R.S. Infotainment நிறுவனம் மிக பிரமாண்டமாக தயாரிக்க நடிகர் சூரி கடும் உழைப்பைக் கொட்டி நடித்த திரைப்படம் மண்டாடி. இயக்குனர் மதிமாறன் இயக்க, ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்திருந்த இந்த படம் கடந்த வாரம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது. 5 நாட்களில் கிட்டத்தட்ட 65+ கோடிகளை வசூலித்துள்ள இப்படம் இந்த வார இறுதியில் 100 கோடியை தாண்டி வசூல் செய்து சூரி திரை வாழ்க்கையில் மிகப்பெரிய மைல்கல் படமாக அமைய இருக்கிறது. இந்த நிலையில் இந்த படத்தின் வெற்றி விழா சென்னை டிரேட் செண்டரில் மிக பிரமாண்டமாக நடைபெற்றது. விழாவில் தனக்கு உதவியாக இருந்த படக்குழுவினர், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் தனக்கு வாழ்த்துத் தெரிவித்த திரைத்துறையினர் மற்றும் அரசியல் தலைவர்களுக்கு நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்து பேசினார் சூரி.
அப்போது நடிகர் சூரி பேசியதவாது, “இங்க இருக்கிறவங்க அத்தனை பேருக்கும், நம்ம மீடியா நண்பர்கள் மற்றும் மக்கள் அனைவருக்கும் என் டீம் சார்பாக நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த சினிமாவைத் தன்னுடைய படைப்பாக ஏற்று, உலகம் முழுவதும் இருக்கிற மக்கள் எல்லாரும் இதைத் தங்கள் சொந்தப் படைப்பாக நினைத்து பயங்கரமா கொண்டாடிட்டு வராங்க. இந்த மாதிரி ஒரு அற்புதமான படைப்பை உருவாக்கிய தயாரிப்பாளர் எல்ரெட் குமார் அண்ணனுக்கும், இதை மிக நேர்த்தியாகவும் உணர்வுபூர்வமாகவும் உருவாக்கிய இயக்குநர் மதிமாறன் அண்ணனுக்கும் ரொம்ப ரொம்ப நன்றி. “நீ ஜெயிச்சிட்ட மாறா”ன்னுதான் சொல்லணும், லவ் யூ அண்ணே!
இந்தக் கதை சொல்லி முடிச்ச உடனே நீங்க என்கிட்ட, “இந்த முத்துக்காளி கேரக்டர் அப்படித்தான் இருக்கணும். 20 வருஷம் தன் வாழ்க்கையில் எல்லாத்தையும் இழந்துட்டு, அந்த ஊருக்குள்ள திருப்பி வர்ற ஒருவன் மனநிலை எப்படி இருக்கும்?”னு தெளிவா சொன்னீங்க. அதை என் நண்பர் ராஜேஷ் பிரபுவுடனும் இயக்குநருடனும் சேர்ந்து யோசிச்சு யோசிச்சு ஒர்க் பண்ணோம். இன்னைக்கு மக்கள் எல்லாரும் “சூரியின் பெர்பார்மன்ஸ் சூப்பர்”னு சொல்றப்ப, அந்த முத்துக்காளி என் கண்ணுக்குத் தெரியுறார். ஒளிப்பதிவாளர் கதிர் சார் மற்றும் அவர் டீம் செஞ்ச உழைப்பு சாதாரணமானது இல்லை; ஒரு 20 படங்களுக்குச் சமம். அந்த கடலுக்குள்ள நாங்க பட்ட கஷ்டங்கள், எங்களை பத்திரமா பார்த்துக்கிட்ட விதம் எல்லாமே மறக்க முடியாத அனுபவம்.
அதே மாதிரி, ‘உசுரே’ பாடல் எழுதிய தங்கச்சிக்கும், அதிரடியா கலக்கிய கிருதியா பாப்பாவுக்கும், அசார் மாஸ்டருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். அசார் மாஸ்டர் என்னை ஒரு ரிமோட் மாதிரி வச்சு இயக்கினாரு, அப்ப சில இடங்களில் கஷ்டமா இருந்தாலும் இன்னைக்கு ரிசல்ட் பாக்குறப்ப அவ்வளவு சந்தோஷமா இருக்கு. எங்க ப்ரொடக்சன் மேனேஜர் மணிகண்ணன் அண்ணன், சொக்கலிங்க பங்காளி மற்றும் படத்துக்காக இரவு பகல் பாராமல் உழைத்த உதவி இயக்குநர்கள், காஸ்டியூம், வி.எஃப்.எக்ஸ் (VFX), சவுண்ட் டீம்னு எல்லாரும் பட்ட உழைப்புதான் இந்த வெற்றியின் ரகசியம்.
இந்தப் படத்துக்கு எனக்குக் கிடைத்த முதல் வாழ்த்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களிடமிருந்து வந்தது. விசாகப்பட்டினத்தில் இருந்து ஃபோன் பண்ணி படம் முழுவதையும் உட்கார்ந்து பார்த்துட்டு, “ரொம்ப ஃபென்டாஸ்டிக் சூரி, எப்படி இவ்வளவு கஷ்டப்பட்டு பண்ணீங்க?”னு பாராட்டிப் பேசினாரு. விடுதலை படத்தைத் தொடர்ந்து தலைவர் கிட்ட இருந்து எனக்குக் கிடைத்த இந்த இரண்டாவது வாழ்த்தை என் வாழ்நாளின் மிகப்பெரிய பெருமையா நினைக்கிறேன். அதைத் தொடர்ந்து சரத்குமார் சார், பார்த்திபன் சார், சியான் விக்ரம் சார், நெப்போலியன் சார், கார்த்தி, சிம்பு, எஸ்கே, விமல், துல்கர் சல்மான், நானி, ஆர்.ஜே. பாலாஜி, சிறுத்தை சிவா மற்றும் பல முன்னணி நண்பர்களும் போன் பண்ணி மனதாரப் பாராட்டினாங்க.
திரைத்துறையைத் தாண்டி அரசியல் தலைவர்களான சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பிரதர் மற்றும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்ணன் ஆகியோரும் ஃபோன் பண்ணி, படத்தின் ஒவ்வொரு காட்சியையும் சிலாகித்துப் பேசி வாழ்த்து சொன்னாங்க. அவங்க சொன்ன வார்த்தைகள் எல்லாமே அப்படியே பலிச்சிடுச்சு. என்னை நம்பி கடலிலும் காடுகளிலும் கூடவே நின்று என்னைக் காப்பாற்றிய என் அன்புத் தம்பிகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் என்னை ஒரு நடிகனாக ஏற்றுக்கொண்ட தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்” என்றார்.

