ஜெடூசி – விமர்சனம்!

சமூகத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், கல்விக்கான போராட்டம், சாதி மற்றும் மத வேறுபாடுகள், பெண்களுக்கெதிரான குற்றங்கள் என அழுத்தமான கருத்துகளை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் ‘ஜெடூசி’. ஸ்ரீதர், ஸ்வேதா நடிப்பில், நடராஜ் ஏகாம்பரம் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் திரில்லர் பாணியில் பயணிக்கும் ஒரு சமூகக் கருத்துகளைக் கொண்ட ஒரு திரைப்படம். படம் எப்படி இருக்கு? என்பதை இந்த விமர்சனத்தில் பார்க்கலாம்.

படத்தின் கதைப்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் நண்பனின் சிசிடிவி, லேப்டாப் சர்வீஸ் செய்யும் கடையில் இன்னொரு ஓனராகவே வேலை செய்து வருகிறார் நாயகன் ஶ்ரீதர். அந்த ஊரில் தொடர் கொலைகள் நடந்து வருகிறது. யாரோ மாஸ்க் அணிந்த மர்ம மனிதன் அந்த கொலைகளை செய்து வர, குற்றவாளியை கண்டுபிடிக்க முடியாமல் திணறுகிறது காவல்துறை. சமூகத்தில் சில முக்கிய பிரமுகர்களும் கொலை செய்யப்பட, காவல்துறையின் தீவிர வேட்டையில் நாயகன் தான் அந்த கொலையாளி என்பதை கண்டுபிடித்து கைது செய்கிறது. பின்கதை ஜவ்வாது மலை வரை நீள்கிறது. நீதிமன்ற விசாரணையில் நாயகன் ஏன் அந்த கொலைகளை செய்தார்? அதன் பின்னணி என்ன? கொலை செய்யப்பட்டவர்கள் பின்னணி என்ன? என்பதை சொல்வதே மீதிக்கதை.

கதையின் நாயகனாக ஸ்ரீதர் இருவேறு அவதாரங்களில் நல்ல நடிப்பை வழங்கியுள்ளார். முதல் பாதி முழுக்க ஜெண்டில்மேன் அர்ஜூன் போல தோற்றத்திலும் நடிப்பிலும் ஸ்கோர் செய்கிறார். ஃபிளாஷ்பேக்கில் சிறந்த நடிப்பை வழங்கியுள்ளார். நாயகி ஸ்வேதா மலைவாழ் கிராமத்து பெண்ணாக, படிப்பின் மீது பேரார்வம் கொண்ட பெண்ணாக அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். துன்புறுத்தலுக்கு ஆளாகும் அப்பாவிப் பெண்ணாக கண் கலங்க வைக்கிறார்.

ஏ.வெங்கடேஷ் ஒரு பசுந்தோல் போர்த்திய புலி போன்ற ஒரு கதாபாத்திரத்தில் நன்றாகவே நடித்திருக்கிறார். பிளாக் பாண்டி நாயகனின் நண்பனாக சில காட்சிகளே வந்தாலும் மனதில் நிற்கிறார். அருவி மதன், எழுத்தாளர் பவா செல்லதுரை, அசோக் பாண்டியன் உள்ளிட்ட மற்ற நடிகர்கள் எல்லாருமே அவரவர் கதாபாத்திரத்திற்கு ஏற்ற பங்களிப்பை வழங்கியிருக்கிறார்கள்.

இசையமைப்பாளர் விக்னேஸ்வரன் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். ஃபிளாஷ்பேக்கில் வரும் பாடல் இசையும் அருமை, படமாக்கிய விதமும் சிறப்பு. கே.சந்தோஷ் பின்னணி இசை படத்துக்கு பேருதவி புரிந்திருக்கிறது. நாகர்ஜுன் ஒளிப்பதிவு கதைக்கேற்ப பெரிய அளவில் அலட்டல் இல்லாமல் நிதானமான காட்சியமைப்பில் அழகு சேர்க்கிறது. எஸ்.பி. அஹமதுவின் படத்தொகுப்பும் படத்தின் தொழில்நுட்பப் பணிகளில் முக்கியப் பங்கு வகித்திருக்கிறது.

இயக்குனர் நட்ராஜ் ஏகாம்பரம் பெண்களின் கல்வி, சமூகத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வுகள், பெண்கள் பாதுகாப்பு போன்ற முக்கியமான விஷயங்களை சுவாரஸ்யமான திரைக்கதை மூலம் கொடுக்க முயற்சி செய்து அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார். கல்வி என்பது ஆண்களுக்கு மட்டுமே உரியதல்ல, பெண்களுக்கும் சமமான கல்வி வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்துகிறது. அத்துடன் விளிம்பு நிலையில் இருந்து நகரத்துக்கு படிக்க வரும் எளிய மாணவிகளின் நிலையையும் பேசியிருக்கிறது. பெண்களை பாதுகாப்போம், கலாச்சார சீரழிவில் இருந்து காப்போம் என்ற டேக்லைனும் படத்தில் பேசப்பட்டிருக்கும் முக்கியமான விஷயம். ஜெடூசியை படத்தின் முக்கியமான அம்சமாக கொண்டு வந்து சிறப்பு சேர்க்கிறார் இயக்குனர். மொத்தத்தில் பெண்கள் கல்வி கற்க செல்லும் இடங்களில், வேலைக்கு செல்லும் இடங்களில் எல்லாம் எப்படி பாலியல் தொல்லைகளுக்கு ஆளாகிறார்கள் என்பதையும், பெண்கள் பாதுகாப்பின் முக்கியத்துவத்தையும் மிக ஆழமாக பேசியிருக்கிறார். அந்த வகையில் ‘ஜெடூசி’ வித்தியாசமான முயற்சியாக கவனம் ஈர்க்கிறது. ஜெடூசி நிச்சயம் பார்க்க வேண்டிய பாடம்.