செய் செய்யாதே – விமர்சனம்!

மருத்துவ விழிப்புணர்வு, போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் தனிமனித ஒழுக்கம் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளித்து உருவாகியுள்ள சமூக விழிப்புணர்வுத் திரைப்படம் ‘செய் செய்யாதே’. ஹரிணி சுப்பு சினி கிரியேஷன்ஸ் சார்பில் சுப்புலட்சுமி ஜெயராம் தயாரிக்க, டாக்டர் எஸ்.ராஜா இயக்கி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படம் பொழுதுபோக்கு அம்சங்களுடன் சமுதாயத்திற்கு தேவையான சிந்திக்க வைக்கும் கருத்துகளை வெளியாகியிருக்கிறது. H.ராஜா முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருக்கும் இந்த படம் எப்படி இருக்கு? என்பதை இந்த விமர்சனத்தில் பார்க்கலாம்.

படத்தின் கதைப்படி, மதுரை ராசாசி அரசு மருத்துவமனை டீனாக இருக்கும் டாக்டர் ராஜா மருத்துவத்தை உண்மையிலேயே சேவையாக செய்பவர். ஏழை எளிய மக்களுக்கு மருத்துவத்தை இலவசமாக கொண்டு சேர்ப்பவர். அவரது மனைவி சொந்தமாக ஒரு தனியார் மருத்துவமனை கட்டி பணம் சம்பாதிக்கும் நோக்கத்தில் மருத்துவத்தை தொழிலாக பார்க்கிறார். மருத்துவக் கல்லூரியில் படிக்கும் அவரது மகனும் அம்மாவை போலவே மருத்துவத்தை சேவையாக அல்லாமல் பணமாக மட்டுமே பார்க்கிறார். இந்த நிலையில் ஃபார்மா மாஃபியாவும் பணத்துக்காக சில மோசமான செயல்களில் ஈடுபடுகிறார்கள். இந்த விஷயங்களை எல்லாம் எப்படி முறியடிக்கிறார் டாக்டர் ராஜா என்பதே மீதிக்கதை.

இயக்குநர் டாக்டர் எஸ்.ராஜாவே கதையின் நாயகனாக, மையக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மருத்துவத்தை சேவையாக பார்க்கும் ஒரு மனிதராக, மனதில் நிற்கிறார். உண்மையான மருத்துவர் என்பதாலே பல முக்கியமான மருத்துவம் சார்ந்த விஷயங்களை அவர் சொல்லக் கேட்கும் போது அவ்வளவு யதார்த்தமாக இருக்கிறது. நாயகனின் தந்தையாகவும் நடித்து கவனம் ஈர்த்துள்ளார். இளம் நாயகனாக நடித்துள்ள குரு விஜய் தன் கதாபாத்திரத்திற்கு உயிரூட்டி திறமையான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இவருக்கு ஜோடியாக நடித்துள்ள தர்ஷினி ரெட்டி சரியான ஜோடி என நிரூபித்திருக்கிறார்.

தபிதா குணரத்னே மற்றும் மோனிகா ப்ரீத்தி ஆகியோர் தங்களது கதாபாத்திரங்களைச் சிறப்பாகச் செய்துள்ளனர். மேலும், குழந்தை நட்சத்திரம் பிரதீக்ஷா மனோ பிரசாந்தின் நடிப்பும், குடும்பத்தின் கடைக்குட்டியாக அவர் அடிக்கும் லூட்டியும் கலகலக்க வைக்கிறது. இவர்களைத் தாண்டி, இப்படத்தின் மிகப்பெரிய ஈர்ப்பாக பாஜக மூத்த தலைவர் H.ராஜா தமிழக முதலமைச்சராக மிக முக்கியமான ஒரு சிறப்புத் தோற்றத்தில் நடித்திருப்பது படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளது. இதுவே அரசியல் மற்றும் சினிமா வட்டாரத்திலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மருத்துவத் துறையில் பல வருட அனுபவத்தைக் கொண்ட டாக்டர் ராஜா ஹரிணி சுப்புவுடன் இணைந்து இசையமைத்திருக்கிறார். சில இடங்களில் ஆங்கில பாடல்களையும் பின்னணியில் ஓட விட்டிருக்கிறார். அதை மதுரையின் பின்னணி காட்சிகளில் ஓடவிட்டது மட்டும் கொஞ்சம் சிங்க் ஆனவில்லை. மற்றபடி பின்னணி இசை ஓகே ரகம். ஒளிப்பதிவாளர் வாசு ராம்நாத் முடிந்தவரை காட்சிகளை நேர்த்தியாகவும் யதார்த்தமாகவும் கண்முன்னே நிறுத்த முயற்சித்திருக்கிறார். சில இடங்களில் கொரில்லா படப்பிடிப்பில் படமாக்கியிருப்பதும் அப்பட்டமாக தெரிகிறது. படத்தொகுப்பாளர் ராஜா முகமது படத்தின் நீளத்தை கொஞ்சம் குறைத்திருக்கலாம்.

அடிப்படையில் மருத்துவராக இருந்தபோதிலும் கலை மற்றும் சமுதாயத்தின் மீதான பற்றால் கதை, திரைக்கதை, வசனம், இசை மற்றும் இயக்கம் என பல பொறுப்புகளைத் தாங்கி ஒரு முழுமையான சமூகப் படைப்பைத் தந்துள்ளார் டாக்டர் ராஜா. வணிக நோக்கத்தைத் தாண்டி, இன்றைய தலைமுறைக்குத் தேவையான விழிப்புணர்வை வழங்க வேண்டும் என்ற நல்லெண்ணத்துடன் ஒரு விழிப்புணர்வு படமாகவும் கொடுத்திருக்கிறார். இன்றைய நவீன சமுதாயத்தில் இளைஞர்களைச் சீரழிக்கும் போதைப்பொருள் கலாச்சாரம், போதிய மருத்துவ விழிப்புணர்வு இல்லாமல் இணையதளத் தகவல்களை நம்பி சுயமாக மருத்துவம் பார்த்துக் கொள்ளும் ஆபத்துகள் மற்றும் மனித உயிரின் மதிப்பு ஆகியவற்றை பேசியுள்ளார். மருத்துவர்களின் உண்மையான அர்ப்பணிப்பு, செவிலியர்களின் உழைப்பு, குடும்ப உறவுகளின் பலம் மற்றும் சமூகத்தின் மீது ஒவ்வொரு குடிமகனுக்கும் உள்ள பொறுப்புணர்வை வலுவாகப் பேசுகிறது. பார்வையாளர்களை சிந்திக்க வைக்கும் ஒரு சிறந்த முயற்சியாக அமைந்துள்ளது. குடும்பங்கள் பார்த்து சிந்திக்க வேண்டிய ஒரு அவசியமான படைப்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *