பிரதீப் புரூஸ் லீ போன்றவர் – மிஷ்கின் புகழாரம்!

தமிழ் சினிமாவின் முன்னணி நிறுவனமான ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரிப்பில் ‘யங் ஸ்டார் ‘ பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவாகி பிப்ரவரி 21ம் தேதி  திரையரங்குகளில் வெளியாகும் ‘டிராகன்’ திரைப்படத்தின் முன் வெளியீட்டு நிகழ்வு சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது.‌ இந்த் ‘டிராகன்’ திரைப்படத்தில் பிரதீப் ரங்கநாதன், அனுபமா பரமேஸ்வரன், கயாடு லோஹர் , கே.எஸ். ரவிக்குமார், கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், விஜே சித்து, ஹர்ஷத் கான், மரியம் ஜார்ஜ், இந்துமதி மணிகண்டன், தேனப்பன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். நிகேத் பொம்மி ஒளிப்பதிவு செய்ய லியோன் ஜேம்ஸ் இசையமைத்திருக்கிறார்.

இந்த விழாவில் இயக்குனர் விக்னேஷ் சிவன் பேசும்போது, “பிரதீப்புடன் இணைந்து ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’  திரைப்படத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கிறேன். இந்தப் படத்திற்காக அவரை சந்திக்கும் போது நான் என்னுடைய திரையுலக பயணத்தில் கடினமான சூழலில் இருந்தேன். இருந்தாலும் உடனடியாக என்னை அழைத்து நான் சொன்ன கதையை கேட்டு நடிக்க ஒப்புக்கொண்டார். அதற்காக அவருக்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். திரையுலகில் திறமையான நடிகர்கள் இருப்பார்கள். நட்சத்திர நடிகர்கள் இருப்பார்கள். ஆனால் சிலரை மட்டும் தான் நாம் தொடர்ச்சியாக பின்பற்றுவோம். அவர்களுடைய உடல் மொழி, நடிப்பு , திரை உலகம் சார்ந்த பணிகள்.என சில நடிகர்களை தொடர்ந்து கவனித்து வரும் போது தான் நாம் அவர்களுடைய ரசிகர்களாக மாறி விடுவோம்.

இதைப்போல் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்தால் அவர்கள் நட்சத்திர அந்தஸ்துக்கு உயர்ந்து விடுவார்கள்.‌ அந்த வகையில் பிரதீப் ரங்கநாதன் தற்போது நடிகராக இருந்து நட்சத்திர நடிகர் என்ற அந்தஸ்துக்கு உயர்ந்திருக்கிறார். அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உருவாகிக்கொண்டே இருக்கிறார்கள். அவர் ஒரு கதாபாத்திரத்தை ஏற்று அவருடைய ஸ்டைலில் நடிக்கும் போது அதை ரசிக்கும் கூட்டம் உண்டு. இதன் எண்ணிக்கை அடுத்தடுத்து அவர் நடிப்பில் உருவாகும் படங்கள் வெளியான பிறகு அதிகரிக்கும் என நான் உறுதியாக நம்புகிறேன். இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து- ஈகோ இல்லாத எளிமையாய் பழகக்கூடிய இனிய நண்பர்.‌ அவருடன் இணைந்து பணியாற்றும் போது எளிதாக இருந்தது. இந்த படத்தின் பாடல்களை எழுதும் போதும் மறக்க முடியாத அனுபவங்கள் உண்டு.

பொதுவாக ஒவ்வொரு படத்திற்கும் பாடல்களை எழுதும் போது  இதயப்பூர்வமாக எழுதுவேன். சில பாடல்களை உணர்வுப்பூர்வமாக சிந்தித்து எழுதுவேன். நான் முதன்முதலில் பாடல் எழுதும் போது, ‘வரிகள் நன்றாக இருக்கிறது. தொடர்ந்து எழுது’ என என்னை சிலம்பரசன் தான் ஊக்கப்படுத்தினார். அதன் பிறகு ஒவ்வொரு பாடல் எழுதும் போதும் பாடல் வரிகள் மீது கவனம் செலுத்தி வருகிறேன். அந்த வகையில் இந்தப் படத்திற்கு பாடல் எழுத வாய்ப்பு கொடுத்த இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும், இசையமைப்பாளருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

இயக்குநர் மிஷ்கின் பேசும்போது, “இன்று நான் எந்த கெட்ட வார்த்தையையும் பேச மாட்டேன். ஒரு வருடம் வரை எந்த நிகழ்விலும் கலந்து கொள்ளக் கூடாது என்று நினைத்திருந்தேன். ஆனால் தயாரிப்பாளர் அகோரம் சார், அர்ச்சனா மற்றும் ஐஸ்வர்யா ஆகிய மூவர் மீது வைத்திருக்கும் அன்பின் காரணமாகத்தான் இந்நிகழ்வில் கலந்து கொண்டிருக்கிறேன். அர்ச்சனா மற்றும் ஐஸ்வர்யா என இருவரும்.. அவர்கள் தயாரிக்கும் படங்களின் வெற்றிக்காக கடுமையாக உழைத்து வருகிறார்கள். அவர்கள் மேலும் தொடர்ந்து வெற்றியை பெற வேண்டும் என வாழ்த்துகிறேன்.

பிரதீப், புரூஸ் லீ போன்றவர். அவர் இதுவரை ஆக்ஷன் படங்களில் நடிக்கவில்லை. ஒரு வேளை என்னுடைய இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்கலாம். நீண்ட நாள் கழித்து திரையுலகில் நான் ஒரு யங் ஸ்டாராக பிரதீப்பை பார்க்கிறேன். அவர் ஒரு பிரைட்டஸ்ட் ஸ்டார். அவர் இதற்காக கடுமையாக உழைக்கிறார், உழைத்து வருகிறார்.‌ இந்தப் படத்தில் நான் தான் அவருக்கு வில்லன். ஆனால் நல்ல வில்லன். படப்பிடிப்பு தளத்தில் நானும், அவனும் இணைந்து நடிக்கும் காட்சிகள் படமாக்கப்படும் போது அவனுடைய அர்ப்பணிப்பை கவனித்து பிரமித்தேன். இயக்குநருக்கான நடிகராக இருக்கிறார். நானும் ஒரு இயக்குநர் என்பதால் இதனை என்னால் உறுதியாக கூற முடிகிறது. இதற்காக நான் அவரை மனதார பாராட்டுகிறேன்.  கேரக்டருக்காக தன்னை தயார்படுத்திக் கொண்டே இருக்கிறார். நடிக்கும் போது அவரிடம் ஒரு தனித்துவமான உணர்வு வெளிப்படுகிறது. இது அவரை மேலும் உயரத்திற்கு அழைத்துச் செல்லும். அவருக்கு தொடர்ந்து வெற்றிகள் குவியும்.

இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து படப்பிடிப்பு தளத்தில் கடுமையாக உழைப்பவர். அவர் இயக்கிய இந்த படம் மிக எளிதாக பெரிய வெற்றியை பெறும். ஏனெனில் இந்தக் கால இளைஞர்களுக்கான ஒரு நீதியை அவர்கள் விரும்பும் ஸ்டைலில் சொல்லி இருக்கிறார். இது ஒரு எளிமையான கதை அல்ல. வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கான உந்துதலை வழங்கும் படமாக இருக்கிறது. இதற்காக அவருக்கு நான் வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன்.  கல்லூரியில் படிக்கும் இளைஞன் எப்படி இருக்க வேண்டும் என்பதை அவருடைய வாழ்க்கையில் நடைபெற்ற அனுபவத்தின் மூலமாக விவரித்திருக்கிறார். சொன்ன விதமும் உற்சாகத்துடன் இருக்கும். அவருடன் இணைந்து பணியாற்றிய அனுபவம் மறக்க முடியாதது.‌ அவரும் மிக திறமையான படைப்பாளி. இன்னும் கூடுதல் உயரத்திற்கு செல்ல வேண்டும் என வாழ்த்துகிறேன்” என்றார்.

இயக்குநர் கே. எஸ். ரவிக்குமார் பேசும்போது, “இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து குறித்து மிஷ்கின் சொன்னது உண்மை தான். படப்பிடிப்பு தளத்தில் அவர் மிகவும் கறாரான பேர்வழி. ஆனால் ஒருபோதும் சோர்வடையாமல் உற்சாகமாக பணியாற்றிக் கொண்டே இருப்பார். படப்பிடிப்பு தளத்தில் நடிக்கும் அனைத்து கலைஞர்களிடமும் காட்சிகளைப் பற்றி விரிவாக விளக்கம் அளிப்பார். நான் தற்போது ஏராளமான புதுமுக இயக்குநர்களுடன் தான் இணைந்து பணியாற்றுகிறேன். ஒவ்வொருவரிடமிருந்தும் ஒவ்வொரு விஷயங்களை கற்றுக் கொள்கிறேன். இந்தப் படத்திலும் படப்பிடிப்பு தளத்தில் இவர் என்னைப் போல் அல்லாமல் அமைதியாக பணிபுரிந்தார். இவருக்கு பதிலாக ஒளிப்பதிவாளர் படப்பிடிப்பு தளத்தில் உரத்த குரலில் ஆணையிட்டுக் கொண்டிருந்தார். அப்போது தான் இனிமேல் நாமும் படப்பிடிப்பு தளத்தில் உரத்த குரலில் பேசுவதை விட ஒளிப்பதிவாளரை பேசவிட வேண்டும் என கற்றுக் கொண்டேன். இருந்தாலும் அஸ்வத் கடின உழைப்பாளி. அவர் கதை சொன்ன விதம் நன்றாக இருந்தது. சொல்வதில் புதிய அம்சங்கள் இருந்தது. அதில் ஒரு இயற்கையான உணர்வும் இருந்தது. இந்தத் திரைப்படத்தில் அனைத்து தரப்பு ரசிகர்களும் ரசிக்கும் வகையில் பொழுது போக்கு அம்சங்களும் இருக்கின்றன. இதற்காக இயக்குநர் அஸ்வத்திற்கு வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன்.

ஏ.ஜி.எஸ் தயாரிப்பாளர்களை நீண்ட நாட்களாகவே எனக்கு தெரியும். அவரகளை நான் தூரத்தில் இருந்தே ரசிக்கிறேன். அவர்களின் தயாரிப்பில் வெளியாகும் படங்கள் ஒவ்வொன்றும் தரமானதாகவும், வெற்றி பெறக் கூடியதாகவும் இருக்கிறது. அந்த வரிசையில் இந்த படமும் இணையும். நடிகர் பிரதீப் இயக்கத்தில் உருவான ‘கோமாளி’ படத்தில் நானும் நடித்திருந்தேன். அந்தப் படத்தில் கடுமையாக உழைத்துக் கொண்டே இருப்பார். சாப்பிட கூட பல தருணங்களில் மறந்து விடுவார். இதுகுறித்து அப்படத்தின் நாயகனான ரவியுடனும் பேசி இருக்கிறேன்.‌ ஆனால் இந்தப் படத்தில் அதற்கு நேர் எதிராக இருக்கிறார். இந்த படத்தில் சரியாக சாப்பிடுகிறார். ஆனால் இடைவேளை இல்லாமல் பணியாற்றுகிறார்.

பிரதீப்பின் நடிப்பு தொடர்பாக இயக்குநர் மிஷ்கின் சொன்ன ஒரு விசயம் உண்மைதான். அவர் இயக்குநர்களின் நடிகர். படப்பிடிப்பு தளத்திற்கு நேரம் தவறாமல் வருவது, இயக்குநரின் கண் பார்வை செல்லும் இடத்தில் நிற்பது, இயக்குநர் என்ன சொன்னாலும் சரி என ஒப்புக் கொள்வது, என பல நல்ல விஷயங்கள் பிரதீப்பிடம் இருக்கிறது. பெருமைக்காக சொல்லவில்லை. 50 ஆண்டுகளுக்கு பிறகும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்றும் இப்படித்தான் இருக்கிறார். ரஜினி சார் திரைக்கதை விவாதத்தின் போது தான் கலந்து கொண்டு ஆலோசனைகளை கூறுவார். ஆனால் படப்பிடிப்பு தளத்திற்கு வந்துவிட்டால் இயக்குநர் என்ன சொல்கிறாரோ அதனை அப்படியே ஏற்றுக் கொண்டு நடிப்பார். அவர் செய்து கொண்டிருப்பதை தான் பிரதீப்பும் செய்கிறார். இதனை அவர் தொடர்ந்து செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். நடிகராக இருந்தாலும் படம் இயக்குவதை தவிர்த்து விட வேண்டாம். படத்தை இயக்குவதிலும் கவனம் செலுத்துங்கள் பிரதீப். இந்தப் படம் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்” என்றார்.

நடிகை கயாடு லோஹர் பேசும்போது, “இது எனக்கு முதல் மேடை. சற்று பதற்றமாக இருக்கிறது. இந்த விழாவிற்காக நேரம் ஒதுக்கி வருகை தந்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நடுத்தர குடும்பத்தில் பிறந்து சிறிய வயதில் நடிகை ஸ்ரீதேவியின் நடனத்தாலும், நடிப்பாலும் ஈர்க்கப்பட்டு நடிகையாக வேண்டும் என்று கனவு கண்டு, இன்று இந்த மேடையில் நிற்கிறேன். இந்த வாய்ப்பை வழங்கிய தயாரிப்பாளர் கல்பாத்தி அகோரம் சகோதரர்களுக்கு  நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். முதல் நாள் படப்பிடிப்பின் போது எனக்கும் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்துவுக்கும் சிறிய அளவில் தவறான புரிதல் இருந்தது. அவர் கடுமையான உழைப்பாளி. பொறுமை மிக்க இயக்குநர்.‌ என் மீது நம்பிக்கை வைத்து எனக்கான கேரக்டரை வடிவமைத்திருந்தார். பிரதீப் ஒரு இன்ட்ரோவர்ட் பர்சன்.  ஆனால் படப்பிடிப்பு தளத்தில் அவருடன் பழகும் போது தான் அவர் ஒரு கதாசிரியர், இயக்குநர், நடிகர் என பன்முக ஆளுமை மிக்க திறமைசாலி என தெரியவந்தது. நட்புணர்வு மிக்கவர்.  அவருடன் இணைந்து பணியாற்றிய அனுபவம் மறக்க முடியாதது. தற்போது அவர் என்னுடைய இனிய நண்பராக மாறிவிட்டார்” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *