தமிழ் சினிமாவில் வழக்கமான கமெர்சியல் திரைப்படங்களிலிருந்து முற்றிலும் விலகி, வித்தியாசமான உளவியல் த்ரில்லர் திரைப்படம் ‘கிட்டி’. நடிகர் அசோக் குமார் பாலகிருஷ்ணன் (முருகா அசோக்) நாயகனாக நடித்துள்ள இந்த படம், காந்தி ஜெயந்தி வெளியீடாக திரைக்கு வருகிறது. அடுத்தடுத்த திடுக்கிடும் திருப்பங்களுடன் உருவாகியுள்ள இந்த படம் எப்படி இருக்கு? என்பதை இந்த விமர்சனத்தில் பார்க்கலாம்.
படத்தின் கதைப்படி, நாயகன் அசோக், கதையின் ஆரம்பத்தில் ஒரு ரவுடியையும், ஒரு இளம் பெண்ணையும் கொலை செய்து விட்டதாக சொல்லி போலீஸில் சரண் அடைகிறார். அந்த சம்பவத்தை விசாரிக்கும் காவல்துறை அதிகாரி திருமாறன் வழக்கில் இருக்கும் சந்தேகத்தால் அதை இன்னும் தீவிரமாக விசாரிக்க துவங்குகிறார். அசோக்கின் கடந்த கால வாழக்கையையும் விசாரிக்கிறார். அப்போது சில திடுக்கிடும் தகவல்கள் கிடைக்க, வழக்கே திசை மாறுகிறது. மறைக்கப்பட்ட உண்மைகள் வெளிவரும்போது, அது அவர்கள் வாழ்க்கையில் ஏற்படுத்தும் தாக்கம் என்ன? இறுதியில் என்ன ஆனது? என்பதே இப்படத்தின் மீதிக்கதை.
நாயகன் அசோக் குமார் பாலகிருஷ்ணன் என்கிற முருகா அசோக். முதல் காட்சியில் இருந்தே அவரது கதாபாத்திரத்தை உணர்ந்து மிக யதார்த்தமாக நடித்திருக்கிறார். உளவியல் ரீதியான குழப்பங்களையும் பதற்றத்தையும் அவரது முகத்தில் அப்ப்டியே பிரதிபலித்து, அழுத்தமான நடிப்பை வழங்கியுள்ளார். சில காட்சிகளில் அவர் நடிப்பும், அப்படியே அந்த காட்சிகளை இரண்டாம் பாதியில் வேறு ஒரு கோணத்தில் பார்க்கும்போதும் அந்த வித்தியாசம் மிகச் சிறப்பாக வெளிப்படுகிறது.
நிஷா இஷ்மீத், சங்கவி தர்மராஜ் & சிமு அத்வானி என மூன்று நாயகிகள். மூன்று பேருமே கதையின் திருப்பங்களுக்கு உறுதுணையாக இருக்கும் முக்கியக் கதாபாத்திரங்களில் கச்சிதமாகப் பொருந்திப் போயுள்ளனர். திருமாறன் மோகன்தாஸ் காவல்துறை அதிகாரியாக கம்பீரமாக வலம் வருகிறார். ஒய்.ஜி. மகேந்திரன் & அர்ஜுனா துரைசாமி, அரவிந்த் ராஜ், கடலூர் சிவா மற்றும் மற்ற நடிகர்கள் அனைவருமே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
வெங்கடாசலம் சிங்காரவேலன் ஒரு உளவியல் த்ரில்லர் படத்திற்கு தேவையான ஒளிப்பதிவை கொடுத்திருக்கிறார். சின்ன பட்ஜெட்டில் நல்ல தரமான படத்துக்குண்டான காட்சி அமைப்பை தந்து பாராட்டுக்களை பெறுகிறார். திரில்லர் படத்துக்கான பதட்டத்தை உருவாக்குவதில் ஷேக் காதர் பின்னணி இசை பெரும் பங்கு வகிக்கிறது. கார்த்தி பாண்டியன் படத்தொகுப்பு கதையை குழப்பமில்லாமல் தெளிவாக சொல்ல உதவி புரிந்திருக்கிறது.
இயக்குனர் நெடுமாறன் மோகன்தாஸ், ஒரு த்ரில்லர் படத்தை மிகச்சிறப்பாக எழுதி இயக்கியிருக்கிறார். ஒரு எளிய மனிதனின் உளவியல் சிக்கல்களை மையமாகக் கொண்டு மிக விறுவிறுப்பாக கையாண்டுள்ளார். நிஜத்திற்கும் கற்பனைக்கும் இடையேயான கோட்டைத் தெளிவாகக் காட்டும் திரைக்கதை அமைப்பு படத்திற்குப் பலம் சேர்க்கிறது. அடுத்தடுத்த கொலைகள், அதை துப்பறியும் அதிகாரி, பின்னணி கதை என சுவாரஸ்யமாக நகர்த்தியிருக்கிறார். மொத்தத்தில் வழக்கமான ஆக்ஷன் படங்களுக்கு மாற்றாக ஒரு வித்தியாசமான திரில்லர் அனுபவத்தைத் தந்திருக்கிறது இந்த ‘கிட்டி’. நிச்சயம் குடும்பத்துடன் பார்த்து ரசிக்கலாம்.

