்பில் ஜகதீஷ் பழனிச்சாமி இணைந்து தயாரிக்க, இயக்குநர் JK சந்துரு இயக்கியிருக்கிறார். டார்க் காமெடி வகை படமான இந்த படம் எப்படி இருக்கு? கீர்த்தி சுரேஷூக்கு வெற்றிப்படமாக அமைந்ததா? பார்க்கலாம்.

படத்தின் கதைப்படி, கேங்க்ஸ்டர் சூப்பர் சுப்பராயன் அவரது மகன் சுனிலை பழைய பகைக்காக பழிவாங்க திட்டமிடுகிறார் அஜய் கோஷ். சூப்பர் சுப்பராயன் தலையை கொண்டு வந்தால் 4 கோடி என நிர்ணயிக்கிறார் அஜய் கோஷ். பெண் பித்தரான சுப்பராயனை பிராத்தலை வைத்தே வலையில் வீழ்த்த கல்யாண் மாஸ்டர் திட்டமிடுகிறார். ஆனால் திட்டம் சொதப்பி சூப்பர் சுப்பராயன் கீர்த்தி சுரேஷ் வீட்டிற்குள் சென்று விடுகிறார். போதையில் இருக்கும் அவரோடு ஏற்படும் வாக்குவாதம் முற்றி கைகலப்பில் அவர் இறந்து விடுகிறார். அவர் பாடியை எப்படி மறைப்பது என கீர்த்தி சுரேஷ் குடும்பத்தினர் திட்டமிடுகிறார்கள். அந்த பாடியை கைப்பற்றி அஜய் கோஷிடம் கொடுத்து கோடிகளை வாங்க முயற்சிக்கிறார்கள் ரவுடி கும்பல். இதற்கிடையில் தந்தை மரணத்தையும், யார் கொன்றது என்பதையும் சுனில் கண்டுபிடிக்கிறாரா? அவர்களிடம் இருந்து கீர்த்து குடும்பம் எப்படி தப்பிக்கிறது என்பதை கலகலப்பான காமெடியுடன் சொல்வதே மீதிக்கதை.

நாயகி கீர்த்தி சுரேஷ். நயன்தாராவுக்கு எப்படி ஒரு கோலமாவு கோகிலா அமைந்ததோ அப்படி இந்த ரிவால்வர் ரீட்டா கீர்த்திக்கு. கீர்த்தியின் நடிப்பும், ஸ்கிரீன் பிரசன்ஸூம், காமெடி டைமிங்கும் அட்டகாசம். கார் சேஸிங் காட்சிகள், பில்டப் காட்சிகள், காமெடி காட்சிகள் என அத்தனையும் அசத்தல். கீர்த்தியின் அம்மாவாக ராதிகா சரத்குமார் காமெடியில் பின்னிப் பெடல் எடுக்கிறார். கடவுள் பக்தியுடன் ஒவ்வொரு சின்ன சின்ன விஷயத்துக்கும் வேண்டுதல் வைக்கும் காட்சிகளில் சிரிக்க வைக்கிறார். கீர்த்தி, ராதிகா இடையேயான கெமிஸ்ட்ரி செம்ம. கீர்த்தியின் சகோதரிகள் காயத்ரி ஷான், அக்ஷதா அஜித் இருவருமே கதையில் முக்கிய அங்கமாகவே இருக்கிறார்கள்.

படம் முழுக்க எங்கு திரும்பினாலும் நடிகர் பட்டாளம் என சொல்லும் அளவுக்கு ஏகப்பட்ட நடிகர்கள். சுனில் அலட்டல் இல்லாத நடிப்பாகட்டும், அஜய் கோஷின் ரகளையான காமெடி நடிப்பாகட்டும், ரெடின் கிங்க்ஸ்லீயின் காமெடியாகட்டும், கல்யாண் மாஸ்டர், கதிரவன், சென்றாயன், சஞ்சீவ் குரூப்பின் காமெடி கலாட்டாவாகட்டும், ஜான் விஜய், சுரேஷ் சக்ரவர்த்தி, சூப்பர் சுப்பராயன், ராமச்சந்திரன், பிளேடு ஷங்கர் என மற்றவர்களின் பங்களிப்பு என படம் முழுக்க ஒரு திருப்தியான அனுபவமாகவே அமைந்திருக்கிறது.

தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு டார்க் காமெடி படத்துக்கான பிரசண்டேசனை தந்திருக்கிறது. அதை மிக அழகாக்கி தந்திருக்கிறது கலை இயக்குனர் MKT-யின் உழைப்பு. ஷான் ரோல்டன் இசை படத்துக்கான வைப் மீட்டரை அழகாக செட் செய்திருக்கிறது. இந்த படத்தை கச்சிதமாக எளிதில் புரியும்படி, காமெடி ஒர்க் அவுட் ஆகும் விதத்தில் தொகுத்திருக்கிறார் பிரவீன் கே.எல்..

இயக்குனர் JK சந்துரு. நல்ல ஒரு டார்க் காமெடி படத்துக்கான களத்தை மிக அற்புதமாக செட் செய்திருக்கிறார். ஏகப்பட்ட நடிகர்கள் இருந்தாலும் அவர்கள் அனைவருக்கும் நினைவில் நிற்கும் ஒரு கதாபாத்திரத்தை தந்து பொழுதுபோக்கு அம்சங்களிலும் குறைவில்லாத ஒரு படத்தை தந்திருக்கிறார். கோலமாவு கோகிலா, திருஷ்யம் போன்ற படங்களின் நல்ல ஒரு காக்டெயிலாக அமைந்திருக்கிறது. படத்தின் ஆரம்பம் முதல் இறுதி காட்சி வரையிலும் ரசிக்கும் படி அமைந்திருக்கும் ஒரு காமெடி படமாக நல்ல ஒரு தியேட்டர் அனுபவத்தை தருகிறது. கீர்த்தி சுரேஷூக்கு மீண்டும் ஒரு சோலோ வெற்றிப்படமாக அமைந்திருக்கிரது இந்த “ரிவால்வர் ரீட்டா”.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *