ரஜினி கேங் – விமர்சனம்!

MISHRI ENTERPRISES தயாரிப்பில் ரஜினி கிஷன், திவிவிகா, முனிஷ்காந்த், மொட்டை ராஜேந்திரன் மற்றும் பலர் நடிக்க, ரமேஷ் பாரதி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் “ரஜினி கேங்”. ஹாரர் காமெடி படமான ரஜினி கேங் படம் எப்படி இருக்கு? என்பதை இந்த விமர்சனத்தில் பார்க்கலாம்.

படத்தின் கதைப்படி, நாயகன் ரஜினி கிஷனும், ஊர்த்தலைவர் பெண்ணான நாயகி திவிவிகாவும் காதலிக்கிறார்கள். இருவரும் வீட்டை விட்டு ஓடிப்போக, அதைத் தெரிந்து கொண்ட ஊர் மக்கள் அவர்களை துரத்த, வழியில் முனிஷ்காந்த் காரில் லிஃப்ட் கேட்டு ஏறுகிறார்கள். அதே காரில் திருடனான கல்கியும் ஏறுகிறார். அவர்கள் அனைவரும் ஏற்காட்டில் ஒரு குழப்பமான சூழலில் நிற்க, அதே நேரம் நாயகியின் முறைப்பையனான கூல் சுரேஷ் அவர்களை துரத்துகிறார். அந்த சூழலில் நாயகிக்கு தாலி கட்டி திருமணம் செய்து கொள்கிறார் நாயகன் ரஜினி கிஷன். அந்த தாலி ஏறினால் நிறைய அமானுஷ்ய சம்பவங்கள் நடக்கும், நாயகி உயிருக்கே ஆபத்து என்கிறார்கள். இதையெல்லாம் மீறி நாயகி தப்பித்தாரா? நாயகன் நாயகி ஜோடி இதை எப்படி அணுகியது? அந்த குறிப்பிட்ட தாலியை கட்டியதால் நடந்த அமானுஷ்ய சம்பவங்கள் என்ன? என்பதே மீதிக்கதை.

நாயகன் ரஜினி கிஷன். பெரிய பில்டப் எதும் இல்லாமல் ஹாரர்,காமெடி படத்துக்கு ஏற்ப நடித்துள்ளார். அடிக்கடி நடந்த விஷயங்களை மறப்பது, காதலியிடம் திட்டு வாங்குவது, பேயிடம் அடி வாங்குவது என சிரிக்க வைக்கிறார்.பாடல்களிலும் ஓரளவு நன்றாகவே நடனம் ஆடுகிறார்.

நாயகி திவிவிகா. படத்திலேயே அளவான மீட்டரில் நல்ல நடிப்பை தந்ததில் முதலிடம் இவருக்கு தான். தன் தேர்ந்த நடிப்பால் அசால்டாக மற்றவர்களை தூக்கி சாப்பிட்டு ஸ்கோர் செய்கிறார். முதலிரவு பாடல் காட்சியில் சொக்க வைக்கிறார்.

மொட்டை ராஜேந்திரன் ஜடாமுடி ஜம்புலிங்கமாக, ஆவிகள் சாந்தி மையம் நடத்தும் சாமியாராக வந்து குலுங்கி சிரிக்க வைக்கிறார். படம் முழுக்க தூங்கி வழியும் கதாபாத்திரத்தில் முனிஷ்காந்த் ரசிக்க வைக்கிறார். நாயகியை தேடி அலையும் முறைப்பையனாக கூல் சுரேஷ் படம் முழுக்க ரகளை. நாயகன், நாயகி உடன் படம் முழுக்க பயணிக்கும் ஒரு திருடனாக கல்கி ராஜா திருட்டு முழு நடிப்பால் ரசிக்க வைக்கிறார். ராம்போ நாய் படத்தில் உபயோகித்த விதமும் அருமை.

இசையமைப்பாளர் M.S. ஜோன்ஸ் ரூபர்ட் இசையில் பாடல்கள் ரசிக்கும் விதத்தில் அமைந்திருக்கிறது. குறிப்பாக அந்த முதலிரவு பாடல் மனதுக்கு இதம். அதை காட்சிப்படுத்திய விதமும் கண்களுக்கு விருந்து. பேய்க்குத்து பாடலும் நல்ல ஒரு குத்து. சதீஷ் குமார் ஒளிப்பதிவு படத்தை பார்க்க வைக்கும் விதத்தில் கலர்ஃபுல்லாக அமைந்திருக்கிறது.

இயக்குநர் M ரமேஷ் பாரதி ஹாரர் காமெடி படத்துக்கு ஏற்ற ஒரு கதையை எடுத்து அதில் காமெடியில் நன்றாகவே ஒர்க் அவுட் செய்திருக்கிறார். முதல் பாதி முழுக்க சாதாரண காமெடி படமாகவே நகரும் கதை, இரண்டாம் பாதி ஹாரர் காமெடி ஜானருக்கு நகர்கிறது. ஆனால் லொகேஷனாக ஒரே இடத்தில் தங்கி விடுகிறது. ஆனாலும் எல்லா காமெடியன்களும் ஒரே இடத்தில் குவிந்து காமெடி களை கட்டுகிறது. மொத்தத்தில் குடும்பத்துடன் பார்த்து ரசிக்கும் ஒரு  ஹாரர் காமெடி படமாக வந்திருக்கிறது ரஜினி கேங்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *