தமிழ் சினிமாவில் மோசடிக் குற்றங்களின் பின்னணியில் படங்கள் வெளிவந்திருக்கின்றன. ஹெய்ஸ்ட் என்ற கொள்ளையடிக்கும் கதைகளும் பல வந்திருக்கின்றன. தற்போது வெளியாகி இருக்கும் கான் சிட்டி இந்த அம்சங்களை கொண்டு உருவாகியுள்ள ஒரு முக்கியமான படம். அறிமுக இயக்குனர் ஹரிஷ் துரைராஜ் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ், அன்னா பென், யோகி பாபு ஆகியோர் நடிப்பில் ஷான் ரோல்டான் இசையில் உருவாகியுள்ள இந்த படம் எப்படி இருக்கு? என்பதை இந்த விமர்சனத்தில் பார்க்கலாம்.
படத்தின் கதைப்படி, 2017 காலகட்டத்தில் அர்ஜூன் தாஸ் மற்றும் குடும்பத்தினர் மங்களூருவில் ஒரு உணவகம் நடத்தி வாழ்க்கையை ஓட்டி வருகிறார்கள். அந்த குடும்பத்தில் இருக்கும் சிறுவன் அகிலன் உடல் ஊனமுற்றவராக இருக்கிறார். ஒரு நால் பள்ளிக்கு சென்ற அவரை யாரோ கடத்தி விடுகிறார்கள். அகிலனை குடும்பத்தினர் தேட, கதை 2010-க்கு பின்னோக்கி நகர்கிறது. 2010-ல் அர்ஜூன் தாஸ், அன்னா பென், வடிவுக்கரசி, யோகி பாபு என ஒவ்வொருவரும் ஒவ்வொரு பிரச்சினையில் சிக்கியிருக்க, அந்த பிரச்சினைகளில் இருந்து வெளியே வர சில விஷயங்களை செய்கிறார்கள். அதன் விளைவுகளையும் அனுபவிக்கிறார்கள். அந்த செயல்கள் என்ன? அகிலனை கடத்தியது யார்? என்பது போன்ற பல விஷயங்களை ஒரு Con கலந்த ஒரு பக்கா கமெர்சியல் படமாக சொல்லியிருப்பதே இந்த கான் சிட்டி.
நாயகன் அர்ஜூன் தாஸ். வில்லனாக வேறு விதமாக மிரட்டியவர் இந்த மாதிரி family friendly கேரக்டர்களிலும் தொடர்ந்து நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். ஒரு நீட்டான பெர்ஃபார்மன்ஸை ஸ்கோர் செய்கிறார். அதே சமயம் கதைக்கு ஏற்ற நடிப்பை கொடுத்து தேவையில்லாத மாஸ் விஷயங்களை எல்லாம் திணிக்காமல் நல்ல நடிகராக பரிமளித்து இருக்கிறார். இண்டர்வல் காட்சியில் தியேட்டரை தெறிக்க வைக்கிறார். அன்னா பென் எல்லா முடிவுகளையும் தானே எடுக்கும் தைரியமான பெண்ணாக, தனித்துவமான பெண்ணாக தன்னை நிலை நிறுத்தும் நடிப்பை தந்திருக்கிறார். நடிப்பில் ஒரு நல்ல முதிர்ச்சியும் வெளிப்பட்டிருக்கிறது. சாக்ஷி வைத்யா கொஞ்சம் சின்ன கேரக்டர் என்றாலும் மனதில் பதிகிறார். எதிர்காலத்தில் நல்ல இடத்தை பிடிக்கும் வாய்ப்பும் இருக்கிறது.
யோகி பாபு, வடிவுக்கரசி காம்போ ரொம்பவே ஃப்ரெஷ். காமெடியிலும் பல இடங்களில் தெறிக்க விடுகிறார்கள். அதே சமயம் எமோஷனும் நன்றாகவே ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது. எம்.எல்.ஏ பற்றி யோகி பாபு அடிக்கும் கவுண்டரில் தியேட்டரே குலுங்குகிறது. அகிலன் கேரக்டர் கொஞ்ச நேரமே வந்தாலும் குறிப்பிடத்தக்க நடிப்பால் நம்மை ஆச்சர்யப்படுத்துகிறார். விடிவி கணேஷ் காமெடி படத்தின் இன்னொரு ஹைலைட். தம்பி ராமையா, ராதா ரவி, அருள் தாஸ், இமான் அண்ணாச்சி, ஷாஜி, சதானந்த், அருவி மதன், லல்லு என மற்ற நடிகர்கள் எல்லாருமே கச்சிதம்.
அரவிந்த் விஸ்வநாதனின் ஒளிப்பதிவு படத்தின் தரத்தை மேலும் தூக்கி நிறுத்துகிறது. ஒவ்வொரு காட்சியையும் மிக அழகாக செதுக்கி இருக்கிறார். ஷான் ரோல்டன் இசையில் நான் தான் இங்க கிங்கு பாடல் மனதை விட்டு அகலாமல் மனதுக்குள் ஓடிக்கொண்டே இருக்கிறது. 1960’s பாடல்கள் போல இரண்டு பாடல்களை உருவாக்கியதும் நல்ல முயற்சி. பின்னணி இசையில் படத்தை மேலும் சுவாரஸ்யமாக்குகிறார்.
இயக்குனர் ஹரிஷ் துரைராஜ். அறிமுக படத்திலேயே மிகப்பெரிய சவாலை மிக தைரியமாக தூக்கி சுமந்திருக்கிறார். கான் மையப்படுத்திய படத்தை எழுதி மிக நேர்த்தியாக, சலிப்பு தட்டாத வண்ணம் மிக சுவாரஸ்யமான படமாக தந்திருக்கிறார். அடுத்தடுத்து பல ட்விஸ்ட்கள், அதிர்ச்சிகள் என நம்மை ஆச்சர்யப்படுத்திக் கொண்டே இருக்கிறார். மிகவும் பரிச்சயமான பல நடிகர்களை முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க வைத்து அவர்களை மிக அழகாக உபயோகித்து அதை படத்துக்கு பிளஸ் ஆகியிருக்கிறார். டாக்டர் பாணியில் காமெடியும் ஒர்க் அவுட் ஆகிறது, சதுரங்க வேட்டை பாணியில் மோசடி விஷயங்களையும் அழகாக காட்டியிருக்கிறார். இதற்கு நடுவில் எமோஷனையும் மிக அழகாக நமக்கு கடத்துகிறார். மொத்தத்தில் குடும்பத்துடன் சென்று ரசித்து விட்டு வரக் கூடிய நல்ல ஒரு திரைப்படம் தான் இந்த ‘கான் சிட்டி’.

