சண்டக்காரி – விமர்சனம்!

இயக்குனர் ஆர்.மாதேஷ் இயக்கத்தில் விமல் மற்றும் ஸ்ரேயா சரண் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சண்டக்காரி’. நீண்ட நாட்களாகவே எதிர்பார்க்கப்பட்ட இந்த படம் தற்போது திரைக்கு வந்துள்ளது. மலையாளத்தில் வெற்றி பெற்ற ‘மை பாஸ்’ என்ற படத்தை தழுவி தமிழ் ரீமேக்காக உருவாகியுள்ள இப்படம் கார்ப்பரேட் அலுவலகச் சூழல், காதல் மற்றும் நகைச்சுவை கலந்த ஒரு முழுமையான குடும்பப் பொழுதுபோக்குப் படமாகத் திரைக்கு வந்துள்ளது. படம் எப்படி இருக்கு? என்பதை இந்த விமர்சனத்தில் பார்க்கலாம்.

படத்தின் கதைப்படி, நாயகன் விமல் வெளிநாட்டில் வேலை பார்க்க வேண்டும் என்ற லட்சியத்துடன் வேலை தேட, அப்படி அவருக்கு ஒரு பெரிய ஐ.டி நிறுவனத்தில் வேலையும் கிடைக்கிறது. ஆனால் சாஃப்ட்வேர் எஞ்சினியராக இல்லாமல் ஸ்ரேயா சரணுக்கு அஸிஸ்டண்ட் வேலை தான் கிடைக்கிறது. ஸ்ரேயா ரொம்பவே டெரர். 53 பேர் வேலையே வேண்டாம் என தெறித்து ஓட வைத்தவர். ஆனால் விமல் அந்த வேலையை விட்டு விடக் கூடாதென ஸ்ரேயாவின் திமிர், ஆணவத்தை பொறுத்துக் கொண்டு சமாளித்து வேலை செய்கிறார். ஒரு கட்டத்தில் ஸ்ரேயாவுக்கு விசா பிரச்சினை ஏற்பட, அதனால் அவரின் பிரமோஷன் உட்பட பல விஷயங்கள் கைநழுவும் வாய்ப்பு வர, அந்த நேரத்தில் விமலை தற்காலிக திருமணம் செய்துகொள்ளும் சூழல் ஏற்படுகிறது. நாடக திருமணம் என்ன ஆனது? அவர்களுக்குள் காதல் உருவானதா? அவர்கள் பெற்றோர் யார்? அவர்கள் பின்னணி என்ன? என பல விஷயங்களை கலகலப்பாகவும் எமோஷனலாகவும் சொல்வதே மீதிக்கதை.

நாயகன் விமல். வழக்கமாக கிராமத்து படங்களிலேயே பார்த்து பழக்கப்பட்ட விமலை இந்த படத்தில் லண்டனில் வேலை செய்யும் தமிழராக பார்ப்பது கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது. ஏற்கனவே இஷ்டம் என்ற படத்தில் மாடர்ன் இளைஞராக நடித்த கதாபாத்திரம் ரசிகர்களால் வேறு விதமாக ரசிக்கப்படுகிறது. இந்த படத்திலும் அவரின் அப்பாவித்தனமான நடிப்பு நம்மை ரசிக்க வைக்கிறது. கிராமத்து இளைஞராகவும், லண்டன் கார்பரேட் ஊழியராகவும் விமல் தனது இயல்பான நடிப்பால் கவர்கிறார்.

படத்தை தோளில் தாங்குவது நாயகி ஸ்ரேயா சரண் தான். அவரது கிளாமரான, ஸ்டைலான, திமிரான நடிப்பில் நம்மை ஈர்க்கிறார். எமோஷனல் காட்சிகளில் நன்று. குத்துப்பாட்டில் கலக்கி எடுக்கிறார். கெத்தான கார்ப்பரேட் பாஸாக ஸ்ரேயா சரண் ஆளுமை செலுத்துகிறார். இரண்டாம் பாதியில் வரும் பிரபு வழக்கமான அப்பாவாக ஸ்கோர் செய்கிறார். முதல் பாதியில் சத்யன் விமல் உடன் இணைந்து காமெடியில் ரசிக்க வைக்கிறார். உமா பத்மநாபன், புன்னகைப் பூ கீதா, கே,ஆர்.விஜயா, கிரேன் மனோகர் போன்றோரும் அவரவர் பங்களிப்பை தந்திருக்கிறார்கள்.

ஆர்.பி. குருதேவின் ஒளிப்பதிவு வெளிநாடுகள், கிராமப் பகுதிகள் என இரண்டையுமே அழகாகவும் வண்ணமயமகவும் காட்டியுள்ளது. குறிப்பாக விமல் வீடு இருக்கும் கிராமம் சம்பந்தப்பட்ட காட்சிகள் கூடுதல் அழகு. அம்ரீஷ் இசையில் பாடல்கள் ரசிக்க வைக்கின்றன. குத்துப்பாட்டு தியேட்டரில் ரசிகர்களுக்கு தீனி. பின்னணி இசையும் ஒகே ரகம்.

இயக்குநர் ஆர்.மாதேஷ் ஒரு ரீமேக் கதையை தமிழ் ரசிகர்களுக்கு ஏற்ப ஒரு கமெர்சியல் எண்டர்டெயினராக தர முயற்சித்திருக்கிறார். முதல் பாதி முழுக்க காமெடியில் பயணிக்கும் திரைக்கதை இரண்டாம் பாதியில் எமோஷன்ஸ், குடும்ப உணர்வுகளை பேசுகிறது. திரைக்கதையில் சில இடங்களில் தொய்வு இருந்தாலும் விமல், ஸ்ரேயா காட்சிகள் நம்மை கலகலப்பாக்கி அதை மறக்கடிக்க செய்கின்றன. ரொம்பவே பழைய கதை என்றாலும் பெரிய எதிர்பார்ப்புகள் இன்றி தியேட்டரில் சென்று பார்த்தால் ஜாலியாக சிரிக்கக்கூடிய ஒரு எளிய, கலகலப்பான காதல் மற்றும் குடும்பத் திரைப்படமாக இந்த ‘சண்டக்காரி’ உங்களுக்கு அமையும். குடும்பத்துடன் ரசிக்கலாம்.

SK CINEMAS Rating: 3/5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *