பிளாக் கோல்டு – விமர்சனம்!

வித்தியாசமான கதைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வெற்றியை பெற்று வரும் நடிகர் வெற்றி நடிப்பில், தீரன் அருண்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பிளாக் கோல்டு’. தலைப்பிலேயே வித்தியாசத்தை தந்து, ஆர்வத்தை தூண்டியிருக்கும் இந்த ‘பிளாக் கோல்டு’ இதுவரை யாருமே கவனிக்காத, சொல்லாத ஒரு வணிகத்தின் பின்னணியில் உருவாக்கப்பட்டிருக்கிறது. பிளாக் கோல்டு என்றால் என்ன? இந்த படம் பேசும் விஷயம் என்ன? என்பதை இந்த விமர்சனத்தில் பார்க்கலாம்.

படத்தின் கதைப்படி, அப்பா லிவிங்ஸ்டன், அம்மா, தங்கை உடன் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார் நாயகன் வெற்றி. தன் காதலி நாயகி பிரியாலயா பெற்றோர் காதலை ஏற்காததால் தன் வேலை உண்டு தான் உண்டு என இருந்து வருகிறார். இந்நிலையில் ஏ.வெங்கடேஷின் தங்கம் எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தில் டிரைவராக இருக்கும் அப்பா லிவிங்ஸ்டன் முதலாளி கொடுத்து அனுப்பும் பல கோடி ரூபாய் மதிப்பிலான சரக்கு கொண்டு போகும்போது சரக்குடன் காணாமல் போகிறார். அந்த டெம்போ என்ன ஆனது? அந்த வண்டியில் இருந்த சரக்கு என்ன? லிவிங்ஸ்டன் என்ன ஆனார்? இந்த வணிகத்தின் பின்னணியில் அதிகாரம் செலுத்தும் மாஃபியா கும்பல்கள், அவர்களுக்கிடையிலான போட்டி, பணப்பேராசை, துரோகம், வன்முறை எனப் பல்வேறு அம்சங்களைச் சொல்வதே மீதிக்கதை.

நாயகன் வெற்றி, வழக்கம் போல பக்கத்து வீட்டு இளைஞனை நினைவுபடுத்தும் இயல்பான நடிப்பின் மூலம் கவனம் ஈர்க்கிறார். அப்பா மீது வைத்திருக்கும் அன்பு, எந்த சூழலிலும் சுயமரியாதையை விட்டுக் கொடுக்காத குணம், எதிரிகளை எதிர்த்து சண்டையிடும் தைரியம் என மிகச் சிறப்பான ஒரு நடிப்பை வழங்கியிருக்கிறார். நாயகி பிரியாலயா காதல் காட்சிகளில் ரசிக்க வைக்கிறார். Event management நிறுவனம் நடத்தும் பெண்ணாக இன்றைய Strong-ஆன இளம் பெண்களை பிரதிபலிக்கிறார்.

நாயகனின் அப்பாவாக லிவிங்ஸ்டன் ஒரு உணர்வுப்பூர்வமான கதாபாத்திரத்தில் வந்து சராசரி மிடில் கிளாஸ் அப்பாவாக வாழ்ந்திருக்கிறார். கம்பீரமான காவல்துறை அதிகாரியாக அபிராமி வெங்கடாசலம் கவனம் ஈர்க்கிறார். ஏ. வெங்கடேஷ், அருள் டி ஷங்கர் இருவரும் சண்டக்கோழிகளாக எதிரெதிர் திசையில் நின்று மோதிக் கொள்கிறார்கள். அதுவும் படத்துக்கு தனி ஒரு பரிமாணத்தை கொடுத்திருக்கிறது. விஜய் டிவி ராமர் சில காட்சிகளே வந்து போகிறார். 4 முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்தவர்களும் கவனிக்க வைக்கிறார்கள்.

சந்தோஷ் குமார் வீரசாமியின் ஒளிப்பதிவு படத்தின் தரத்தையும், பட்ஜெட்டையும் உயர்த்திக் காட்டியிருக்கிறது. டாப் ஆங்கிள் காட்சிகள் நமக்கு இன்னொரு perspective-ல் காட்சிகளை பார்க்க உதவியாக இருக்கிறது. இப்படிப்பட்ட நல்ல லொகேஷன்களை தேர்ந்தெடுத்ததற்கும் கூடுதல் பாராட்டுக்கள். கவாஸ்கர் அவினாஷின் இசை படத்துக்கு பேருதவி புரிந்திருக்கிறது. 2 மணி நேரம் ஓடும் இந்த படத்தில் தினேஷ்குமாரின் படத்தொகுப்பு முக்கிய பங்காற்றி இருக்கிறது.

‘தீர்ப்புகள் விற்கப்படும்’ என்ற படத்தை இயக்கிய தீரன் அருண்குமார், இந்தப் படத்தில் இதுவரை அதிகம் பேசப்படாத ஒரு வணிகத்தின் இருண்ட பக்கத்தைத் திரைக்குக் கொண்டு வந்துள்ளார். இப்படி எல்லாம் ஒரு விஷயம் இருக்கிறதா? இதற்கும் பெரும் போரே நடக்கிறதா? என நம்மை ஆச்சர்யப்பட வைக்கிறார். இந்த வணிக பின்னணியை மிக மிக விறுவிறுப்பாக கையாண்டிருக்கிறார். கதையின் திருப்பங்கள் நம்மை சீட்டிலேயே கட்டிப் போடுகிறது. இப்படிப்பட்ட கதையில் குடும்ப உறவுகள், காதல், அப்பா மகன் பாசம் போன்ற உணர்வுப்பூர்வமான விஷயங்களையும் சரியான விகிதத்தில் கலந்து கொடுத்திருக்கிறார் இயக்குனர். ஒரு சர்வதேச வணிக சந்தையையும், அதன் பின்னால் இயங்கும் மிகப்பெரிய வணிக வலையமைப்பையும் கதைக்களமாகக் கொண்டுள்ள இப்படம், வழக்கமான ஆக்‌ஷன் படங்களிலிருந்து மாறுபட்ட படமாக அமைந்துள்ளது. மொத்தத்தில், வித்தியாசமான கதைக்களம், வணிக உலகின் மறுபக்கம், குடும்ப உறவுகள் என எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் திரைப்படமாக ‘பிளாக் கோல்டு’ அமைந்துள்ளது. நிச்சயம் பார்க்கக் கூடிய ஒரு படம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *