‘ராமாயணம்’ திரைப்படத்தில் இருந்து முதல் பாடலான ‘ஜெய் ஜெய் ராம்’ பாடல் வெளியாகியிருப்பதன் மூலம் அதன் இசைப்பயணம் தொடங்கியுள்ளது. ஸ்ரீ ராமரைப் போற்றும் ஆன்மீக அழைப்பாக உருவாகியுள்ள ‘ஜெய் ஜெய் ராம்’, ஆரத்தியின் ஆன்மீகத் தன்மையையும், திரையிசையின் அழகையும் ஒன்றிணைக்கிறது. ஸ்ரீ ராமரின் கருணை, பாதுகாப்பு மற்றும் தர்மத்தின் மீதான அர்ப்பணிப்பை பாடல் வரிகள் பிரதிபலிக்கின்றன. பாடல் முழுவதும் மீண்டும் மீண்டும் ஒலிக்கும் ஸ்ரீ ராமரின் திருநாமம் பாடலில் பக்தி மணம் பரப்புகிறது.
இயக்குநரும் தயாரிப்பாளருமான நமித் மல்ஹோத்ரா பகிர்ந்து கொண்டதாவது, “தலைமுறை தலைமுறையாக, வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் நம்மை வழிநடத்தும் ஸ்ரீ ராமர்தான் ‘ராமாயணம்’ கதையின் மையம். இருள் சூழும் தருணங்களிலும்,குழப்பம் மற்றும் நிச்சயமற்ற நிலைகளில் அவரது பாதையைப் பின்பற்றுகிறோம். மகிழ்ச்சியான தருணங்களில் நன்றியுடன் அவரை நினைவுகூருகிறோம். ஸ்ரீ ராமருடன் நாம் கொண்டிருக்கும் வலுவான பிணைப்பில் இருந்து உருவானதுதான் ‘ஜெய் ஜெய் ராம்’ பாடல்.‘ராமாயணம்’ மிகப்பெரிய பொருட்செலவில் பிரம்மாண்டமாக உரு்ாக்கப்பட்டிருந்தாலும், அதன் உண்மையான அடித்தளம் அதன் உணர்விலும், மதிப்புகளிலும், பக்தியிலும்தான் உள்ளது. முதல் பாடலான ‘ஜெய் ஜெய் ராம்’ பக்தியை பிரதிபலிக்க வேண்டும் என்று விரும்பினோம். நாம் வழிபடும் ஒருவராக மட்டுமல்லாமல், நம்முள் இருக்கும் பாதுகாவலர், வழிகாட்டி மற்றும் வலிமையின் ஆதாரமாக ஸ்ரீ ராமரைக் கொண்டாட வேண்டும் என்பதே எங்களது நோக்கம்” என்றார்.
ஏ.ஆர். ரஹ்மான் பகிர்ந்து கொண்டதாவது, “ஸ்ரீ ராமரின் திருநாமத்தை எளிமையாகவும் வலிமையாகவும் மீண்டும் மீண்டும் உச்சரிப்பதுதான் ‘ஜெய் ஜெய் ராம்’ பாடல். பக்தி மாறாமல் கேட்பவர்களுக்கு என்றும் மனதில் ஒலிக்கும் பிரார்த்தனையாகவும் அதே சமயம் அந்த இசை ஒரு திரைப்பாடலாகவும் கொடுக்க வேண்டும் என்பதே எங்களது நோக்கம். தீபாலி சஹாய் மற்றும் ராகவ் கௌஷிக் ஆகியோர் ராகேந்து மௌலியின் வரிகளுக்கு உயிர் கொடுத்துள்ளனர். அதே நேரத்தில், பாடலின் பக்தி உணர்விலிருந்து அவர்கள் விலகவில்லை. இந்தப் பாடல் ரசிகர்களுக்கு அமைதியையும் ஆன்மீக உணர்வையும் தரும் என்று நம்புகிறேன்” என்றார்.
நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘ராமாயணம்’ திரைப்படத்தில், ஸ்ரீ ராமராக ரன்பீர் கபூர், சீதையாக சாய் பல்லவி, ராவணனாக யஷ், அனுமனாக சன்னி தியோல் மற்றும் லட்சுமணனாக ரவி துபே ஆகியோர் நடித்துள்ளனர். நமித் மல்ஹோத்ராவின் பிரைம் ஃபோகஸ் ஸ்டுடியோஸ், எட்டு முறை அகாடமி விருது வென்ற DNEG நிறுவனத்துடன் இணைந்து, யஷின் மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் நிறுவனத்துடன் கூட்டுத் தயாரிப்பில் இப்படம் உருவாகியுள்ளது. இந்தியாவைத் தவிர உலகம் முழுவதும் சோனி பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை விநியோகம் செய்கிறது.
இந்த வருடம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ‘ராமாயணம் – பாகம் 1’ திரையரங்குகளில் வெளியாகிறது.

