மராத்திய இயக்குநர் சந்தோஷ் தாவக்கர் எழுதி இயக்கியுள்ள திரைப்படம் ‘கோந்தல்’ (Gondhal). ஆஸ்கருக்கு இந்தியாவின் சார்பில் பரிந்துரைக்கப்பட்டிருப்பதும், நம்ம ஊர் இசைஞானி இளையராஜா இசை அமைத்திருப்பதும் இந்த படத்தை பார்த்தே தீர வேண்டும் என்ற உத்வேகத்தை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அளித்திருக்கிறது. தமிழிலேயே மொழி பெயர்க்கப்பட்டு வெளியாகி இருக்கும் இந்த திரைப்படம், மகாராஷ்டிராவின் பாரம்பரிய நாட்டுப்புறச் சடங்கு ஒன்றைப் பின்னணியாகக் கொண்டு உருவாகியிருக்கும் வித்தியாசமான திரில்லர் திரைப்படம். திருமணக் கொண்டாட்டம், கிராமத்து மனிதர்களின் வாழ்க்கை, ஆண் ஆதிக்கம், காதல், பழிவாங்குதல் எனப் பல அம்சங்களை பேசும் இந்த படம் எப்படிப்பட்ட அனுபவத்தை தந்திருக்கிறது? ஆஸ்கர் செல்லும் அளவுக்கு தகுதி படைத்ததாக இருக்கிறதா? என்பதை இந்த விமர்சனத்தில் பார்க்கலாம்.
படத்தின் கதைப்படி, மகாராஷ்டிராவின் கிராமம் ஒன்றில் புதுமணத் தம்பதியருக்காக இரவு முழுவதும் நடைபெறும் ‘கோந்தல்’ என்ற பாரம்பரியச் சடங்கைச் சுற்றி கதை நகர்கிறது. ஆனந்த் என்ற வசதியான குடும்பத்தை சேர்ந்த இளைஞரைத் திருமணம் செய்யும் சுமனுக்கு, அந்த வாழ்க்கையில் விருப்பமில்லை. அவளது மனம் சஹிபா என்ற நாட்டுப்புறக் கலைஞரிடம் இருக்கிறது. இதற்கிடையில் சர்ஜே ராவ் என்ற ஊர்த் தலைவரின் மகனுக்கும் சுமன் மீது தீராத ஆசை இருக்கிறது. தனது வாழ்க்கையைத் தானே தீர்மானிக்க நினைக்கும் சுமன், சர்ஜேராவின் பலவீனத்தையும் சடங்கு மீதான அவனது ஈடுபாட்டையும் பயன்படுத்தி தான் விரும்பிய வாழ்க்கையை அடைய திட்டமிடுகிறாள். அவள் திட்டம் நிறைவேறியதா? அந்த மனிதர்கள் ஒவ்வொருவரின் நிஜ முகம் என்ன? என்பதை ஒரு இரவில் நடைபெறும் சம்பவங்கள் மூலம் சொல்வதே இந்த ‘கோந்தல்’.
படத்தின் மையக் கதாபாத்திரத்தில் மணமகள் சுமனாக நடித்துள்ள இஷிதா தேஷ்முக் அவரது அபாரமான நடிப்பால் படத்தை மிகச் சிறப்பானதாக மாற்றுகிறார். பெண் மனது ஆழம் என்பது போல அவர் மனதில் என்ன ஓடுகிறது என்பதை புரிந்து கொள்ளவே நேரம் எடுக்கிறது. பெண்ணிய அடக்குமுறைக்குள் சிக்கிய ஒரு இளம் பெண்ணின் மனநிலையையும் தனது சுதந்திரத்திற்கான போராட்டத்தையும் சிறப்பாக வெளிப்படுத்துகிறார். மணமகன் ஆனந்தாக யோகேஷ் சோஹோனி அப்பாவித்தனம் நிறைந்த கதாபாத்திரத்தில் பரிதாபப்பட வைக்கிறார். முக்கியமான காட்சி ஒன்றில் தீர்க்கமான பார்வையுடன் அவர் அமர்ந்திருக்கும் காட்சி கைதட்டலை அள்ளுகிறது.
சர்ஜே ராவாக நிஷாத் போயர் கவனம் ஈர்க்கின்றனர். அதிகார மமதையும், நாயகி மீதான ஆசையும் அவர் கண்களாலேயே வெளிப்படுத்துகிறார். சுரேஷ் விஸ்வகர்மாவின் நடிப்பும் கதாபாத்திரத்திற்கு வலுசேர்க்கிறது. பிவாபா கதாபாத்திரத்தில் கிஷோர் கடம் இயல்பான நடிப்பால் படத்திற்கு உணர்வுப்பூர்வமான மையமாக இருக்கிறார். அனுஜ் பிரபு முதல் கதையில் ஆங்காங்கே வந்து செல்லும் அடியாட்கள், சிறுவர்கள் என படத்தில் நடித்த அத்தனை பேருமே குறையில்லாத நிறைவான நடிப்பை வழங்கியுள்ளனர்.
இசைஞானி இளையராஜாவின் இசை படத்தின் மிகப்பெரிய பலம். ஆரம்ப காட்சிகளில் இருந்தே பாடல்களிலும் பின்னணி இசையிலும் மிகச்சிறப்பாக அமைத்திருக்கிறார். மதுரைக் கதையில் நம்மை மெய் மறக்க வைத்த இசைஞானி மகாராஷ்ட்ராவின் பாரம்பரிய கோந்தல் இசை, மேளதாளங்கள், பாடல்கள் ஆகியவற்றின் வழியாக மகாராஷ்டிராவின் கலாசாரத்தைத் திரையில் உணரச் செய்கிறார்.
அமலேந்து சௌத்ரியின் ஒளிப்பதிவு படத்தின் மிகப்பெரிய ஹைலைட். குறிப்பாக ஒரு இரவில் நடக்கும் இந்த கதையில் இரவு நேரக் காட்சிகளில் வெறும் தீப்பந்தங்களின் வெளிச்சத்திலேயே அசத்துகிறார். படத்தின் துவக்கத்தில் இடம்பெறும் சுமார் 25 நிமிட சிங்கிள் இன்னும் நம்மை ஆச்சர்யத்திலேயே வைத்திருக்கிறது. ஆஷிஷ் மாத்ரேவின் படத்தொகுப்பு, ஜெயேஷ் தகானின் ஒலி வடிவமைப்பு ஆகியவையும் படத்தின் சூழலுக்கு உதவுகின்றன.
இயக்குநர் சந்தோஷ் தாவக்கர், மகாராஷ்ட்ராவின் பாரம்பரிய சடங்கை வெறும் பின்னணியாக மட்டும் பயன்படுத்தாமல், அதையே கதையை நகர்த்தும் முக்கியமான அம்சங்களாக மாற்றியிருக்கிறார். ஆரம்பத்தில் வரும் சிங்கிள் ஷாட் காட்சியிலேயே ஒரு சில கதாபாத்திரங்களையும் அந்தச் சமூகத்தின் அதிகார அமைப்பையும் மிகச் சிறப்பாக நமக்கு அறிமுகம் செய்து விடுகிறார். பின் கதையின் போக்கிலேயே யாருக்கு திருமணம், யாருக்கு என்ன நோக்கம், என்ன திட்டம் என எதையும் Spoonfeed செய்யாமல் மிக அழகாக திரைக்கதையில் சொல்லி விட்டு போகிறார். குறிப்பாக, ஒரே இரவில் நடைபெறும் சடங்கை மையமாக வைத்து மனிதர்களின் இருண்ட மனநிலையை வெளிப்படுத்தியிருப்பது படத்தின் தனித்துவம். மொத்தத்தில் ‘கோந்தல்’, வழக்கமான திரில்லர் படங்களிலிருந்து மாறுபட்ட அனுபவத்தை வழங்குகிறது. ஆஸ்கருக்கு பரிந்துரை செய்ய தகுதி வாய்ந்த படம், தனித்துவமான முயற்சிக்காக சினிமா ரசிகர்கள் நிச்சயம் பார்க்க வேண்டிய திரைப்படம்!

