குட் நைட், லவ்வர் என சின்ன பட்ஜெட்டில் நல்ல, தரமான படங்களை தொடர்ந்து கொடுத்து வரும் மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ், எம்.ஆர்.பி எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் திரைப்படம் “டூரிஸ்ட் ஃபேமிலி”. ரிலீஸுக்கு முன்பே பல வாரங்களாக படத்தை பற்றி எங்கு திரும்பினும் கிடைத்த தகவல்கள் அனைத்துமே படத்தின் வெற்றியை நிச்சயித்தது. படம் பார்த்த பின் நம்முடைய கருத்து என்ன? முன் கிடைத்த தகவல்கள் சரியானதா? என்பதை பார்க்கலாம்.
படத்தின் கதைப்படி, ஈழத் தமிழர் சசிகுமார் இலங்கையில் நிகழ்ந்த பொருளாதார நெருக்கடியால் தன் குடும்பத்துக்காக, தன் மனைவி சிம்ரன் மற்றும் இரண்டு மகன்களுடன் கள்ளத்தனமாக இலங்கையில் இருந்து படகில் ராமேஸ்வரம் வருகிறார். அங்கிருந்து பிழைப்பு தேடி யோகிபாபு உதவியுடன் வீடு பிடித்து தமிழ்நாட்டில் வசிக்க துவங்குகிறார். இதற்கிடையே, சசிகுமார் குடும்பம் ராமேஸ்வரத்திற்கு வந்த அதே நாளில் அங்கு நிகழும் ஒரு குண்டு வெடிப்பு சம்பவத்தில் சசிகுமார் குடும்பத்திற்கும் தொடர்பு இருப்பதாக நம்பும் காவல்துறை அவர்களை தேடும் முயற்சியில் ஈடுபடுகிறது. தமிழ்நாட்டில் எந்த பிரச்சினையும் இல்லாமல் சசிகுமார் குடும்பத்தால் வாழ முடிந்ததா? அவர்களை சுற்றி உள்ள மனிதர்கள் எப்படி பழகுகிறார்கள்? போலீஸ் அவர்களை கண்டுபிடித்தார்களா? என்பதே மீதிக்கதை.
நாயகன் சசிகுமார் தனது வழக்கமான பாணியில், இரு மகன்களுக்கு தந்தையாக நல்ல ஒரு நடிப்பை தந்துள்ளார். சராசரியான ஒரு வாழ்க்கைக்காக, தன் குடும்பத்துக்கு நல்ல ஒரு வாழ்க்கையை அமைத்து கொடுக்க போராடும் காட்சிகளில், முக்கியமான எமோஷனல் காட்சிகளிலும் நம்மை உணர்வு ரீதியாக ஒன்ற வைக்கிறார்.
சசிகுமாரின் மனைவியாக சிம்ரன். ஒரு தாயாக ஒளிவு மறைவு வாழ்க்கை வாழச் சொன்னதை மறந்து இயல்பாக எல்லோரிடமும் பழகும் கதாபாத்திரத்தில் நம்மை ரசிக்க வைக்கிறார். காலனியில் நடக்கும் விழாவில் அவர் ஆடும் நடனம் ரசிகர்களுக்கு மெகா சர்ப்ரைஸ். மகன்களாக நடித்திருக்கும் மிதுன் ஜெய்சங்கர் மற்றும் கமலேஷ் ஜெகன் இருவருமே மிகப்பெரிய அப்ளாஸை அள்ளுவார்கள் என்பது உறுதி. மிதுன் எமோஷன் காட்சிகளிலும், சிறுவன் கமலேஷ் காமெடியிலும் தட்டித் தூக்கியிருக்கிறார்கள்.
படத்தில் ஒரு கேமியோ என்பது போன்ற ஒரு ரோலில் வரும் யோகி பாபு வரும் காட்சிகள் எல்லாமே அதகளம். தியேட்டரே குலுங்கி குலுங்கி சிரிக்கும் ரகம். இன்னும் சில காட்சிகள் வர மாட்டாரா என ஏங்க வைக்கிறார். எம்.எஸ்.பாஸ்கர், ரமேஷ் திலக், பகவதி பெருமாள், இளங்கோ குமரவேல், ஸ்ரீஜா ரவி, யோகலக்ஷ்மி என மற்ற நடிகர்களும் தங்கள் பங்கை சிறப்பாகவே செய்திருக்கிறார்கள்.
அரவிந்த விஷ்வநாதன் ஒளிப்பதிவு கலர்ஃபுல்லாக, இயல்பான மனிதர்களை மிக யதார்த்தமாக காட்சிப்படுத்தியிருக்கிறார். ஷான் ரோல்டன் இசையில் பாடல்கள் தியேட்டரை விட்டு வெளியே வந்த பின்பும் மனதில் ரீங்காரமிடுகிறது. பின்னணி இசையும் படத்திற்கு மிகப்பெரிய பலம்.
இளம் வயதிலேயே தன் முதல் படத்திலேயே இப்படி அன்பு, மனிதத்தை வைத்து நல்ல ஒரு நிறைவான படத்தை தந்து வெற்றியை பெற்றிருக்கிறார் இயக்குனர் அபிஷான் ஜீவிந். ஈழத் தமிழர்களை பற்றிய படமாக இருந்தாலும் அதை நகைச்சுவை கலந்து உணர்வுப்பூர்வமான ஒரு படமாக தந்து ரசிகர்களை ரசிக்க வைக்கிறார். மகன் காதல் தோல்வி காட்சிகள், சர்ச்சில் நடக்கும் காட்சி, கிளைமாக்ஸ் காட்சி என ஆங்காங்கே சிறந்த எபிசோடுகளை வைத்து ஒட்டுமொத்தமாக அப்ளாஸை அள்ளுகிறார், உணர்வுப்பூர்வமாகவும் ஒன்ற வைக்கிறார். மொத்தத்தில் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ நிச்சயம் குடும்பத்துடன் பார்க்கக் கூடிய படமாக அமைந்துள்ளது.
SK CINEMAS Rating : 4/5