2020ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வெற்றியடைந்த ‘மூக்குத்தி அம்மன்’ திரைப்படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகியுள்ள படம் ‘மூக்குத்தி அம்மன் 2: மஹாசக்தி’. ஆர்.ஜே. பாலாஜி முதல் பாகத்தை இயக்கியிருந்தார். இந்த படத்தை சுந்தர்.சி இயக்கியுள்ளார். முந்தைய படத்தின் நகைச்சுவை மற்றும் சமூகக் கருத்துகளிலிருந்து விலகி, புராணம், தெய்வீக சக்தி, மாயாஜாலம் மற்றும் பிரம்மாண்டமான காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. முந்தைய படத்திலிருந்து முற்றிலும் வேறொரு பரிமாணத்தில் மிக பிரமாண்டமாக உருவாகியிருக்கும் இந்த ‘மூக்குத்தி அம்மன் 2’ எப்படி இருக்கு? என்பதை இந்த விமர்சனத்தில் பார்க்கலாம்.
படத்தின் கதைப்படி, சென்னையில் காவல்துறையில் பணிபுரியும் பெண்ணான நயன்தாராவுக்கு தினமும் கனவில் அவரது அறையில் பல விஷயங்கள் அமானுஷ்யமாக வந்து போகிறது. அவை ஏதோவொரு விஷயத்தை சொல்ல முயற்சிக்கிறது. மைலாஞ்சி என்ற வார்த்தை அடிக்கடி வந்து, மைலாஞ்சி என்ற ஊருக்கு செல்ல நிர்பந்திக்கிறது. ஒரு சூழலில் மைலாஞ்சிக்கு பணியிட மாற்றம் வாங்கிக் கொண்டு வளர்ப்பு அம்மா ஊர்வசியுடன் வந்து சேர்கிறார். அதே சமயம் சில துஷ்டர்களும் அந்த மைலாஞ்சிக்கு வந்து சேர்கிறார்கள். 2000 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு அரசையும் அதன் வாரிசையும் அழிக்க முயலும் அந்த தீய சக்திகளுக்கும், தெய்வீக சக்திக்கும் இடையே உருவாகும் மோதலும், நிகழ்காலத்திலும் அதேபோன்ற ஆபத்து உருவாக, மூக்குத்தி அம்மன் மீண்டும் அவதரித்து தீய சக்திகளை எதிர்கொள்வதை பக்தி பரவசத்தோடு சொல்வதே மீதிக்கதை.
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, எந்த வித அலட்டலும் இல்லாமல் மூக்குத்தி அம்மனாகவும், காவல்துறையில் பணிபுரியும் ஒரு அதிகாரியாகவும் இரு வேடங்களிலும் அசாத்தியமாக நடித்திருக்கிறார். அம்மனாக தெய்வீகத் தோற்றம், கம்பீரமான உடல்மொழி மற்றும் ஆக்ஷன் காட்சிகள் மூலம் கதாபாத்திரத்திற்கு வலுசேர்க்கிறார். நிகழ்காலத்தில் போலீஸாக வரும் காட்சிகள் முழுக்க கொஞ்சம் பயந்த சுவாபத்துடன் வலம் வருகிறார்.
தீயசக்தியாக சூனியக்கார பெண்ணாக ரெஜினா கசாண்ட்ரா மிரட்டலான ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவரது பாரவையிலேயே பல காட்சிகளில் அந்த உக்கிரத்தை காட்டியுள்ளார். நயன்தாராவுக்கு இணையாக படம் முழுக்க வந்து வலுவான எதிர் கதாபாத்திரமாக மனதில் நிற்கிறார். ரெஜினாவின் காதலராக, கணவராக துனியா விஜய். படம் முழுக்க அவரது வில்லத்தனத்தில் ஸ்கோர் செய்கிறார்.
சுனில் ஒரு கேமியோ போன்ற கதாபாத்திரத்தில் வந்து கதையின் போக்கை மாற்றி விட்டுப் போகிறார். நயன்தாராவின் வளர்ப்பு அம்மாவாக ஊர்வசி ஒரு உணர்ச்சிப்பூர்வமான கதாபாத்திரத்தில் வழக்கம் போல ஸ்கோர் செய்கிறார். யோகி பாபுவுக்கு சுந்தர் சியின் மற்ற படங்கள் போல படம் முழுக்க நகைச்சுவைக்கான வாய்ப்பு இல்லை என்றாலும் கிடைத்த காட்சிகளில் எல்லாம் சிரிக்க வைக்கிறார். ராமச்சந்திர ராஜூ, மைனா நந்தினி, வர்ஷினி, வெங்கட் ராகவன், விஜே ஆஷிக் என மற்ற நடிகர்களும் கதையின் ஓட்டத்தில் முக்கிய பங்காற்றுகிறார்கள். இரண்டு முக்கிய கேமியோ தியேட்டரை அலற வைக்கிறது. அதுவும் ஒரே ஃபிரேமில் வரும் காட்சியில் Goosebumps Overloaded.
சுந்தர் சியின் முக்கியமான படங்களுக்கு வலு சேர்த்த ஹிப் ஹாப் தமிழா இந்த படத்திலும் பட்டைய கிளப்புகிறார்கள். கிளைமாக்ஸ் காட்சியில் அவரின் இசை தெய்வீக உணர்வையும் பிரம்மாண்டத்தையும் உயர்த்தும் முக்கிய அம்சமாக இருக்கிறது. கிளைமாக்ஸில் பல பெண்கள் தியேட்டரில் சாமியாடுவது நிச்சயம். கோபி அமர்நாத்தின் ஒளிப்பதிவு இப்படிப்பட்ட ஒரு VFX Heavy படத்துக்கு கூடுதல் பலம். ஃபென்னி ஆலிவரின் படத்தொகுப்பு மற்றும் ராஜசேகர் சண்டைப் பயிற்சி ஆகியவை படத்துக்கு வலுசேர்க்கின்றன. புராண உலகம், தெய்வீக சக்திகளை வெளிப்படுத்தும் கிராபிக்ஸ் காட்சிகள் மிகப்பெரிய பட்ஜெட் இல்லையென்றாலும் குறிப்பிட்ட பட்ஜெட்டுக்கு ஏற்ற வகையில் சிறப்பாகவே அமைந்துள்ளன.
இயக்குனர் சுந்தர்.சி. வேறொரு இயக்குனர் இயக்கிய படத்தின் இரண்டாம் பாகத்தை வேறு கதை என்றாலும் அதே தலைப்பில் இயக்க ஒப்புக் கொண்டதற்கு தனி தைரியம் வேண்டும். ஒரு புதுக்கதையை எடுத்துக் கொண்டு தனது வழக்கமான கமர்ஷியல் பாணியுடன் புராணக் கதையையும் பிரம்மாண்டமான காட்சிகளையும் இணைத்துள்ளார். புராணப் பின்னணியையும் சமகாலக் கதையையும் இணைத்த விதம் படத்தின் முக்கிய அம்சம். முந்தைய படங்களில் எல்லாம் காமெடியும், கவர்ச்சியும், பாடல்களும் தூக்கலாகவே இருக்கும். ஆனால் அவற்றை குறைத்து கதையில் கவனம் செலுத்தி குடும்பத்துடன் பார்க்கும் ஒரு பக்திப் படத்தை கொடுத்திருக்கிறார். நயன்தாராவின் நட்சத்திர ஈர்ப்பு, தெய்வீகக் கதைக்களம் மற்றும் விஷுவல் எஃபெக்ட்ஸ் ஆகியவை படத்தின் பெரும் பலமாக அமைந்திருக்கின்றன. குடும்ப ரசிகர்களையும் பக்தி மற்றும் ஃபேண்டஸி திரைப்படங்களை விரும்புபவர்களையும் நிச்சயம் தியேட்டரில் கொண்டாட வைக்கும் இந்த மூக்குத்தி அம்மன் 2 – மஹாசக்தி.
SK CINEMAS RATING – 3.5 / 5

