நடிகர் திலகம் சிவாஜி கணேசன் குடும்பத்தில் இருந்து அறிமுகமாகியிருக்கும் இன்னொரு நடிகர் சிவாஜி கணேசனின் பேரன் தர்ஷன் கணேசன். சத்யஜோதி தயாரிக்க, அறிமுக இயக்குனர் டிடி பாலச்சந்திரன் இயக்க கங்கை அமரன், ரோஜா போன்ற ஜாம்பவான்களின் நடிப்பில், இசை ஞானி இளையராஜா இசையில் உருவாகியுள்ள படம் தான் ‘லெனின் பாண்டியன்’. கிராமத்து மக்களின் வாழ்வியலையும் அதிகார வர்க்கத்திற்கு எதிரான சாமானியர்களின் போராட்டத்தையும் பேசும் திரைப்படமான இந்த படம் எப்படி இருக்கு? என்பதை இந்த விமர்சனத்தில் பார்க்கலாம்.
படத்தின் கதைப்படி, தென் மாவட்டத்தில் இன்றும் பேசப்படும் ஒரு சம்பவம் மணல் கொள்ளை. அந்த மணல் கொள்ளையை நடத்தும் சட்டவிரோத மணல் மாஃபியா கும்பல் அதிகாரத்தை தன் பிடியில் வைத்துக் கொண்டு ஏகபோகமாக அதை செய்து வருகிறது. அதே ஊரில் வாழும் கங்கை அமரன், ரோஜா தம்பதிக்கு வாரிசுகள் இல்லை. தாங்கள் வளர்க்கும் ஆட்டை வாரிசாக நினைத்து வளர்த்து வர, அந்த மணல் கடத்தல் லாரியில் அடிபட்டு அந்த ஆடு இறந்து போகிறது. காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப் போக அங்கும் அவமானப்படுத்தப்படுகிறார் முதியவரான கங்கை அமரன். மனைவி ரோஜா சொல்படி நீதிமன்றத்தை நாட, அங்கு இருக்கும் நீதிபதி ஜார்ஜ் மரியான் நேர்மையான முறையில் விசாரித்து கங்கை அமரன் பாதுகாப்புக்கு கான்ஸ்டபிள் தர்ஷன் கணேசனை நியமிக்கிறார். மணல் மாஃபியாவிடம் இருந்து தங்களை காத்து நியாயத்தை நிலை நாட்டினார்களா? கங்கை அமரன், ரோஜா தம்பதிக்கும், தர்ஷன் கணேசனுக்குமான உறவு எப்படி இருந்தது? என்பதே மீதிக்கதை.
கதாநாயகனாக அறிமுகமாகியுள்ள தர்ஷன் கணேசன் முதல் படத்திலேயே சிவாஜி, கார்த்தி, விக்ரம் பிரபு போன்றோர் போல முத்திரை பதிக்காவிட்டாலும் அந்த எளிய காவல்துறை அதிகாரிக்கான கச்சிதமான உடல்மொழியாலும், உணர்வுகளாலும் நம் கவனத்தை ஈர்க்கிறார். அவருக்கு ஜோடியாக நடித்துள்ள ஸ்ரித்தா ராவ் ஒரு இளம் காதல் மனைவியாக, நாயகனுக்கு உற்ற துணையாக நல்ல நடிப்பை தந்துள்ளார்.
கதையின் நாயகனாக வரும் கங்கை அமரன் படம் முழுக்க தடுமாற்றமான நடையாலும், உடல் வலிமை இல்லையென்றாலும் மன வலிமையோடு மாஃபியா கும்பலை எதிர்த்து நிற்கும் கதாபாத்திரத்தில் ஸ்கோர் செய்கிறார். ரோஜா செல்வமணி கணவர் மீது அதீத அன்பு கொண்ட மனைவியாகவும், கணவனை வழிநடத்தும் ஆளுமை மிக்கவராகவும் சிறந்த நடிப்பை வழங்கியுள்ளார். ஜார்ஜ் மரியான் வரும் காட்சிகள் எல்லாமே தியேட்டரில் கைதட்டல்களை அள்ளுகிறது. அர்ச்சனா ரவிச்சந்திரன் சில நிமிடங்களே வந்தாலும் மனதில் ஆழமாக பதிகிறார். ஆடுகளம் நரேன், போஸ் வெங்கட், யுகேந்திரன் போன்ற அனுபவமிக்க நடிகர்களின் பங்களிப்பு படத்துக்கு பலம்.
இசைஞானி இளையராஜாவின் இசை படத்திற்கு மிகப்பெரிய பலம் சேர்த்துள்ளது. 2026-லும் அவரது இசையும், கிராமத்து மண் வாசனையை நமக்கு உணர வைக்கிறது. அதிரடியான பின்னணி இசை முக்கிய காட்சிகளின் விறுவிறுப்பை கூட்டுகிறது. எட்வின் சகாய் ஒளிப்பதிவு அந்த கிராமத்து யதார்த்த அழகை நேர்த்தியாக பதிவு செய்கிறது. நாகூரான் ராமச்சந்திரன் படத்தொகுப்பு கதையின் ஓட்டத்தை பாதிக்காத அளவு மிதமான வேகத்தில் நகர்ந்து நல்ல அனுபவத்தை தந்துள்ளது.
இயக்குநர் டி.டி. பாலச்சந்திரன், எளிய மனிதர்கள் vs அதிகார வர்க்கம் என்ற போராட்டத்தை மிக அழகாக கையாண்டு அந்த அதிகார அரசியலை தைரியமாக தோலுரித்துக் காட்டியுள்ளார். கிராமாத்தில் கங்கை அமரன் சம்பந்தப்பட்ட காட்சிகளில் திரைக்கதையில் கொஞ்சம் தொய்வு இருந்தாலும் அடுத்தடுத்து நீதிமன்ற காட்சிகள், மணல் மாஃபியா உடனான மோதல் காட்சிகள் வந்து நம்மை உட்கார வைக்கிறது. வயதான தம்பதி, இளம் தம்பதியின் காட்சிகளும் இன்றைய தலைமுறை பார்க்க வேண்டிய முக்கிய அம்சம். சமூக அக்கறை கலந்த ஒரு கிராமத்து வாழ்வியலை பேசும் இந்த ‘லெனின் பாண்டியன்’ சில குறைகளை தவிர்த்து விட்டு பார்த்தால் நிச்சயம் பாராட்டப்பட வேண்டிய படமாகவே அமைந்துள்ளது.
SK CINEMAS Rating: 3/5

