டென் ஹவர்ஸ் – விமர்சனம்!

தமிழ் சினிமாவில் ஒரே இரவில் நடக்கும் கதைகள் எத்தனையோ வந்தாலும் அவற்றில் சில ரசிகர்களுக்கு புதுப்புது அனுபவத்தை கொடுக்கும். சமீப காலங்களில் ஒரே இரவில் கதை நடக்கும் ஒரு படமாக வெளிவந்து மிகப்பெரிய வெற்றியை பெற்ற படமாக நம் அனைவர் மனதிலும் தோன்றும் ஒரு படம் “கைதி”. பரபரவென நகரும் திரைக்கதையோடு மிக நேர்த்தியாக உருவாக்கப்பட்ட படம். கைதி வரிசையில் இப்போது உருவாகியிருக்கும் ஒரு படம் தான் சிபிராஜ் நடித்துள்ள ” டென் ஹவர்ஸ்”. இளையராஜா கலிய பெருமாள் என்பவர் இயக்கி இருக்கிறார். கைதி போலவே மிகப்பெரிய வெற்றியை பெற்றதா? பார்க்கலாம்.

படத்தின் கதைப்படி, ஆம்னி பஸ் ஒன்றில் ஒரு இளம் பெண்ணை சித்திரவதை செய்வதாக காவல்துறையினருக்கு ஒரு ஃபோன் கால் வருகிறது. அதே நேரம் அந்த ஏரியாவில் ஒரு இளம்பெண்ணை காணவில்லை என புகார் வருகிறது. இந்த இரண்டு விஷயங்களையும் விசாரிக்க துவங்கும் இன்ஸ்பெக்டர் சிபிராஜூக்கு அடுத்தடுத்து பல திடுக்கிடும் விஷயங்கள் தெரிய வருகிறது. வந்த தகவலை வைத்து பஸ்ஸை நிறுத்தி பார்த்தால் அதில் ஒரு இளைஞர் இறந்து கிடக்கிறார். ஓடும் பஸ்ஸில் அந்த இளைஞர் இறந்தது எப்படி? பஸ்ஸில் இருந்த யாரோ ஒருவர் தான் கொலை செய்திருக்கக் கூடும் என்ற கோணத்தில் விசாரணை நடக்கிறது. இளைஞரை கொன்றது யார்? பஸ்ஸில் சித்திரவதை செய்யப்பட்டதாக சொல்லப்பட்ட தகவல் உண்மையா? காணாமல் போன இளம்பெண் யார்? அவரை கண்டுபிடித்தார்களா? என்பதை ஒரே இரவில் 10 மணி நேரத்தில் நடக்கும் சம்பவங்களாக சொல்லியிருக்கும் படம் தான் “டென் ஹவர்ஸ்”.

இன்ஸ்பெக்டரான நாயகன் சிபி ராஜ். அதிரடி போலீஸாக, சபரிமலைக்கு மாலை போட்டிருக்கும் ஒரு அதிகாரியாக நன்றாகவே நடித்திருக்கிறார். சிபிராஜ் நடித்து கடைசியாக வெற்றியை தந்த படம் எது என்று சரியாக சொல்ல முடியவில்லை. அதனாலேயே நாய்கள் ஜாக்கிரதை படத்துக்கு பிறகு சிபிராஜூக்கு நல்ல படமாக, வெற்றிப் படமாக இந்த படம் அமைந்திருக்கிறது என்று சொல்லலாம்.

மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ள ராஜ் ஐயப்பா கவனம் ஈர்க்கிறார். கான்ஸ்டபிளாக வரும் கஜராஜ், ஜீவா ரவி, பஸ் கண்டக்டராக வரும் முருகதாஸ், ட்ரைவராக வரும் நபர், அந்த இளம்பெண்கள், இந்த பிரச்சினைகளுக்கு எல்லாம் பின்னணியில் இருக்கும் “அந்த” நபர் என மற்ற நடிகர்களும் நல்ல நடிப்பை வழங்கியிருக்கிறார்கள்.

கே.எஸ்.சுந்தர மூர்த்தியின் பின்னணி இசை படத்திற்கு பெரிய பலமாக அமைந்துள்ளது. இசையுடன் சேர்த்து படத்தின் தன்மைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது ஜெய்  கார்த்திக்கின் ஒளிப்பதிவு.

ஒரு இரவில் அதுவும் 10 மணி நேரத்தில் நடக்கும் ஒரு பரபர திரில்லரை கொடுக்க முயற்சித்திருக்கிறார் இயக்குனர் இளையராஜா கலியபெருமாள். ஆரம்பத்தில் அனிமேஷனில் அவர் சொல்லும் அந்த கேஸ் பற்றிய விஷயங்கள் சுவாரஸ்யாகவே இருக்கிறது. அதை தொடர்ந்து வரும் ஆம்னி பஸ் குற்றங்கள், அதன் பின்னணி என சுவாரஸ்யமான சம்பவங்களை நோக்கி நகர்கிறது படம். படத்தின் நீளம் ஒரு பாஸிடிவான அம்சம். கைதி போலவே ஒரு ஆக்‌ஷன் திரில்லரை கொடுக்க முயற்சித்திருக்கிறார் இயக்குனர், ஆனாலும் மேக்கிங்கிலும், திரைக்கதையாலும் அந்த லெவலை எட்டவில்லை. ஆனாலும் நீண்ட நாளைக்குப் பிறகு சிபிராஜூக்கு ஒரு நல்ல படத்தையும், வெற்றிப் படத்தையும் தந்திருக்கிறார் இயக்குனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *