தி பாரடைஸ் – விமர்சனம்!

தெலுங்கில் முதல் படமான தசரா படத்திலேயே பெரும் அளவில் விவாதத்துக்கு உள்ளானவர் இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா. தற்போது அதே நேச்சுரல் ஸ்டார் நானி, ஸ்ரீகாந்த் ஒடேலா கூட்டணியில் மிகப்பெரும் பொர்டுசெலவில் மிக பிரமாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் ‘தி பாரடைஸ்’. படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டீசர் போன்றவை இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பை மிகப்பெரிய அளவில் உண்டாக்கியது. அனிருத் பாடல்களும் பட்டைய கிளப்பிய நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் இப்படம் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா? என்பதை இந்த விமர்சனத்தில் பார்க்கலாம்.

படத்தின் கதைப்படி, 1980-களின் ஹைதராபாத்தின் புறநகர்ப் பகுதியில் பாரடைஸ் என்ற பகுதியில் அங்கு வாழும் சவாரியா என்ற இனக்குழுவுக்கு எந்த ஒரு அடையாளமும், அங்கீகாரமும் இல்லை. பல காலம் போராடும் அவர்களை அங்கு இருக்கும் அதிகார வர்க்கமும், அதன் தலைவனாக இருக்கும் மோகன் பாபு குடும்பம் அடக்கி ஒடுக்கி வைத்திருக்கிறார்கள். அங்கு பிறந்து வளரும் நாயகன் நானி அந்த அதிகார வர்க்கத்துக்கு எதிராக கிளர்ந்து எழுகிறார். அந்த சமூக மக்களுக்கு அங்கீகாரம் பெற்றுத் தர அவர்கள் பாணியிலேயே வன்முறையை கையில் எடுக்கிறார். சமூகத்தின் விளிம்பு நிலையில் வாழும் எளிய மக்களின் தலைவனாக நானி எப்படி மாறுகிறார்? ஆதிக்கம் செலுத்தும் அதிகார வர்க்கத்திற்கு எதிராக திரும்பு எப்படி அங்கீகாரம் பெற்றுத் தருகிறார் என்பதே மீதிக்கதை.

ஆரம்ப கால கட்டங்களில் சாக்லேட் பாய் கதாபாத்திரங்களில் நடித்து பல இளைய ரசிகர்களை பெற்ற நானி சமீபத்தில் நடிக்கும் படங்களில் அதீத வன்முறை இருந்து வருகிறது. அந்த வன்முறை படங்களுக்கு எல்லாம் சிகரம் வைத்தாற்போல இந்த படத்தில் படம் முழுக்க வன்முறை நிரம்பி ரத்தம் வழிகிறது. நானியின் கோபமும், ஆக்ரோஷமும், ரஃப் அண்ட் டஃப் ஆன தோற்றமும், மிரட்டலான நடிப்பும் படத்தின் மிகப்பெரிய பலம். ஆக்‌ஷன் காட்சிகளிலும், உணர்வுப்பூர்வமான சண்டைக் காட்சிகளிலும் அவரது உடல்மொழி மிரள வைக்கிறது.

நாயகியாக வரும் கயாடு லோகர் இதுவரை பார்க்காத ஒரு கதாபாத்திரத்தில், வேறு ஒரு தோற்றத்தில் வருகிறார். சில காட்சிகளில் கவர்ச்சியில் ரசிகர்களை கிறங்கடிக்கவும் வைக்கிறார். வில்லனாக மோகன் பாபு, ரசிகர்களுக்கே கோபமூட்டும் அளவுக்கான வில்லத்தனத்தில் மிரட்டுகிறார். ராகவ் ஜூயல், சம்பூர்ணேஷ் பாபு, ஈஸ்வரி ராவ், சோனாலி குல்கர்னி என மற்ர நடிகர்களும் படம் முழுக்க சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளனர்.

ஒளிப்பதிவாளர் CH சாய் ஒளிப்பதிவு படத்தின் மிகப்பெரிய பலம். அவரின் கேமரா கோணங்கள் சண்டைக்காட்சிகளில் புகுந்து விளையாடுகிறது. 80-களின் இருண்ட காலக்கட்டத்தை நம் கண்முன்னே தத்ரூபமாக நிறுத்துகின்றது. கலை இயக்குனரின் பங்கும் அலாதியானது. படத்தின் இன்னொரு ஹீரோ அனிருத் தான். அவரின் இசையில் பாடல்கள் பட்டைய கிளப்புகின்றன. ஆயா ஷெர் பாடலும், கீர்த்தி சுரேஷ் தோன்றும் பாடலும் மற்ற பாடல்களும் சிறப்பு. பின்னணி இசையிலும் நமக்கு மேலும் வெறியேற்றுகிறார். சண்டைக்காட்சிகளை வடிவமைத்த விதம் மிகச் சிறப்பு. அதை மிகச் சிறப்பாக எடுத்திருக்கிறார்கள்.

இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா. ‘தசரா’ படத்தை விட பல மடங்கு பிரம்மாண்டத்தை திரையில் வடித்திருக்கிறார். மிகப்பெரும் ஒரு அரசியலை மிக அழுத்தமாகவும், ஆழமாகவும் பேசியுள்ளார். பல புதுமையான விஷயங்களையும் எழுதி நம்மை ஆச்சர்யப்படுத்துகிறார். ஒரு இனக்குழு, அவர்களின் வாழ்வியல், ஊதுபத்தி பிடித்துக் கொண்டு போவது, குப்பையோடு குப்பையாக நடத்தப்படுவது, அடையாளம், அடையாளத்தை அடைய விடாமல் தடுக்க அதிகாரம் படைத்தவர்கள் செய்யும் கொடூரமான சம்பவங்கள் என ஏகப்பட்ட விஷயங்களை படம் முழுக்க வைத்திருக்கிறார். ஆனால் அதை வன்முறையும் ஆக்‌ஷனும் நிறைந்த ஒரு படமாக பதிவு செய்துள்ளார். 3 மணி நேரம் படம் என்பது தான் கொஞ்சம் நம்மை அசதியாக்குகிறது. திரைக்கதையில் சில இடங்களில் வேகம் குறைந்ததும், அதீத வன்முறையை 3 மணி நேரமும் பார்த்ததும் நம்மை சோர்வடைய வைக்கிறது. மற்றபடி ஒரு வித்தியாசமான ‘தி பாரடைஸ்’ என்ற உலகை படைத்த விதத்தில் நம்மை கவனிக்க வைக்கிறார் ஸ்ரீகாந்த் ஒடேலா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *