யுவன் ஷங்கர் ராஜாவின் Walking Through the Rainbow இந்திய மேடை இசையின் புதிய அத்தியாயம்!

மில்லினியல்ஸ் தலைமுறை யுவன் ஷங்கர் ராஜாவின் இசையுடன் இணைந்து வளர்ந்தது நாம் அறிந்ததே. இன்றைய ஜென் சி (Gen Z) தலைமுறையும் சென்னையில் சமீபத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட நிகழ்ச்சியில் யுவன் ஷங்கர் ராஜாவின் இசையை கொண்டாடியது அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

திரையிசை உலகில் யுவன் ஷங்கர் ராஜா தனது பயணத்தைத் தொடங்கி கிட்டத்தட்ட மூன்று தசாப்தங்கள் கடந்துள்ள நிலையிலும், யுவனின் இசை தொடர்ந்து தலைமுறைகளைக் கடந்து பயணித்து வருகிறது. ஒரு தலைமுறையின் நினைவுகளோடு கலந்த பாடல்களும் இசைக் கோவைகளும், இன்று மற்றொரு தலைமுறையால் கண்டறியப்பட்டு, பகிரப்பட்டு, அவர்களுக்கே உரியதாக கொண்டாடப்பட்டு வருகிறது.

செப்டம்பர் 19 அன்று நடைபெற்ற ‘Walking Through the Rainbow’ நிகழ்ச்சி இரு தலைமுறைகளையும் ஒரே அரங்கில் இணைத்தது. யுவன் ஷங்கர் ராஜாவின் பின்னணி இசைகள், இசை மையக்கருக்கள் மற்றும் இதுவரை வெளியிடப்படாத இசைப் படைப்புகள் என அனைத்தும் இணைந்த ஒரு முழுமையான சிம்பொனி கச்சேரியாக இந்த நிகழ்ச்சி அமைந்தது.

மிகப்பெரிய இசை மரபின் வாரிசாக, இசைஞானி இளையராஜாவின் மகனாகப் பிறந்த யுவன் ஷங்கர் ராஜா, தனக்கென முற்றிலும் தனித்துவமான இசை மொழியை தேர்ந்தெடுத்து அதில் தொடர்ந்து வெற்றிகரமாக பயணித்து வருகிறார்.

எலக்ட்ரானிக் இசை, ஹிப்-ஹாப், R&B, புதுமையான குரல் பயன்பாடுகள் மற்றும் பல்வேறு இசை வகைகளின் கலவை என, யுவனின் இசைப் பயணம் எப்போதும் பரிசோதனையையும் புதுமையையும் முன்னிறுத்தியதாகவே இருந்துள்ளது.

பல தருணங்களில், ஒரு டிரண்ட் செட்டராகவே யுவன் திகழ்ந்து வருகிறார். தமிழ் சினிமாவின் ரீமிக்ஸ் கலாச்சாரத்திற்குப் புத்துயிர் அளித்ததில் இருந்து, பின்னணி இசையைத் திரைப்படத்தையும் தாண்டி ரசிகர்கள் தனியாகக் கேட்டு ரசிக்கும் அலையாக மாற்றியது வரை, திரை இசை உருவாக்கப்பட்டு, வெளியிடப்பட்டு, நுகரப்படும் விதத்தின் எல்லைகளை யுவன் தொடர்ந்து விரிவாக்கினார்.

‘வாக்கிங் த்ரூ தி ரெயின்போ’ அந்தத் தேடலின் அடுத்த கட்டமாகும். இம்முறை, திரைக்குப் பின்னால் இருந்த பின்னணி இசை மேடையின் மையப் பகுதிக்கு வந்து, ஒரு முழுமையான சிம்போனி அனுபவத்தின் இதயத் துடிப்பாக மாறியது.

யுவனின் பின்னணி இசைக் கோர்வைகள் ‘பேங்காங் 28 ஆர்கெஸ்ட்ரா’ (Bangkok 28 Orchestra) கலைஞர்களால் பயிற்சி செய்யப்பட்டு வாசிக்கப்பட்டு, அவரது சினிமா இசைக்கு ஒரு முழுமையான சர்வதேச சிம்போனி பரிமாணத்தைக் கொடுத்தது. ‘தி இந்தியன் கோரல் என்செம்பிள்’ (The Indian Choral Ensemble), யுவனின் சொந்த இசைக்குழு மற்றும் இந்தியத் தொழில்நுட்பக் கலைஞர்கள் இணைந்து இந்த இசை நிகழ்ச்சியை முழுமைப்படுத்தினர்.

இசை, ஒலி அமைப்பு, மேடை வடிவமைப்பு, ஒளிப்பதிவுத் தொழில்நுட்பம் மற்றும் காட்சி வழிக் கதைசொல்லல் ஆகியவற்றை ஒருங்கிணைத்து, ‘லூனர்ஸ் டேலண்ட் மேனேஜ்மென்ட்’ (Luners Talent Management) நிறுவனம், ‘நாய்ஸ் & கிரைன்ஸ்’ (Noise & Grains) நிறுவனத்துடன் இணைந்து இந்நிகழ்ச்சியை மிகம்மாண்டமாகத் தயாரித்திருந்தது.

யுவனின் குழுவைச் சேர்ந்த ஜஃப்ரூன் நிஜார் மற்றும் அபிஷேக் ரங்கநாதன் ஆகியோரின் ஆக்கப்பூர்வமான பங்களிப்போடு, தயாரிப்புக் குழுவினர் இணைந்து இந்த நிகழ்ச்சியை அற்புதமாகச் வடிவமைத்திருந்தனர்.

“ரசிகர்கள் தனது இசையை முற்றிலும் வேறுபட்ட கோணத்தில் அனுபவிக்க வேண்டும் என்பதே யுவன் சாரின் விருப்பமாக இருந்தது. அதை நிறைவேற்ற நாங்கள் உருவாக்கிய ஒவ்வொன்றும் ரசிகர்களை அந்த இசை உலகிற்குள் ஆழமாகக் அழைத்துச் செல்வதையே நோக்கமாகக் கொண்டிருந்தது,” என்று நிகழ்ச்சி இயக்குநர் கார்த்திக் ஸ்ரீனிவாஸ் கூறினார்.

“இது ஒரு தொடக்கம் மட்டுமே. மேலும் பல பின்னணி இசைக் கோர்வைகள், புதிய அத்தியாயங்கள் மற்றும் பிரமாண்டமான அனுபவங்களோடு இந்த இசைப் பயணம் அடுத்தடுத்த கட்டங்களுக்கு வளரும்,” என்று தயாரிப்பு இயக்குநர் மகாவீர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *