பிரபல பின்னணிப் பாடகர் மனோவின் மகன் ஷாகிர் மனோ கதாநாயகனாக அறிமுகமாகும் திரைப்படம் ‘மௌன மொழிகள்’. AC சௌந்தர் இயக்கத்தில் காதல், நகைச்சுவை மற்றும் உணர்வுப்பூர்வமான கதைக்களத்துடன் உருவாகியுள்ள இப்படம், இன்றைய இளைஞர்களைக் கவரும் வகையில் தயாராகியுள்ள ஒரு காதல் திரைப்படம். அழகுக்கும் காதலுக்கும் இடையில் விவாதத்தை கிளப்பும் இந்த படம் எப்படி இருக்கு? என்பதை இந்த விமர்சனத்தில் பார்க்கலாம்.
படத்தின் கதைப்படி, விளம்பர நிறுவனம் நடத்தும் நாயகன் ஷாகிர் மனோ, அழகான பெண்ணைத் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கும் இளைஞன். தன் விளம்பர நிறுவனத்துக்கு மாடல் தேடும்போது நாயகியை சந்திக்க, இருவரின் ஆரம்ப சந்திப்புகள் எல்லாமே மோதலில் முடிகின்றன. மிஸ் சென்னை போட்டியில் வெற்றி பெறும் நாயகியிடம் சோப் விளம்பரத்தில் நடிக்க கேட்க, அப்போது நடிக்க மறுக்க, அவரை நீ ஒரு அழகியே இல்லை என கலாய்த்து விட்டு வருகிறார். ஒரு எதிர்பாராத விபத்தில் அந்தப் பெண்ணின் முக அழகு பறிபோகிறது. இதற்குப் பிறகு அவளைக் காதலிக்கும் நாயகனின் மனநிலையில் ஏற்படும் மாற்றங்கள் என்ன? நாயகியை திருமணம் செய்து கொண்டாரா? அழகை மட்டுமே அடிப்படையாகக் கொண்ட காதலா அல்லது உண்மையான அன்பா என்ற கேள்விக்கு நாயகன் அளிக்கும் பதில் தான் மீதிக்கதை.
நாயகன் ஷாகிர் மனோவுக்கு இது ஒரு முக்கியமான படம். பாடகர் மனோவின் மகன் என்ற அடையாளத்தைத் தாண்டி, நடிப்பில் தனக்கான இடத்தைப் பிடிக்க வேண்டிய பொறுப்பு அவருக்கு இருக்கிறது. அந்த பொறுப்பை உணர்ந்து மிகுந்த சிரத்தை எடுத்து நடித்திருக்கிறார். பெண்களிடம் ஜெண்டில்மேனாக இருக்கும் அவர் கதாபாத்திரம் ஈர்க்கிறது. கதாநாயகி அர்ச்சனா சிங் அவரது கதாபாத்திரத்தின் மூலம் கவனம் ஈர்க்கிறார். மோதல் காட்சிகளிலும், அதன் பின் காதல் காட்சிகளிலும் நல்ல கெமிஸ்ட்ரி. முகத்தை மூடிய நிலையிலும் அவரது கண்கள் நன்றாகவே காதல் பேசுகிறது.
கதையில் இன்னொரு நாயகியாக வரும் திவ்யா நாகேஷ் ஒரு துறுதுறு கதாபாத்திரத்தில் கலகலக்கிறார். ஜாலியாக ஃபன் செய்கிறார் என நினைக்கையில் அவரும் நாயகனை காதலிப்பது இன்னொரு அதிர்ச்சி. இன்னொரு நாயகனாக வரும் ஶ்ரீமன் நல்ல இரு சாய்ஸ். அவருக்கும் நல்ப எதிர்காலம் உண்டு. நாயகனின் நண்பனாக அர்ஜூனன் நந்தகுமார் காமெடியில் சிரிக்க வைக்கிறார். தலைவாசல் விஜய், மீரா கிருஷ்ணன், இளவரசன், அஞ்சலி தேவி உள்ளிட்ட நடிகர்களின் பங்களிப்பும் படத்திற்குப் பலம் சேர்த்திருக்கிறது.
நள இளந்திரையன் இசையில் பாடல்கள் இனிமை. அவரது பாடல்களுக்காகவே நல்ல நல்ல சிச்சுவேஷன்ஸ் உருவாக்கி பாடல்களை ரசிக்க வைக்கிறார். டூயட், காதல் பாடல், குத்துப்பாட்டு என குதூகல்ப்படுத்துகிறார்கள். குறிப்பாக, கானா பாலா பாடல் அற்புதம். எம்.ஜி.ராய் ஒளிப்பதிவு
சிட்டியின் இயல்பான அழகை பதிவு செய்திருக்கிறது. சேது ரமணா படத்தொகுப்பும், டான் பாலா கலை இயக்கமும் கவனிக்க வைக்கிறது.
இயக்குனர் AC சௌந்தர் அழகை மட்டுமே வைத்து ஒருவரை மதிப்பிடக்கூடாது, உண்மையான காதல் என்பது வெளித்தோற்றத்தைத் தாண்டியது என்ற கருத்தை, நல்ல பொழுதுபோக்கு அம்சங்களுடன் சேர்த்து கமெர்சியலாக சொல்ல முயன்றிருக்கிறார். வெளித் தோற்றத்தைத் தாண்டி மனிதர்களின் உணர்வுகளையும் அன்பையும் பேசி படத்தை சுவாரஸ்யமாக்குகிறார். காதல், நகைச்சுவை, சென்டிமென்ட் என அனைத்து அம்சங்களும் சரியான விகிதத்தில் கலந்து கொடுத்திருக்கிறார். கடந்த 10 வருடங்களுக்கு முன்பு வரை நாம் ரசித்து வந்த கமெர்சியல் சினிமா பாணியில் நல்ல பாடல்கள், காமெடி, காதல் காட்சிகள் கலந்த படங்கள் இனி வராதா என ஏங்கியதுண்டு. அப்படி ஒரு கமெர்சியல் பாணி காதல் படமாக வந்திருக்கிறது இந்த மௌன மொழிகள். ஷாகிர் மனோவின் திரைப்பயணத்தில் இப்படம் ஒரு நல்ல தொடக்கமாக அமையும் வாய்ப்புகள் இருக்கிறது. மௌன மொழிகள்’ ரசிகர்களுக்கு நிச்சயமாக ஒரு நல்ல அனுபவமாக அமையும். திரையரங்கில் சென்று ரசிக்கலாம்.

