டைட்டானிக் – விமர்சனம்!

கலையரசன், ஆனந்தி, ஆஷ்னா சவேரி, காளி வெங்கட், காயத்ரி, ராகவ் விஜய் ஆகியோர் நடிப்பில், அறிமுக இயக்குநர் எம். ஜானகிராமன் இயக்கத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் ‘டைட்டானிக்’. ஒரு ரொமாண்டிக் காமெடி படமாக உருவாகியுள்ள இந்த படம் நீண்ட நாட்களாகத் தயாரிப்பில் இருந்தது. சிவி குமார் தயாரித்துள்ள இந்தப் படம் எப்படி இருக்கு? என்பதை இந்த விமர்சனத்தில் பார்க்கலாம்.

படத்தின் கதைப்படி, ராகவ் விஜய் மாலை நடக்கும் தனது திருமணத்துக்காக சென்னையிலிருந்து பெங்களூருவுக்கு ரயிலில் செல்கிறார். அந்த பயணத்தில் கலையரசன், காளி வெங்கட் ஆகிய இருவரையும் சந்திக்க, மூன்று பேரும் பேசிப் பேசி நண்பர்களாக மாறுகிறார்கள். அவர்களின் காதல் வாழக்கையை ஒவ்வொருவரும் பகிர்ந்து கொள்கிறார்கள். திருமணத்திற்கு தயாராக இருக்கும் ராகவ் விஜய், காதல் தோல்வியின் நினைவுகளுடன் வாழும் கலையரசன், காதலில் ஏமாற்றங்களை சந்தித்த பின் திருமணம் செய்து கொண்டு செட்டிலான காளி வெங்கட் ஆகிய இந்த மூவரின் நட்பும், அதன் பின் அவர்கள் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களுமே மீதிக்கதை.

நாயகன் கலையரசன் காதலில் தோல்வியடைந்து காதலியை நினைத்தே ஆறு வருடங்களை கடக்கும் இளைஞனாக கலையரசன் அவரது இயல்பான நடிப்பால் கவனம் ஈர்க்கிறார். காதல் மற்றும் நகைச்சுவை கலந்த காட்சிகளில் அவருடைய நடிப்பு கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக அமைந்துள்ளது. நாயகி கயல் ஆனந்தி, இதுவரை அவர் செய்யாத ஒரு கதாபாத்திரம். மூன்று பேரின் வாழ்விலும் வந்து போகும் ஒரு பெண்ணாக மிக இயல்பாக, கலகலப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

காளி வெங்கட் அவரது வெள்ளந்தியான கதாபாத்திரத்தின் மூலமும், பேச்சு வழக்கின் மூலமுமே நம்ம சிரிக்க வைக்கிறார். பள்ளி மாணவராக பார்க்கும்போதே நம்மை அறியாமல் சிரிப்பு வருவதையும் தவிர்க்க முடியவில்லை. ராகவ் விஜய் இந்த இரண்டு அனுபவ நடிகர்களுக்கு இணையாக ஈடு கொடுத்து நடித்திருக்கிறார். கெஸ்ட் ரோலில் ஆஷ்னா சவேரி, காயத்ரி, பாலாஜி மோகன் ஆகியோரும் ரசிக்க வைக்கிறார்கள். மதுமிதா, தேவதர்ஷினி உள்ளிட்ட மற்ற நடிகர்களும் படத்திற்கு வலு சேர்க்கின்றனர்.

நிவாஸ் கே. பிரசன்னாவின் இசை படத்துக்கு பலமாக அமைந்திருக்கிறது. தெகிடி விண்மீன் பாடல் போல வரும் ஒரு பாடல் படத்தின் காதல் பின்னணிக்கு ஏற்ற வகையில் அழகாக அமைந்துள்ளது. சிம்பு பாடியுள்ள ‘கொக்க மக்க’ பாடல் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கிறது. பாலு ஒளிப்பதிவில் ரயில் பயண காட்சிகளும், ஊட்டி, கோயமுத்தூர் காட்சிகளும் கலர்ஃபுல்லாக ரசிக்க வைக்கிறது. ராதாகிருஷ்ணன் தனபால் மற்றும் இக்னேஷியஸ் அஸ்வின் ஆகியோரின் படத்தொகுப்பு படத்தின் வேகத்திற்கு முக்கியப் பங்கு வகிக்கிறது. 1:55 மணி நேரம் என்பது கச்சிதமான நீளம்.

இயக்குநர் எம். ஜானகிராமன், முதல் படத்திலேயே மூன்று வெவ்வேறு காதல் அனுபவங்களை ஒரே பயணத்தின் வழியாக இணைக்க முயற்சி செய்திருக்கிறார். அதை ரொமாண்டி காமெடி படமாக சொல்லியிருப்பது இன்னும் ரசிக்கும்படி அமைந்துள்ளது. காதல், காமெடி, பாடல்கள் என கலர்ஃபுல்லாக ரசிக்கும் படமாக கொடுத்து ஜாலியாக ஒரு படம் பாக்கணும் என வரும் ரசிகர்களுக்கு நல்ல ஒரு எண்டர்டெயினரை தந்துள்ளார். மொத்தத்தில் ‘டைட்டானிக்’ இளைஞர்களைக் கவரும் நோக்கத்துடன் வந்திருக்கும் ஒரு நல்ல ரொமான்டிக் காமெடி. நிச்சயம் ஒரு முறை தியேட்டரில் போய் பார்க்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *