2M சினிமாஸ் நிறுவனத்தின் சார்பில் கே.வி. ஷபரீஷ் தயாரிக்க, பிரபல இயக்குனர் தயாள் பத்மநாபன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் லட்சுமி காந்தன் கொலை வழக்கு. இந்த படம் வரும் ஜூலை 10ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினர் கலந்து கொண்ட இந்த நிகழ்வில் பிரபல ஊடகவியலாளரும் நடிகருமான ரங்கராஜ் பாண்டே கலந்து கொண்டு தன் நடிப்பு அனுபவங்களையும், சுவாரசியமான சினிமா நினைவுகளையும் பகிர்ந்தார்.
ரங்கராஜ் பாண்டே பேசும்போது, “நாங்கள் உள்ளே வந்த காலத்தில் பேப்பரும் பேனாவும் தூக்கிக்கொண்டு, ‘ஷார்ட் ஹேண்ட்’ தெரியாமல் சீனியர்கள் எழுதுவதைப் பார்த்து குறிப்பெடுத்துக் கொண்டிருப்போம். அதன்பின் டிவி மீடியா வந்தபோது எங்களுக்கும் அவர்களுக்கும் கடும் போட்டி இருந்தது. ஆனால், இன்று பேப்பரும் போச்சு, கேமராவும் போச்சு. எல்லாம் மொபைல் போனுக்குள் வந்துவிட்டது. இப்போது ‘இன்ஃப்ளூயன்சர் ஷோ’ (Influencer Show) நடத்தும் அளவுக்கு உலகம் டிஜிட்டல் மயமாகிவிட்டது.
நான் மேடைக்கு வந்தவுடனேயே, ‘நீ அந்த கட்சிதானே?’ என்று கேட்கிறார்கள். ஆனால், நான் எந்தக் கட்சியுமே கிடையாது. அந்த கட்சிக்காரனும் என்னை நம்ப மாட்டேங்குறான், மற்ற கட்சிக்காரனும் நம்ப மாட்டேங்குறான். நாளைக்கு நான் மட்டும் முதலமைச்சர் ஆனா, உங்களையெல்லாம் நல்லா கவனிச்சுக்குவேன். கொள்கை முரண் இல்லாத இடமே இல்லை. இந்தியாவில் நடக்கும் பாதி கொலைகள் அண்ணன்-தம்பிக்குள்ளும், கணவன்-மனைவிக்குள்ளும் தான் நடக்கிறது. அப்படியிருக்கும் போது கொள்கைகள் மாறுபடுவதில் ஆச்சரியமில்லை.
பாரதியார் வறுமையில் வாழ்ந்தாலும், மறைந்து இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் அசைக்க முடியாத இடத்தில் இருக்கிறார். நாம் வாழும்போது என்னவாக இருக்கிறோம் என்பதை விட, வாழ்ந்த பிறகு உலகம் நம்மை எப்படிப் பார்க்கிறது என்பதே முக்கியம். எனக்கு எல்லாவற்றையும் விட மனித உறவுகளும் நட்புமே பெரிய விஷயம்.
நான் அடிப்படையில் ஒரு பத்திரிக்கையாளன். என்னால் கமல்ஹாசன் சார் மாதிரி அவார்ட் வாங்க முடியாது, சிவாஜி சார் மாதிரி பேர் வாங்க முடியாது. அது எனக்கு முன்னாடியே தெரியும். இந்த படத்தில் நடிப்பதற்கு நான் கூலி வாங்கியிருக்கிறேன். அதற்கு விசுவாசமாக உழைக்க வேண்டும், தயாரிப்பாளருக்கும் இயக்குனருக்கும் நஷ்டம் ஏற்படுத்தக் கூடாது என்பது மட்டுமே என் நோக்கம்.
இப்படத்தின் இசையமைப்பாளர் தர்புகா சிவா, பாரதிதாசனின் ஆழமான தமிழ் வரிகளுக்கு மெட்டமைத்து உயிர் கொடுத்திருப்பதாகப் பாராட்டினார். மேலும், 21 நாட்களில் திட்டமிட்டு, பட்ஜெட்டுக்குள் தரமான படத்தை முடிக்கும் இயக்குனர் தயாள் பத்மநாபனின் திட்டமிடல் அபாரமானது. படம் நிச்சயம் வெற்றி பெறும், ரசிகர்கள் இந்த படத்தை ஆதரிக்க வேண்டும்” என்றார்.

