காத்துவாக்குல ஒரு காதல் – விமர்சனம்!

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான ஒரு படம் “காத்துவாக்குல ரெண்டு காதல்”. அதுல ஒரு காதலை கட் பண்ணி உருவாகியிருக்கும் படம் தான் “காத்துவாக்குல ஒரு காதல்”. மாஸ் ரவி இயக்கி, நாயகனாக நடித்திருக்கும் படம். எப்படி இருக்கு? பார்க்கலாம்.

படத்தின் கதைப்படி, நான் லீனியரில் நகரும் கதை. நாயகன் மாஸ் ரவியும், நாயகி லட்சுமி பிரியாவும் காதலிக்கிறார்கள். இந்த அழகான காதலுக்கு இடையில் ரவுடி கோஷ்டிகள் இடையே ஏற்படும் மோதல். அதில் அடுத்தடுத்து பல கொலைகள் நடக்கின்றன. ஒரு நாள் மாஸ் ரவி திடீரென்று காணாமல் போகிறார். அவரை தேடி அலைகிறார் நாயகி. பின் ஒரு ரவுடியாக அவரை சந்திக்கிறார். அவருக்கு ஃபோன் செய்தால் ஃபோனை எடுத்து பேசினாலும் கண்டபடி திட்டி விட்டு வைக்கிறார். மாஸ் ரவி ஏன் திடீரென மாறினார்? மாற்றத்திற்கு காரணம் என்ன? என்பதே மீதிக்கதை.

நாயகனாக மாஸ் ரவி. ரவுடித்தனம் மற்றும் மென்மையான நபர் என இருவேறு பரிமாணங்களில் நன்றாகவே நடித்திருக்கிறார். உருகி உருகி காதலிக்கும்போது என்னப்பா இப்படி இருக்கிறார் என நினைக்க வைக்கிறார். ரவுடியாக அதிரடி காட்டுகிறார். படத்தை தூக்கி நிறுத்துவதே நாயகி லட்சுமி பிரியா. காதலனை தேடி அலையும்போதும், இரண்டாம் பாதியிலும் ஸ்கோர் செய்கிறார். அவர் நடிப்பு மூலம் பார்வையாளர்களை கவர்கிறார்.

சூப்பர் சுப்பராயன், சாய் தீனா, ஆதித்யா பாஸ்கர், தங்கதுரை, கல்லூரி வினோத், பவர் ஸ்டார், மேனாக்ஸா, மிப்பு, மொசக்குட்டி என மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்களும் நன்றாகவே நடித்திருக்கிறார்கள்.

ஜிகேவி, மிக்கின் அருள்தேவ் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசையும் காட்சிகளுக்கு ஏற்ப அமைந்திருக்கிறது. ராஜதுரை மற்றும் சுபாஷ் மணியன் ஒளிப்பதிவும் படத்துக்கு பலம்.

இயக்குனர் மாஸ் ரவி ஒரு அழகான காதல் கதையை கொஞ்சம் ட்விஸ்ட் கலந்து ஒரு படமாக தந்திருக்கிறார். காதல் காட்சிகளும் கவிதையாக அமைந்துள்ளது. அதில் வரும் கோஷ்டி மோதல், ரவுடி பின்னணியும் ஆச்சர்யம். காதலன் தொலைவது, அவரே ரவுடியாக சுற்றுவது என அதை சுற்றியும் கொஞ்சம் மிஸ்டரி இருப்பதும் படத்துக்கு பெரும் பலம். முதல் பாதி என்னய்யா சொல்ல வராங்க என்பது போல் இருந்தாலும் கடைசி 30 நிமிடங்கள் படத்தை தூக்கி நிறுத்துகிறது. மொத்த படத்தின் ஜீவனாக அமைந்துள்ளது. நிச்சயம் பார்க்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *