ஹிட்லரில் ரொமான்ஸ் இருக்கு – விஜய் ஆண்டனி உற்சாகம்!

செந்தூர் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் தயாரிப்பில், இயக்குநர் தனா இயக்கத்தில், நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள திரில்லர் திரைப்படம் “ஹிட்லர்”. ரியா சுமன், கௌதம் வாசுதேவ் மேனன், சரண்ராஜ் மற்றும் பலர் நடித்துள்ளனர். வரும் செப்டம்பர் 27ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகும் இந்த படத்துக்கு விவேக் மெர்வின் இசை அமைத்துள்ளனர். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் ராஜா பேசும்போது, செந்தூர் ஃபிலிம்ஸின் 7வது திரைப்படம் இது, கோடியில் ஒருவன் படம் நல்ல வரவேற்பைக் குவித்தது. விஜய் ஆண்டனி நடிப்பில் இந்தப்படமும் கண்டிப்பாக நல்ல வரவேற்பைப் பெறும். இசையமைப்பாளர்கள் விவேக் மெர்வின் அற்புதமான இசையைத் தந்துள்ளார்கள், தொழில் நுட்ப கலைஞர்கள் அனைவரும் கடினமான உழைப்பைத் தந்துள்ளனர். இப்படத்தை முன்பே வெளியிடுவதாகத் திட்டமிட்டிருந்தோம், ஆனால், விஜய் ஆண்டனி சாருக்கு எதிர்பாரா விதமாக விபத்து நடைபெற்றது. யாராயிருந்தாலும் ஒரு வருடம் வரமாட்டார்கள், அதைத்தாண்டியும் அவர் ஒரு மாதத்தில் வந்து எங்களுக்காக நடித்தார். ரிலீஸ் வரை, பிஸினஸ் முதற்கொண்டு உறுதுணையாக இருந்தார். இயக்குநர் தனா மிகக் கடினமான உழைப்பாளி, அற்புதமாகப் படத்தை உருவாக்கியுள்ளார். கௌதம் மேனன் சார் எங்களுக்காக வந்து நடித்துத் தந்தார். படம் மிக நன்றாக வந்துள்ளது” என்றார்.

இயக்குநர், நடிகர் தமிழ் பேசும்போது, “தயாரிப்பாளர் ஒரு ஹீரோவைப் பார்த்து மாமனிதன் எனச் சொல்கிறார் என்றால், அவர் எத்தனை நல்லவராக இருக்கிறார் என்பது புரிகிறது. விஜய் ஆண்டனி சார், எப்போதும் தயாரிப்பாளரின் ஹீரோவாக இருக்கிறார். எங்களுக்கும் வாய்ப்பு தாருங்கள் சார், இயக்குநர் தனா தனக்கு என்ன வேண்டுமோ, அதைத் தெளிவாக எடுத்து விடுவார், எனக்கு இப்படத்தில் நல்ல ரோல் தந்துள்ளார்” என்றார்.

நடிகர் விவேக் பிரசன்னா பேசும்போது, “இயக்குநர் தனா மணிரத்னம் சாரிடம் இருந்து வந்தவர், இவரிடம் ரைட்டிங் இன்னும் பலமாக இருக்கும், படத்தை அருமையாக எடுத்துள்ளார். இசையில் விவேக் மெர்வின் நல்ல பாடல்கள் தந்துள்ளார்கள். விஜய் ஆண்டனி சார் எப்போதும் கதைக்காக மட்டுமே உழைத்துக் கொண்டிருக்கிறார், அதனால் தான் எல்லா இயக்குநருக்கும் பிடித்த நடிகராக இருக்கிறார். கௌதம் மேனன் சார் ஸ்டைல் எனக்கு மிகவும் பிடிக்கும், அவர் மாதிரி திரையில் ஸ்டைலாக நடிக்க ஆசை” என்றார்.

பாடலாசிரியர் கிருத்திகா பேசும்போது, “இயக்குநர் தனா எனக்கு நெருங்கிய நண்பர். எனக்கு போன் செய்து, ஒரு ஐட்டம் சாங் எழுதனும் என்றார், ஒரு பெண்ணிடம் கூப்பிட்டு, ஐட்டம் சாங் விரசமில்லாமல் எழுதச் சொல்வதே, எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. இப்படத்தில் இன்னும் இரண்டு பாடல்கள் நான் எழுதியுள்ளேன். உங்களுக்குப் பிடிக்குமென நம்புகிறேன்” என்றார்.

இசையமைப்பாளர் மெர்வின் பேசும்போது, “ஹிட்லர் எங்க ரெண்டு பேருக்கும் மிக முக்கியமான படம். படத்தை முடித்து, படம் திருப்தியாக இருப்பதைப் பார்ப்பது மகிழ்ச்சியாக உள்ளது. விஜய் ஆண்டனி சார் அருமையாக நடித்துள்ளார். கௌதம் மேனன் சார் ரசிகன் நான், அவர் இந்தப்படத்தில் இருப்பது மகிழ்ச்சி. இந்தப்படம் தியேட்டரில் பார்த்து ரசிக்கும்படியான ஆக்சன் கமர்ஷியல் படமாக இருக்கும்” என்றார்.

இயக்குநர் கௌதம் மேனன் பேசும்போது, “இந்தப்படம் பண்ண ரெண்டே காரணம் தான். தனா, அவர் விஜய் ஆண்டனி நீங்கள் தான் நடிக்க வேண்டுமென ஆசைப்பட்டார் என்று சொன்னார். பொதுவாக நான் நடிக்கத் தயங்குவேன், எனக்கு இந்தப்படத்தில் அவ்வளவு கம்பர்டபிளாக வைத்துக் கொண்டார்கள். விஜய் ஆண்டனி ஆசைப்பட்டதால் தான் இந்தப்படத்தில் நடித்தேன் நன்றி. இந்தப்படத்தில் மிகப்பெரிய கதை இருக்கிறது, அதை தனா இயக்கிய விதம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. விஜய் ஆண்டனி விபத்தைத் தாண்டி ஒரே மாதத்தில் நடிக்க வந்தது வியப்பாக இருந்தது. ரசிகர்களுக்கு ஒரு நல்ல அனுபவமாக இப்படம் இருக்கும்” என்றார்.

நடிகர் விஜய் ஆண்டனி பேசும்போது, “கௌதம் சாருடன் வேலை பார்த்தது மகிழ்ச்சி. முன்பு அவர் படத்தில், இசையமைக்க வாய்ப்பு கேட்டு அலைந்திருக்கிறேன், இந்தப் படத்தில் அவருடன் நடித்தது மிகவும் மகிழ்ச்சி. தனா மிகச்சிறந்த இயக்குநர் படத்தை மிக அற்புதமாக எடுத்துள்ளார். ரியா உங்களின் மன்மத லீலை பார்த்தேன், அந்தளவு இல்லை என்றாலும் இதில் ரொமான்ஸ் இருக்கிறது. வந்த சில படங்களில், நீங்கள் தமிழ் கற்றுக்கொண்டு பேசுவது, ஆச்சரியமாக இருக்கிறது. விவேக் மெர்வின் ரசிகன் நான், உங்கள் இசை எனக்கு மிகவும் பிடிக்கும். எடிட்டர் மிகச்சிறப்பாக எடிட் செய்துள்ளார். ஒளிப்பதிவாளர் அற்புதமாக ஒளிப்பதிவு செய்துள்ளார். தமிழ், விவேக் பிரசன்னா எல்லாம் நன்றாக நடித்துள்ளார்கள். ராஜா பல தடைகளைக் கடந்து, இப்படத்தைத் தயாரித்துள்ளார். இந்தப்படத்தில் நாங்கள் கருத்து எதுவும் சொல்லவில்லை, எல்லோருக்கும் பிடிக்கிற மாதிரியான ஜாலியான, ஆக்சன் படமாக இப்படம் இருக்கும்” என்றார்.

இயக்குநர் தனா பேசும்போது, “இந்தப் படம் ஒரு நல்ல ஆக்சன் படம், ஒரு பக்கம் விஜய் ஆண்டனி சார், இன்னொரு பக்கம் கௌதம் மேனன் சார் கொஞ்சம் தயக்கமாக இருந்தது, ஆனால் அவர்கள் தந்த ஒத்துழைப்பில் தான், இந்தக் கதையைச் சிறப்பாகச் செய்தேன். தயாரிப்பாளர் ராஜா சார் மிகப்பெரிய ஒத்துழைப்பு தந்தார்” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *