இயக்குநர்-நடிகர் சேரன் முதன்மை வேடத்தில் நடித்து பாராட்டுகளை குவித்த ‘தமிழ்க்குடிமகன்’ திரைப்படத்தை படைத்த இசக்கி கார்வண்ணன், லட்சுமி கிரியேஷன்ஸ் சார்பில் தயாரித்து இயக்கி இருக்கும் ‘பரமசிவன் பாத்திமா’ படத்தில் விமல் கதையின் நாயகனாக நடித்துள்ளார். வரும் ஜூன் 6 அன்று உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் ‘பரமசிவன் பாத்திமா’ வெளியாகிறது. இப்படத்தில் விமல் நாயகனாக நடிக்க சாயாதேவி, எம். எஸ். பாஸ்கர், மனோஜ் குமார், ஸ்ரீ ரஞ்சனி, ஆதிரா, அருள்தாஸ், சேஷ்விதா ராஜு, கூல் சுரேஷ், காதல் சுகுமார், வீரசமர் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
விழாவின் நாயகன் இசையமைப்பாளர் தீபன் சக்கரவர்த்தி பேசும்போது, “இப்படத்தில் பணியாற்றிய அனைவரும் என்னை விட சீனியர்கள். அவர்களிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டேன். பாடலாசிரியர் ஏகாதசி சொன்னது போல இந்த படத்தில் உள்ள ஐந்து பாடல்களும் வெவ்வேறு வகையிலானவை, அனைத்துப் பாடல்களும் மிகவும் சிறப்பாக வந்துள்ளன. இயக்குநர் இசக்கி கார்வண்ணன் மிகவும் தெளிவாக அவருக்கு தேவையான பாடல்களை வாங்கி விடுவார். படம் நிச்சயம் பெரும் வரவேற்பை பெரும்” என்றார்.
இயக்குநரும் எழுத்தாளருமான சுகா பேசும்போது, “இயக்குநர் இசக்கி கார்வண்ணன் எங்கள் நண்பர்கள் குழுவில் ஒருவர். இப்படத்தின் கதையை அவர் என்னிடம் கூறிய போது மகிழ்ச்சியாக இருந்தது. இந்திய சினிமாவை உலக அரங்கில் உயர்த்திப் பிடித்த சத்யஜித்ரே தனது படத்திற்கான கதைகளை தன்னை சுற்றி நடப்பவைகளிடம் இருந்தே உருவாக்கினார். அவ்வாறு இசக்கி கார்வண்ணனும் அவரது ஊரில் அவர் பார்த்த சம்பவங்களை கதையாக்கி படமாக்கி இருக்கிறார்” என்றார்.
நடிகர் காதல் சுகுமார் பேசும்போது, “இப்படத்தில் இயக்குநர் இசக்கி கார்வண்ணன் மிகவும் தைரியமான ஒரு விஷயத்தை சிறப்பாக கையாண்டு இருக்கிறார். ‘பரமசிவன் பாத்திமா’ படத்தில் ஒரு காவலராக நான் நடித்துள்ளேன். இந்த வாய்ப்பை கொடுத்த இயக்குநருக்கு நன்றி. எம் எஸ் பாஸ்கர் போன்ற திறமையான கலைஞர்களுடன் நடித்தது மிக்க மகிழ்ச்சி” என்றார். .
தயாரிப்பாளர் பி எல் தேனப்பன் பேசும்போது, “இயக்குநர் இசக்கி கார்வண்ணன் சினிமாவை காதலிப்பவர். ஒரு வலுவான கதையுடன் தற்போது ‘பரமசிவன் பாத்திமா’ மூலம் வந்துள்ளார். நாயகன் விமலுக்கு வாழ்த்துகள், நடிகராக அறிமுகமாகும் ஒளிப்பதிவாளர் சுகுமாருக்கும் வாழ்த்துகள்” என்றார்.
இயக்குநர் பிரசாத் முருகேசன் பேசும்போது, “இயக்குநர் இசக்கி கார்வண்ணன் சினிமா மீது காதல் கொண்டவர். இப்படம் வெற்றியடைய அவருக்கும் அவரது குழுவினருக்கும் வாழ்த்து தெரிவிக்கிறேன். பாடலாசிரியர் ஏகாதசி அவர்கள் ‘கிடாரி’ திரைப்படத்தில் என் மீது நம்பிக்கை வைத்து பாடல் எழுதினார், அதற்காக அவருக்கு நன்றி. இசையமைப்பாளர் தீபன் சக்ரவர்த்திக்கு வாழ்த்துகள்” என்றார்.
நடிகர் எம் எஸ் பாஸ்கர் பேசும்போது, “புரட்சிகரமான ஃபாதர் பாத்திரத்தில் நான் இப்படத்தில் நடித்துள்ளேன். படக்குழுவினரும் படப்பிடிப்பு நடந்த ஊர் மக்களும் உறவினர் போல பழகினோம், மறக்க முடியாத அனுபவம். இப்படத்தை வெற்றி படமாக்க வேண்டும் என்று இறைவனை வேண்டிக் கொள்கிறேன்” என்றார்.
நடிகர் மகேந்திரன் பேசும்போது, “இசக்கி கார்வண்ணன் அவர்கள் எனக்கு ஊக்கமளித்தவர். எனவே இப்படத்தில் நடிக்குமாறு அவர் அழைத்துவுடன் மகிழ்ச்சியுடன் உடனே சம்மதித்தேன். இப்படம் வெற்றியடைய வாழ்த்துகிறேன்” என்றார்.
சாட்டை துரைமுருகன் பேசும்போது, “இயக்குநர் இசக்கி கார்வண்ணன் உணர்ச்சிக் குவியலான ஒரு நபர். அவரது உணர்ச்சி மொழிக்கானது, மண்ணுக்கானது, மக்களுக்கானது. இப்படத்தின் மூலம் ஒரு சிறந்த கருத்தை மக்கள் முன் வைக்கிறார். எங்கு சென்றாலும் நம் வேர்களை மறக்கக் கூடாது என்பதே அவர் சொல்லும் செய்தி” என்றார்.
நாயகன் விமல் பேசும்போது, “இயக்குநர் இசக்கி கார்வண்ணன், ஒளிப்பதிவாளர் சுகுமார், இசையமைப்பாளர் தீபன் சக்ரவர்த்தி, சாயா தேவி, எம் எஸ் பாஸ்கர் அவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் மனமார்ந்த நன்றி. இப்படம் வெற்றியடைய உங்கள் அனைவரின் ஆதரவும் தேவை,” என்றார்.
தயாரிப்பாளர்-இயக்குநர் இசக்கி கார்வண்ணன் பேசும்போது, “இது வாழ்வியல் சம்பந்தப்பட்ட கதை. என்னை சுற்றி வாழ்ந்த மக்களின் கதை. இது மதவாத படமல்ல, மனிதம் பேசும் படம். இசையமைப்பாளர் தீபன் சக்ரவர்த்தியும், பாடலாசிரியர் ஏகாதசியும் மிகச்சிறந்த பங்களிப்பை வழங்கி உள்ளார்கள். ஒளிப்பதிவாளர் சுகுமார் மிகவும் திறமை வாய்ந்த கலைஞர். இப்படம் அதற்கு மற்றுமொரு சான்று. விமல் ஒரு கடின உழைப்பாளி. சாயா தேவியும் சுகுமாரும் போட்டி போட்டு நடித்துள்ளனர். எம் எஸ் பாஸ்கர் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். எடிட்டர் புவன் படத்தொகுப்பு அருமை. இப்படி அனைவரும் சிறப்பான பங்களிப்பை அளித்தனர்” என்றார்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசும்போது, “சிறு வயதிலேயே சிறப்பான இசையை தம்பி தீபன் சக்ரவர்த்தி வழங்கி உள்ளார். இயக்குநர் இசக்கி கார்வண்ணனிடமும் இதைக் கூறியுள்ளேன். தம்பி ஏகாதசியின் வரிகள் வலிமை மிக்கவை. காவியப் படைப்பை தந்துள்ளார். முன்னோட்டத்தை பார்த்தவுடன் ஒளிப்பதிவாளர் யார் என்று தான் கேட்டேன். சுகுமார் என்று சொன்னவுடன் மிக்க மகிழ்ச்சியாக இருந்தது, ஒளியோடு விளையாடி இருக்கிறார். இப்படத்தில் நடித்துள்ள விமல் உள்ளிட்ட அனைவருக்கும் வாழ்த்துகள். மொழிப்பற்றும் இனப்பற்றும் என்னையும் இயக்குநர் இசக்கி கார்வண்ணனையும் இணைக்கிறது. ‘பரமசிவன் பாத்திமா’ திரைப்படம் சிறப்பாக உருவாகியுள்ளது. மிகவும் முக்கியமான ஒரு பிரச்சனையை துணிச்சலாக கையாண்டுள்ளார். அவரது போர்க்குணம் தான் இந்தக் கதையை படமாக எடுக்க காரணம். அவருக்கும் அவரது குழுவினருக்கும் பாராட்டுகள்” என்றார்.