கோல்ட் கால் – விமர்சனம்!

கோல்ட் கால் என்றாலே என்ன அது? தலைப்பே வித்தியாசமாக இருக்கே? என போஸ்டரை பார்க்கும்போதே ஒரு ஆர்வம் எழுகிறது. அறிமுக இயக்குனர் தம்பிதுரை இயக்கத்தில் சித்து மூலமணி, ஸ்ரீ வைஷ்ணவ், கிருஷ்ணா விஜய், சந்தோஷ் செந்தில் மற்றும் நிஷா ஹெக்டே உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படமே ‘கோல்ட் கால்’. தலைப்பைக் கேட்ட உடனே ஏதோ நவீன தொழில்நுட்ப உலகத்தையும், குற்றச் சம்பவங்களையும் மையமாக வைத்து உருவாகியுள்ள படமோ என்ற எண்ணம் எழுந்தது. ஆனால் நல்ல ஜாலியான ஒரு கமெர்சியல் படமாக வந்திருக்கும் இந்த படம் எப்படி இருக்கு? என்பதை இந்த விமர்சனத்தில் பார்க்கலாம்.

படத்தின் கதைப்படி, பெங்களூருவில் இருக்கும் கார்ப்பரேட் உலகத்தை அடிப்படையாகக் கொண்டு கதை நகர்கிறது. வேலை தேடி அலையும் சித்து மூலமணி, ஸ்ரீ வைஷ்ணவ், கிருஷ்ணா விஜய், சந்தோஷ் செந்தில் என்ற நான்கு இளைஞர்களும் ஒரு நிறுவனத்தில் இண்டர்வியூயில் தேர்வாகி வேலைக்கு சேர்கிறார்கள். அவர்களின் வேலை MRE எனப்படும் மார்க்கெட்டிங் ரீசர்ச் எக்ஸிகியூட்டிவ். சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் சேல்ஸ் மேன். அவர்களுக்கு என ஒரு டார்கெட் இருக்க அதை நோக்கி ஓட முடியாமல் சந்தோஷ் செந்திலை தவிர மற்ற மூவரும் கொஞ்சம் சுமாரான உழைப்பையே தருகின்றனர். 6 மாதங்களில் அவர்களின் வேலை நிரந்தரம் செய்யப்படும் என சொல்ல, அந்த பணி நிரந்தரத்தை பெற்றார்களா? இதற்கிடையில் ஒரு சிக்கலில் மாட்டிக் கொள்ள அதில் இருந்து எப்படி தப்பினார்கள்? வேலையின் அருமையை உணர்ந்தார்களா? அதில் இருந்து அவர்கள் கற்ற வாழ்க்கைப் பாடம் என்ன? என்பதே மீதிக்கதை.

நடிகர்களின் தேர்வு கதைக்குத் தகுந்தாற்போல் பொருத்தமாக அமைந்துள்ளது. 4 இளைஞர்களுமே உண்மையான நண்பர்களை அவர்களுக்கே தெரியாமல் கேமரா வைத்து படம் பிடித்ததை போன்ற இயல்பான, தத்ரூபமான நடிப்பு. சித்து மூலமணி, ஸ்ரீ வைஷ்ணவ், கிருஷ்ணா விஜய், சந்தோஷ் செந்தில் ஆகிய நாலவருமே தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். ஒருவர் தெலுங்கு, ஒருவர் மலையாளி, ஒருவர் கன்னடம், ஒருவர் தமிழ் என பஞ்ச தந்திரம் பார்த்த உணர்வை ஆங்காங்கே கொடுக்கிறார்கள்.

இவர்களுடன் நாயகியாக நிஷா ஹெக்டே நல்ல ஒரு நடிப்பு. கீர்த்தனா, ஸ்ரீகாந்த் மற்றும் மற்ற நடிகர்களும் தங்களது பங்கைச் சிறப்பாகச் செய்து கதைக்குத் தேவையான பலத்தைக் கூட்டியுள்ளனர். கதாபாத்திரங்களின் இயல்பான நடிப்பு பார்வையாளர்களைக் கதையோடு ஒன்றிப் பயணிக்க வைக்கிறது.

இப்படத்தின் ஒளிப்பதிவும் பின்னணி இசையும் படத்திற்கு மிகப்பெரிய பலமாக உள்ளன. சரவணன் நடராஜன் ஒளிப்பதிவில் காட்சிகள கலர்ஃபுல்லாக ரசிக்கும்படி இருக்கிறது. பிரணவ் கிரிதர்ன் இசையில் பாடல்கள் ஒகே ரகம். பின்னணி இசையும் காட்சிக்கு ஏற்ப கச்சிதம். முக்கியமான சண்டைக்காட்சி வடிவமைப்பு நேர்த்தி.

இயக்குநர் தம்பிதுரை இதுவரை கேள்விப்பட்டிராத ஒரு வார்த்தையை தலைப்பாக வைத்து தலைப்பிலேயே நம் ஆர்வத்தை தூண்டியிருக்கிறார். அத்துடன் ஒரு புதிய களத்தைத் தேர்ந்தெடுத்து அதைச் சுவாரஸ்யமாகச் சொல்ல முயன்றுள்ளார். அதை காமெடி, காதல், நட்பு என ரசிக்கும்படியும் மிக அழகாக சொல்லியிருக்கிறார். நான்கு நண்பர்கள் அடிக்கும் லூட்டி, உயர் அதிகாரியிடம் செய்யும் சேட்டை, அலுவலக பெண்களிடன் காதல், நட்பு என படம் முழுக்க ரசிக்க வைக்கிறார்கள். ஜாலியாக நண்பர்களுடன் சென்று தாராளமாக தியேட்டரில் ரசிக்கக்கூடிய ஒரு நல்ல படம் இந்த கோல்ட் கால்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *