மீசைய முறுக்கு 2 – விமர்சனம்!

2017ஆம் ஆண்டு ஹிப் ஹாப் தமிழா திரையில் கதாநாயகனாக அறிமுகமாகிய திரைப்படம் ‘மீசைய முறுக்கு 2’. அவரே எழுதி இயக்கி நடித்த அந்த படம் மாபெரும் வெற்றியை பெற்றது. தற்போது அந்த படத்தின் இரண்டாம் பாகமாக வெளியாகியிருக்கிறது ‘மீசைய முறுக்கு 2’. அறிவித்ததில் இருந்தே எதிர்பார்ப்பு எகிற, வெளியாகிய ஒவ்வொரு பாடலும் பட்டி தொட்டியெங்கும் வைரல். இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் இந்த படம் ‘தியேட்டர்களில் கான்செர்ட்’ என்ற அறிவிப்புடன் வெளியாகியுள்ளது. படம் எப்படி இருக்கு? என்பதை இந்த விமர்சனத்தில் பார்க்கலாம்.

படத்தின் கதைப்படி, வடசென்னையில் ராயபுரத்தில் 70, 80களில் வாழும் கானா இசைக்கலைஞர் தாஸ் (ஆதி), அந்த காலகட்டத்தில் இருந்த சங்கீத சபைகளால் அவரின் திறமையை வெளிக் கொண்டு வர முடியாமலே போகிறது. அவரும் கடைசி வரை திருவிழா, கச்சேரி என கானா பாடியே வாழ்க்கையை கழிக்கிறார். அவரின் மகன் டைகர் சிவாவும் (ஆதி) கானா பின்புலத்தால் அவமதிக்கப்பட்டு போராடி வெற்றி பெறாமல் பஸ் டிரைவராக காலத்தை ஓட்டுகிறார். அவரின் மகன் ஜீவாவுக்கும் (ஆதி) இசையில் திறமை இருந்தும் வாய்ப்பு கிடைக்காததால் போராடுகிறார். தாத்தா, அப்பா தவற விட்ட அந்த வெற்றியை பேரன் ஜீவா பெற்றாரா என்பதே மீதிக்கதை. இப்படி தலைமுறை தலைமுறையாக இசையையும் கானா கலையையும் நம்பி வாழும் கலைஞர்களின் வாழ்வியலையும் போராட்டங்களையும் மூன்று தலைமுறை கடந்து பேசுவதே இந்த ‘மீசைய முறுக்கு 2’.

நாயகனாக நடித்துள்ள ஹிப்ஹாப் ஆதி முதன் முறையாக மூன்று கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். ஜீவா ரோலில் வழக்கம் போல் துடிப்பான நடிப்பாலும், யதார்த்தமான இன்றைய இளைஞர்களை பிரதிபலிக்கிறார். தாஸ் மற்றும் சிவா கேரக்டர்களில் மாஸ் காட்டுகிறார். நாயகிகளாக மூன்று பேர், அதில் ரம்யா ரங்கநாதனுக்கு கிடைத்த வாய்ப்பை மிகச்சரியாக பயன்படுத்திக் கொண்டுள்ளார். சைத்ரா ஆச்சார் வரும் காட்சிகளில் குறைவு என்றாலும் மனதில் பதிகிறார். கேதிகா ஷர்மா இன்றைய ஜென்சீ பெண்களை பிரதிபலிக்கிறார். மாடர்ன் பெண்ணாக, கியூட்டான நடிப்பை தந்திருக்கிறார்.

கருணாஸ், பாபா பாஸ்கர் இருவருமே படத்தை தாங்கிப் பிடிக்கிற முக்கியமான தூண்கள் என்றே சொல்லலாம். அவர்கள் பேசும் வசனங்கள் வாழ்வியல் யதார்த்தத்தை அழகாக பேசுகிறது. நாசர், ஆடுகளம் நரேன், யோகி பாபு, கருணாகரன், ஹர்ஷத் கான், ஷாரா, பகவதி பெருமாள் என மற்ற நடிகர்கள் எல்லோருமே சிறப்பான நடிப்பை தந்து ரசிக்க வைக்கிறார்கள்.

பாலாஜி ஒளிப்பதிவு கலர்ஃபுல்லாகவும் அதே சமயம் வட சென்னை கானா உலகத்தையும் 80,90களையும் நம் கண் முன் கொண்டு வந்திருக்கிறது. ஹிப் ஹாப் தமிழா கான்செர்ட் என்று போர்டு போட்ட பிறகு இசையை பற்றி பேச என்ன இருக்கிறது. படம் முழுக்க ஹிப் ஹாப் தமிழாவின் இசை மாயாஜாலம் தான். ஒவ்வொரு ஜானரிலும் பாடல்கள் வந்து விழுந்து கொண்டே இருக்கின்றன. வைப் சாங், கானா, சோக பாடல், துள்ளல் பாடல், உத்வேக பாடல், மீசைய முறுக்குவின் டிரேட் மார்க் பாடல் என இசைக் கச்சேரியை ரசித்த உணர்வை நிச்சயம் தந்திருக்கிறார் ஆதி. 2:20 என்ற கச்சிதமான ரன் டைம் படத்துக்கு பேருதவி புரிந்திருக்கிறது.

இயக்குநர் ஹிப் ஹாப் ஆதி, மீசைய முறுக்கு படத்தை எடுத்தபோதே அதுக்குள்ள பயோபிக் எடுத்துட்டாரே என பலரும் பேசினார்கள். ஆனால் இந்த படத்தில் இசைக்கலைஞர்களின் ஒன்னொரு பரிமாணத்தை சொல்லியிருக்கிறார். வெறும் கமர்ஷியல் வெற்றிக்காக படத்தை எடுக்காமல், பாரம்பரிய கானா இசைக் கலைஞர்களின் வலியையும், அங்கீகாரத்துக்காக போராடும் கலைஞர்களின் வாழ்வியலையும் யதார்த்தமாக பதிவு செய்துள்ளார். நிகழ் காலக் கதையில் முதல் பாகம் போலவே நெபோடிஸம் பற்றியும் பேசியிருக்கிறார். கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் கும்பலாக திரையரங்குகளுக்கு சென்றால் கொண்டாட்டம் நிச்சயம். மற்றபடி குடும்பத்துடன் சென்று ரசிக்கக்கூடிய ஒரு எனர்ஜடிக் மியூசிக்கல் எண்டர்டெய்னர் இந்த ‘மீசைய முறுக்கு 2’.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *