சூர்யா, நஸ்ரியா, நஸ்லென் நடிப்பில் ஜித்து மாதவன் இயக்கத்தில் வெளியாகியுள்ள ஒரு கிரைம் திரில்லர் திரைப்படம் ‘சீன்’ (Scene). வழக்கமான படங்களில் இருந்து மாறுபட்டு நகைச்சுவை, விறுவிறுப்பு, எதிர்பாராத திருப்பங்கள் மற்றும் மேக்கிங்கில் ஒரு நியூ ஜெனரேஷன் கமெர்சியல் படத்தைக் கொடுக்க முயற்சித்திருக்கிறார் இயக்குனர் ஜித்து மாதவன். மலையாளத் திரையுலகில் ரோமாஞ்சம், ஆவேசம் படங்களின் மூலம் கவனம் ஈர்த்த ஜித்து மாதவன் தமிழில் சூர்யா போல ஒரு ஹீரோவை வைத்து முதல் படத்திலேயே வித்தியாசமான கதைக்களத்தை தேர்வு செய்திருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கிறது. அந்த எதிர்பார்ப்பை இந்த ‘சீன்’ பூர்த்தி செய்ததா? என்பதை இந்த விமர்சனத்தில் பார்க்கலாம்.
படத்தின் கதைப்படி, காவல்துறையில் டிஎஸ்பியாகப் பணியாற்றும் சூர்யா, வேலையில் பெரிய அளவில் ஆர்வமில்லாமல் இருப்பதோடு பணிபுரியும் இடத்தில் யாரையுமே மதிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு எழுகிறது. ஆனாலும் தீர்க்க முடியாத வழக்குகளை எல்லாம் சுலபமாக முடித்தவர் என்பதால் உயர் அதிகாரிகள் உட்பட அனைவரும் அவரை பொறுத்துக் கொள்கின்றனர். இந்நிலையில் ராஜினாமா செய்ய கடிதம் கொடுக்கிறார். ஒரு கட்டத்தில் ஜெயிலில் இருக்கும் முக்கியமான சீரியல் கில்லர் ஒருவனை விசாரிக்க சிறைக்கு செல்கிறார் சூர்யா. மறுபுறம் நஸ்லென் பணத்திற்காக திட்டமிட்டுக் கொலைகளைச் செய்து வருகிறான். தொடர் கொலைகள் காவல்துறைக்குப் பெரும் சவாலாக மாறும் நிலையில், ஏற்கெனவே நடந்த ஒரு கொலை வழக்குடன் தற்போதைய சம்பவங்களுக்குத் தொடர்பிருப்பதை சூர்யா கண்டறிகிறார். Unofficial-ஆக தனக்கென ஒரு குழுவை அமைத்துக் கொண்டு விசாரணையில் இறங்குகிறார் சூர்யா. பல பிரச்சினைகளை தாண்டி அந்த கொலையாளியை சூர்யா எப்படிக் கண்டுபிடிக்கிறார் என்பதே மீதிக்கதை.
சூர்யா வழக்கமான மாஸ் ஹீரோ பிம்பத்தைத் தாண்டி, வித்தியாசமான உடல்மொழியுடனும் நகைச்சுவை உணர்வுடனும் அவர் கேரியரில் இதுவரை செய்யாத ஒரு கோணத்தில் ரசிக்க வைக்கிறார். அவரது அனுபவம் இந்த படத்துக்கு ரொம்பவே கைகொடுத்திருக்கிறது. ஆக்ஷன், நகைச்சுவை, எமோஷன் என ஒவ்வொரு இடத்திலும் கதாபாத்திரத்திற்கு ஏற்ற நடிப்பை வழங்கியிருக்கிறார். படம் முழுக்க அவர் காட்டும் அலட்சியமான உடல்மொழி ஒரு தனி Swag. ட்ரைலர் பார்த்து விட்டு படத்தில் பார்க்கும்போது நம்மை ஆச்சர்யப்பட வைக்கிறார்கள்.
ரசிகர்களின் கியூட் நாயகியான நஸ்ரியா நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழில் நடித்திருக்கிறார். துடிப்பான நடிப்பால் கவனம் ஈர்க்கிறார். சூர்யாவுடன் சேர்ந்து செய்யும் சேட்டைகளும், அதிரடியான சண்டைக் காட்சிகளும் ரசிக்க வைக்கின்றன. மெல்லிய மனம் வருடும் காதல் காட்சியும் ரசிக்க வைக்கிறது. வில்லனாக நஸ்லென். மலையாள நடிகர்களுக்கே உண்டான இயல்பான நடிப்பால் மிரட்டுகிறார். அமைதியான சின்னப்பையனாக வலம் வந்தாலும் கொடூரமான குணத்தை சில காட்சிகளில் அப்பட்டமாக வெளிப்படுத்தியிருக்கிறார். லால், ஆனந்த்ராஜ், ராஜ்பிரியன் மற்றும் மற்ற நடிகர்களும், தமிழுக்கு புதிதான சில முகங்களும் சிறப்பான பங்களிப்பை செய்திருக்கிறார்கள்.
ஆவேசம் இல்லுமினாட்டி பாடலை தந்த சுஷின் ஷியாம் எப்போது தமிழுக்கு வருவார் என்ற ஏக்கத்தை இந்த சீன் போக்கியுள்ளது. பாடகள் படத்தோடு கேட்க ரசிக்கும்படி உள்ளது. பின்னணி இசை படத்தின் டெம்போவை தக்க வைக்கிறது. வினீத் அகஸ்டியனின் ஒளிப்பதிவு கதையின் தன்மைக்கு ஏற்ற வகையில் அமைந்துள்ளது. அஜ்மல் சாபுவின் படத்தொகுப்பு திரைக்கதையின் வேகத்திற்கு உறுதுணையாக இருக்கிறது. ஆக்ஷன் காட்சிகளும் சிறப்பு.
‘ரோமாஞ்சம்’, ‘ஆவேஷம்’ படங்களின் மூலம் கவனம் மலையாள சினிமாவில் ஒரு ட்ரெண்ட்செட்டராக கவனம் ஈர்த்த ஜித்து மாதவன், சூர்யா போன்ற ஒரு மிகப்பெரிய ஸ்டாரை தனது உலகத்துக்குள் கொண்டு வந்து தனித்துவமான ஒரு டார்க் காமெடி படத்தை தந்திருக்கிறார். வழக்கமான போலீஸ் விசாரணைக் கதையாக இல்லாமல், பல சுவாரஸ்யமான திருப்பங்களுடன் திரைக்கதை நகர்கிறது. படத்தில் வரும் முக்கிய கதாபாத்திரங்களின் விசித்திரமான குணாதிசயங்கள் படத்தை மேலும் சுவாரஸ்யமாக்குகிறது.
சூர்யா, நஸ்ரியா ஜோடியின் கெமிஸ்ட்ரி அவ்வளவு கியூட். சூர்யாவின் பழைய படங்களுக்கு ட்ரிபியூட் கொடுக்கப்பட்டதும், நஸ்லெனிடம் சூர்யா பேசும் அந்த ஒரு வசனமும் ரசிகர்களுக்கு ட்ரீட். வித்தியாசமான திரைக்கதை, சூர்யாவின் கலகலப்பான நடிப்பு, நஸ்ரியா, நஸ்லெனின் உட்பட நடிகர்களின் பங்களிப்பு என அனைத்தும் இணைந்து ‘சீன்’ படத்தை ‘செம்ம சீனாக’ மாற்றியிருக்கிறது. இந்த தீபாவளிக்கு குடும்பத்துடன் போய் கொண்டாடி விட்டு வரலாம்.
SK CINEMAS Rating – 4/5

