கடந்த 10 ஆண்டுகளில் பிச்சைக்காரன், சிவப்பு மஞ்சள் பச்சை, நூறுசாமி போன்ற உணர்வுப்பூர்வமான படங்களை தொடர்ந்து தந்த இயக்குனர் சசி, இயக்கத்தில் தற்போது புதிய பரிமாணத்தில் உருவாகியிருக்கும் ஒரு காதல் திரைப்படம் தான் ‘நூறு கோடி வானவில். ஹரிஷ் கல்யாண், சித்தி இத்னானி ஜோடியாக நடித்திருக்கும் இந்த படம் தமிழ் Zee5-ல் நேரடி ஓடிடி ரிலீஸாக வெளியாகியிருக்கிறது. படம் எப்படி இருக்கு? என்பதை இந்த விமர்சனத்தில் பார்க்கலாம்.
படத்தின் கதைப்படி, மும்பையில் ஒரு தொலைக்காட்சி சேனலில் நிகழ்ச்சி இயக்குனராக இருக்கும் ஹரிஸ்க் கல்யாண், கோவாவில் குறைந்த பட்ஜெட்டில் தொலைக்காட்சி நிகழ்ச்சியை உருவாக்க அவரது உயர் அதிகாரியால் அனுப்பி வைக்கப்படுகிறார். அந்த நிகழ்ச்சிக்கு தொகுப்பாளராக ஒரு பெண்ணைத் தேடும்போது அவரது எதிர்பார்ப்புக்கு ஏற்ற பெண்ணான நாயகி சித்தி இத்னானியை சந்திக்கிறார். இருவருக்கும் இடையே உருவாகும் அறிமுகம், மெல்ல மெல்ல காதலாக மாறுகிறது. ஆனால் நாயகிக்கு ஏற்கனவே காதலர் இருக்க, அவர் ஒரு விபத்தில் அடிபட்டு கோமாவில் இருக்கிறார். ஹரிஷ் கல்யாணை பிடித்தாலும் அவரது காதலை ஏற்க சித்தியின் மனம் தயங்குகிறது. இதற்கிடையில் நாயகியின் காதலர் கோமாவில் இருந்து திரும்புகிறார். ஹரிஷ் கல்யாண் காதல் என்ன ஆனது? சித்தி இத்னானியின் மனநிலை என்ன? என்பதே மீதிக்கதை.
ஹரிஷ் கல்யாண், ஒரு நிகழ்ச்சி இயக்குனராக அவருக்கு மிகவும் புதிதான கதாபாத்திரத்தில் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். நாயகியுடனான காட்சிகளில் எல்லாமே நல்ல கெமிஸ்ட்ரி. காதலில் இருக்கும் மகிழ்ச்சி, குழப்பம், ஏமாற்றம் போன்ற உணர்வுகளை அளவான நடிப்பின் மூலம் வெளிப்படுத்த முயற்சிக்கிறார். தந்தையுடனான அந்த ஒரு காட்சியிலும் ஸ்கோர் செய்கிறார்.
ஃபெனி என்ற துறுதுறு கதாபாத்திரத்தில் வலியிலும் சிரித்த முகத்தோடு எப்போதும் சுற்றும் இளம்பெண்ணாக சித்தி இத்னானி அழகாகப் பொருந்துகிறார். இரண்டாம் பாதியில் முக்கிய காட்சிகளில் குறிப்பிடத்தக்க நடிப்பை வழங்கியுள்ளார். கோவை சரளா, தம்பி ராமையா, சின்னி ஜெயந்த், மோனா பெத்ரே, சம்பத் ராம் உள்ளிட்ட அனுபவமிக்க நடிகர்களின் பங்களிப்பும், விஜே பார்வதி உள்ளிட்ட இளம் நடிகர்களின் பங்களிப்பும் படத்துக்கு வலுசேர்க்கிறது.
சித்து குமாரின் இசையில் பாடல்கள் இனிமை. கண்ணாட்டி பாடலும், அதை கலர்ஃபுல்லாக காட்சிப்படுத்தியதும் அருமை. பின்னணி இசையும் காதல் காட்சிகளுக்கு மென்மையான உணர்வைக் கொடுக்கின்றன. பிரசன்னா எஸ். குமாரின் ஒளிப்பதிவு கோவாவின் அழகையும், கதையின் காதல் மனநிலையையும் காட்சிப்படுத்துகிறது. வண்ணமயமான காட்சிகள் காதல் படத்துக்கு ஏற்ப கண்களுக்கு விருந்தாக இருக்கிறது.
பூ, பிச்சைக்காரன், சிவப்பு மஞ்சள் பச்சை உள்ளிட்ட எல்லா படங்களிலும் உணர்வுப்பூர்வமான அம்சங்கள் தான் சசி படங்களின் ஹைலைட். இந்த நூறு கோடி வானவில் காதல் படமாக இருந்தாலும் உறவுகளின் நுட்பமான உணர்வுகளை அழகாக பேசுகிறது. காதலின் அழகையும் அதன் சிக்கல்களையும் யதார்த்தமான பார்வையில் அணுகுவது படத்தின் சிறப்பு. மீண்டும் ஒரு முழுநீள காதல் கதையை எடுத்து ரோஜாக்கூட்டம் காலகட்டத்துக்கே சென்றிருக்கிறார் சசி. சில இடங்களில் கதை மேலும் அழுத்தமாகவும் சுவாரஸ்யமாகவும் நகர்ந்திருக்கலாம் என்ற ஊனர்வு எழாமல் இல்லை. ஆனாலும் இன்றைய ஜென் ஸீ யுகத்தில் இப்படி ஒரு காதல் படத்தை கொடுத்து இன்றும் மனதளவில் இளமையாகவே இருக்கிறார் சசி. மொத்தத்தில் மென்மையான ஒரு காதல் திரைப்படமாக ‘நூறு கோடி வானவில்’ அனைவரும் ரசிக்கக்கூடிய ஒரு படைப்பு.
SK CINEMAS Rating: 3/5

