இயக்குனர் எஸ்.பாலாஜி இயக்கத்தில் சின்னத்திரை பிரபலம் சித்து சித், பிக் பாஸ் தர்ஷிகா மற்றும் ரித்விகா நடிப்பில் இந்த வாரம் வெளியாகி இருக்கும் கிரைம், சஸ்பென்ஸ் திரில்லர் படம் தான் ‘தி டார்க் ஹெவன்’. ஒரு கிராமத்து பின்னணியில் வித்தியாசமான கதைக்களத்துடன் வெளியாகியுள்ள இந்த படம் எப்படி இருக்கு? என்பதை இந்த விமர்சனத்தில் பார்க்கலாம்.
படத்தின் கதைப்படி, பல ஆண்டுகளுக்கு முன்பு டார்க் ஹெவன் என்ற புத்தகத்தில் நடப்பவை எல்லாம் அப்படியே எழுதப்பட்டிருக்கிறது. அப்படி எதிர்காலத்தை முன்னமே கணிக்கும் ஒரு விசித்திரமான புத்தகத்தை திறப்பவர்கள் உயிரையும் விடுகிறார்கள். அதே நேரம் மேக்கரை என்ற மலையோர கிராமத்தில் ஒவ்வொரு ஏழு ஆண்டுகளுக்கும் ஒருமுறை நடக்கும் விசித்திரமான மரணங்கள் நிகழ்கின்றன. அந்த மரணங்கள் நிகழ்வதாக சொல்லப்படும் ஜூன் மாதத்தில் போலீஸ் அதிகாரியான நாயகன் சித்து தன் மனைவி தர்ஷிகா மற்றும் கைக்குழந்தையுடன் அந்த ஊருக்கு மாற்றலாகி வருகிறார். வந்த இடத்தில் ஒரு சைக்கோ கொலையாளி அடுத்தடுத்து கொலைகளை செய்கிறான். டார்க் ஹெவன் புத்தகம், 7 ஆண்டு கிராமத்து சாபம் மற்றும் சைக்கோ கொலையாளி என மூன்று கோணங்களில் நகரும் இந்த கதையில் அந்த சாபம் உண்மையா? அந்த கொலையாளி யார்? என அடுத்தடுத்து ட்விஸ்டுகளுடன் சொல்லப்பட்டிருப்பதே மீதிக்கதை.
நாயகன் சித்து. சின்னத்திரையில் ரொம்பவே பிரபலம். சினிமாவில் முதல் படம் என்றாலும் அவரால் முடிந்த நல்ல உழைப்பை கொடுத்துள்ளார். முழுக்க சீரியஸ் படம் என்பதால் அவருடைய ஒரு பக்கத்தை மட்டுமே பார்க்க முடிந்தது. இன்னும் காமெடி, ஆக்ஷன், எமோஷன், ரொமான்ஸ் என அவருடைய பல பரிமாணங்களையும் காட்டும் படத்தில் நடித்து அவர் திறமையை நிச்சயம் நிரூபிப்பார் என்பதை நம்பலாம்.
பிக் பாஸ் தர்ஷிகா. நாயகியாக முதல் படம். பெரும்பாலும் நடிக்க வாய்ப்பு இல்லாத கதாபாத்திரம் தான் என்றாலும் அவருக்கு கிடைத்த வாய்ப்பில் நல்ல நடிப்பை வழங்கியுள்ளார். ரித்விகா வழக்கம் போல அந்த அழுத்தமான நடிப்பை தரும் நல்ல ஒரு கதாபாத்திரம். அசத்துகிறார். நிழல்கள் ரவி, வேல ராமமூர்த்தி, ஜெயக்குமார், அருள் டி சங்கர், சத்தியா, சாப்ளின் பாலு, கோபால் என மற்ற நடிகர்களும் அவரவர் பங்கை சிறப்பாகவே செய்திருக்கிறார்கள்.
பெரும்பாலும் இரவுக் காட்சிகளும், மழை காட்சிகளும் ஆக்கிரமிக்கும் இந்த படத்திற்கு மிகச்சிறந்த ஒளிப்பதிவை கொடுத்திருக்கிறார் மணிகண்டன். பல காட்சிகளில் இவர் ஒளிப்பதிவே படத்தை தாங்கி பிடிக்கிறது. படத்தொகுப்பாளர் ராஜா ஆறுமுகம் இப்படிப்பட்ட சிக்கலான ஒரு கதையமைப்பை கொண்ட படத்தை அழகாக தொகுத்திருக்கிறார். சக்தி பாலாஜி இசை படத்துக்கு தேவையான அந்த திகில் உணர்வை, சஸ்பென்ஸை அழகாக நமக்கு கடத்தியிருக்கிறது. அவரது பின்னணி இசை திரில்லர் காட்சிகளை மிகவும் விறுவிறுப்பாக மாற்றியுள்ளது.
இயக்குனர் பாலாஜி. இப்படி ஒரு நேர்மையான ஒரு முயற்சியை எடுத்ததற்கே பாராட்டுக்கள். ஒரு திரையரங்க அனுபவத்தை ரசிகர்களுக்கு நிச்சயம் தர வேண்டும் என்பதை மனதில் வைத்து பார்த்து பார்த்து உழைத்திருக்கிறார். ஒரு கிரைம் திரில்லர் விஷயத்தை மிக சாமர்த்தியமாக வேறு சில அம்சங்களை புகுத்தி ரசிகர்களை உட்கார வைக்கிறார். கிளைமாக்ஸ் ட்விஸ்ட் அனைவரையும் ஆச்சர்யப்படுத்தும். சில குறைகள் இருப்பினும், லாஜிக் மீறல்கள் இருப்பினும் அதை எல்லாம் தாண்டி ஒரு வித்தியாசமான திரில்லர் அனுபவத்தைத் தரக்கூடிய படமாக ‘தி டார்க் ஹெவன்’ அமைந்திருக்கிறது. திரில்லர் பட ரசிகர்கள் நிச்சயம் தியேட்டரில் சென்று ரசிக்கலாம்.

