‘FLAG’ – விமர்சனம்!

தேசியக் கொடியின் பெருமையையும், தேசப்பற்றையும் ஒரு சிறுவனின் லட்சியம் வழியாக சொல்ல முயற்சிக்கும் உணர்வுப்பூர்வமான படைப்பு தான் “FLAG”. இயக்குநர் எஸ்.பி.பொன்ஷங்கர் எழுதி இயக்கியிருக்கும் இப்படத்தில் மிக்கி மக்கிஜா, மாஸ்டர் தீஹான் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். Make in India என்று சொல்வது போல இந்தியா முழுக்க சுற்றி படமாக்கப்பட்டிருக்கும் இந்த படம் தேசப்பற்றை பேசுவதோடு நின்று விடாமல் குடும்ப உணர்வுகளையும் தலைமுறைகளுக்கு இடையிலான பாசத்தையும் பேசியிருக்கும் இந்த படம் எப்படி இருக்கு? என்பதை இந்த விமர்சனத்தில் பார்க்கலாம்.

படத்தின் கதைப்படி, மாஸ்டர் தீஹான் ஒரு விபத்தில் தனது பெற்றோரை இழந்து யாரும் இல்லாத சூழலில் கர்நாடகாவில் இருக்கும் அவனின் தாத்தாவிடம் ஒப்படைக்கப்படுகிறான். தாத்தா அரவணைப்பில் வளர்கிறான் தீஹான். தேசியக் கொடிகளைத் தயாரிக்கும் தொழிற்சாலையில் பணிபுரியும் தாத்தாவுக்கு, டெல்லி இந்தியா கேட் பகுதியில் நடைபெறும் குடியரசு தினக் கொடியேற்றத்தை நேரில் ஒருமுறையாவது பார்க்க வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை. ஆனால் எதிர்பாராத விதமாக அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். தாத்தாவின் ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் சிறுவன் தீஹான் தன்னந்தனியாக மேற்கொள்ளும் முயற்சிகளும், அதில் எதிர்கொள்ளும் சவால்களும் தான் மீதிக்கதை.

மோகன வேலு கதாபாத்திரத்தில் மாஸ்டர் தீஹான் ஒரு துறுதுறு சிறுவனாக ரசிக்க வைக்கிறான். பெற்றோரை இழந்த சோகம், தனிமை, லட்சியத்தை நோக்கிய பயணம், பயணத்தில் சந்திக்கும் மனிதர்களுடன் காட்டும் அன்பு என நல்ல நடிப்பை வழங்கியிருக்கிறான். தன்னுடைய தனிப்பட்ட ஆசை, தாத்தா மீதான பாசம், அதை நிறைவேற்றுவதற்கான உறுதி ஆகிய உணர்வுகளை மிகச்சிறப்பாக வெளிப்படுத்துகிறார். தாத்தாவாக மிக்கி மக்கிஜா ஒரு அனுபவமிக்க நடிப்பை வழங்கியிருக்கிறார். சினி சிவ்ராஜ் யுதன், அமிர் மாலிக், கார்த்திக், கிரி துவாரகேஷ் உள்ளிட்ட மற்ற நடிகர்களும் கதைக்கு தங்கள் நடிப்பால் வலு சேர்க்கிறார்கள்.

இயக்குனர் எஸ்.பி.பொன்ஷங்கரே படத்தின் ஒளிப்பதிவாளர் என்பதால் கதையின் உணர்வுகளுக்கு ஏற்ப காட்சிகளை படமாக்கியிருக்கிறார். குறிப்பாக இந்தியா முழுக்க பல மாநிலங்கள், நகரங்களை மிக அழகாக நம் கண் முன் நிறுத்தியிருக்கிறார். ராஜா ரவிவர்மா பாலசுப்ரமணியத்தின் இசை படத்தின் உணர்ச்சிகரமான தருணங்களுக்கு வலு சேர்க்கிறது. டி. வரதராஜனின் படத்தொகுப்பு கதை நகர்வில் முக்கியப் பங்கு வகிக்கிறது. 2 மணி நேரம் நீளம் என்பது கூடுதல் பலம்.

இயக்குநர் எஸ்.பி.பொன்ஷங்கர், தேசியக் கொடியை மையமாகக் கொண்டு ஒரு சிறுவனின் கனவை இணைத்து கதை சொல்ல முயற்சி செய்திருப்பது பாராட்டத்தக்கது. சிறுவன் தனியாக மேற்கொள்ளும் ஒரு பயணத்தை திரையில் காட்டிய விதம் அருமை. தேசியக் கொடி தயாரிக்கப்படும் தொழிற்சாலை என்ற விஷயமே கொஞ்சம் புதுமையாக இருந்தது. சிறுவனின் பயணத்தைச் சுற்றிய சவால்களையும் உணர்வுகளையும் இன்னும் அழுத்தமாகக் கையாண்டிருந்தால் படத்தின் தாக்கம் மேலும் அதிகரித்திருக்கும். மொத்தத்தில் சிறுவனை கதையின் மையக் கதாபாத்திரமாக வைத்து தேசப்பற்று ஊட்டும் ஒரு முக்கியமான முயற்சியாக ‘FLAG’ திரைப்படம் அமைந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *