இயக்குநர் வெற்றிச்செழியன் இயக்கத்தில் அபர்ணதி, லிங்கேஷ், சுரேஷ் சந்திர மேனன், மாஸ்டர் அஸ்வின் ஆகியோர் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் ‘தி கிராண்ட் மாஸ்டர்’. செஸ் விளையாட்டுப் பின்னணியில் சமூகத்தில் நிலவும் சாதிய அரசியலையும், ஏற்றத் தாழ்வு அரசியலையும் பேசியிருக்கும் இந்த படம் எப்படி இருக்கு? என்பதை இந்த விமர்சனத்தில் பார்க்கலாம்.
படத்தின் கதைப்படி, சென்னையில் கூவம் ஓரத்தில் குடிசைப் பகுதியில் தனி ஒரு தாயாக தன் மகனை வளர்த்து வருகிறார் தூய்மைப் பணியாளரான அபர்ணதி. படிச்சி எப்படியாச்சும் வக்கீல் ஆகணும் என அம்மா சொல்லி சொல்லி வளர்க்க, அவரது மகனுக்கோ படிப்பை விட செஸ் விளையாட்டு மீது தீராத ஆர்வம் உருவாகிறது. பள்ளியில் உடற்பயிற்சி ஆசிரியர் துவங்கி, வெளியில் பணத்துக்கு செஸ் சொல்லிக் கொடுக்கும் ட்ரைனர் வரை எல்லோருமே அஸ்வினை சாதி ஏற்றத்தாழ்வை வைத்து ஒதுக்குகிறார்கள். பயிற்சி இல்லாமலேயே சிறப்பாக செஸ் விளையாடும் அஸ்வினுக்கு சாதிய மற்றும் சமூகப் பொருளாதாரத் தடைகள் திறமைக்குக் குறுக்கே நிற்கின்றன. அப்படிப்பட்ட சூழலில் இருந்து தான் ஆசைப்பட்ட கிராண்ட் மாஸ்டராக ஆகிறானா? அவனது தாயின் ஆதரவு எந்த அளவு உதவியது? அஸ்வின் எப்படி செஸ் விளையாட்டில் சாதிக்கிறான் என்பதே மீதிக்கதை.
நாயகி அபர்ணதி. வெள்ளையம்மாள் என்ற தூய்மைப் பணியாளர் கதாபாத்திரத்தில் மிகச்சிறப்பாக நடித்துள்ளார். கணவரை இழந்து தன் மகனை தனி ஒரு ஆளாய் வளர்க்கும் ஒரு பொறுப்பான தாயாக மிகச்சிறந்த மற்றும் உணர்வுபூர்வமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். எந்த கதாபாத்திரம் நடித்தாலும் அப்படியே மாறி விடும் அபர்ணதி இந்த படத்திலும் மிகுந்த சிரத்தையுடன் நடித்திருக்கிறார். பல காட்சிகளில் நம்மை கலங்க வைக்கிறார். அபர்ணதியின் மகனாக செஸ் வீரராக அஸ்வின் ஒரு இயல்பான நடிப்பை தந்திருக்கிறார். முதல் பாதியில் வரும் சில காட்சிகளில் நம்மை கலங்க வைக்கிறார். செஸ் விளையாடி ஜெயிங்க என சவால் விடும் காட்சிகளில் கைத்தட்டல்களை பெறுகிறார்.
செஸ் விளையாட்டில் தனது ஆதிக்கத்தை காட்டும் ஒரு கார்ப்பரேட் வில்லனாக, அதிகார வர்க்கத்தின் பிரதிநிதியாக வரும் சுரேஷ் சந்திர மேனன் வழக்கம் போல கச்சிதமாக பொருந்துகிறார். என் பாக்கெட்ல இருந்து கீழ விழுந்தா அது குப்பைக்கு சமம் என சொல்லும் காட்சியிலும், கிளைமாக்ஸ் காட்சியிலும் என அவர் ஆளுமை வெளிப்படுகிறது. லிங்கேஷ் எளிய குடும்பத்து இளைஞராக, ஒடுக்கப்பட்ட சமுதாயத்தை சார்ந்த குப்பை அள்ளும் தொழிலாளியாக நம்மை கலங்க வைக்கிறார். அவர் பேசும் வசனங்களும் கதையின் சீற்றத்திற்கும் விறுவிறுப்புக்கும் வலு சேர்த்துள்ளது. மற்ற நடிகர்களும் நல்ல தேர்வு, அவர்களும் நல்ல நடிப்பை தந்திருக்கிறார்கள்.
அர்ஜூன் ரவியின் ஒளிப்பதிவு கதை நடக்கும் களத்தை மிக மிக யதார்த்தமாக, முகத்தில் அறைந்தாற்போல, சில இடங்களில் நம்மால் பார்க்கக் கூட முடியாத அளவுக்கு உண்மையாக திரையில் தெரிகிறது. குறிப்பாக ரியல் லொகேஷன்களும், குப்பை அள்ளும் தொழிலாளிகளின் வாழ்வியலும் அத்தனை ரியல். தினேஷ் ஆண்டனியின் பின்னணி இசை உணர்வுபூர்வமான காட்சிகளிலும், படத்தின் திருப்புமுனை இடங்களிலும் கதைக்குத் தேவையான பலத்தைக் கொடுத்துள்ளது.
இயக்குனர் வெற்றிச் செழியன் செஸ் விளையாட்டின் பின்னணியில் கதையை அமைத்திருந்தாலும் விளையாட்டுக்குப் பின்னால் இருக்கும் அரசியலையும், ஏற்றத் தாழ்வையும், இன்றும் சமூகத்தில் புரையோடி கிடக்கும் சாதிய அரசியலையும் மிக யதார்த்தமாக, உண்மைக்கு நெருக்கமாக சொல்லியிருக்கிறார். சாதிய வன்மத்தில் இருப்பவர்கள் எந்த எந்த சின்ன காரணத்துக்காகவும் கொலை செய்யும் அளவுக்கு கூட செல்வார்கள் என்பதை கூட அப்படியே காட்டியிருக்கிறார். திறமைக்கு முன்னால் எத்தனை தடைகள் வந்தாலும் அதையும் தாண்டி சாதிப்பவனே உண்மையான சாதனையாளன் என்பதையும், விளையாட்டு களத்தில் போராடுவது கால் வாசி என்றால், அந்த விளையாட்டு களத்தை எட்ட போராடுவதே முக்கால் வாசி என்பதையும் இயக்குநர் வெற்றிச்செழியன் சொல்லாமல் அழுத்தமாக சொல்லியிருக்கிறார். காவல் நிலையத்தில் ஆயுதம் கையில் இருந்தாலும் அதை நேரம் தாண்டியதும் போலீஸிடம் கொடுத்து விட்டு போய் மூலையில் அமரும் காட்சி எளிய மக்களின் உண்மையான நிலையை அப்படியே பிரதிபலித்திருக்கிறது. மொத்தத்தில் குடும்பத்தோடு சென்று பார்க்க வேண்டிய ஒரு உனர்வுப்பூர்வமான படம் ‘தி கிராண்ட் மாஸ்டர்’.
SK CINEMAS Rating: 3.25/5

